Sri Lanka

ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்ட இலங்கை – உலக அரங்கில் தொடரும் அவமானம்


மாயமான்

நந்தசேனர் நாட்டில் இன்னும் மழை பெய்வதாகவில்லை. நாட்டில் மும்மாரி மொழியும், பாலும் தேனும் வழிந்தோடும் என முடிசூடும்போது மகாஜனங்களுக்கு அளித்த வாக்குறுதி பிசு பிசுத்துப்போகுமோ என்று ஐயுறுமளவுக்கு காரியங்கள் நடக்கின்றன.

ஐ.நா.சபையின் இலங்கைக்கான தூதுவர் மோஹன் பீரீஸ் தன்னையும், தனது நாட்டையும் நகைப்புக்குள்ளாக்கியிருக்கிறார். வியாழன்று நியூ யோர்க்கில் நடைபெற்ற ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சின்போது “ஜெனிவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் அழித்தொழிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் கருவியாகச் செயற்படுகிறது” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மோஹன் பீரீஸ் இலங்கையின் ஆட்சியாளருக்கு மிக நெருக்கமான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. இலங்கையின் நீதித்துறைக்கே அவமானத்தைக் கொண்டுவந்த அவர் இப்போது உலக அரங்கிலும் இலங்கைக்கும் அவமானத்தைப் பெற்றுத்தருவதில் ஈடுபட்டு வருகின்றார்.

நீதியையும், நல்லிணக்கத்தையும் இலங்கை கரிசனையோடு கையாண்டிருந்தால் வெளியார் தலையீடு பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும்

ஐ.நா. செயலாளர் நாயகம்


ஐ.நா. பொதுச்சபை வியாழன்று (28) கூடியபோது செயலாளர் நாயகம் அன்ரோனியோ குத்தெரெஸ் தனது வருடாந்த அறிக்கையை வாசித்தார். அதில் இலங்கை பற்றிய குறிப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லையெனினும், அக்கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மோஹன் பீரீஸ் மனித உரிமைகள் ஆணையகத்தின் மீதான தனது தாக்குதலை மேற்கொண்டார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவை அடாத்தாக வெளியே அனுப்பிவிட்டுப் பின்கதவால் நுழைந்த பீரிஸ், ராஜபக்சக்களுக்கு மிக வேண்டியவர் மட்டுமல்ல அவர்களது எடுபிடியாகவும் தொழிற்பட்டு வருபவர். அவர் தனது எஜமான்களை மகிழ்விப்பதற்காக ஐ.நா.சபையின் இயங்கு பொறிமுறைகளைப் புரிந்துகொள்ளாது மனித உரிமைகள் ஆணையாளர் மீது மேற்கொண்ட இத் தாக்குதல்கள் செயலாளர் நாயகத்தை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருந்தன. “நீதியையும், நல்லிணக்கத்தையும் இலங்கை கரிசனையோடு கையாண்டிருந்தால் வெளியார் தலையீடு பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும்” எனக் கலந்துரையாடலின்போது, செயலாளர் நாயகம் மோஹன் பீரிசுக்குச் சொன்னதாக அறியப்படுகிறது.

“இன்றைய உலகத்தில், மோதல், முரண்பாடுகளுக்குப் பின்னான சந்தர்ப்பங்களில், குறிப்பாக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில், மனித உரிமைகள், சர்வதேச சட்டங்கள் உட்படப் பல பரிமாணங்களில் தலையீடுகள் இருந்து வருகின்றன. ஒரு நாடு தனது காயங்களை ஆற்றவேண்டியுள்ளது. இதற்கு உண்மை அவசியமானது. உண்மை இல்லாது நல்லிணக்கம் ஏற்பட முடியாது. பொறுப்புக்கூறலும் இவ்விடயத்தில் ஒரு முக்கியமான கருவி. இலங்கை அரசும், அதன் மக்களும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய இவ்விரண்டு விடயங்களையும் மிகவும் முக்கியமானவையாகக் கணித்துச் செயற்படுவதன் மூலம் வெளி ஸ்தாபனங்களின் தலையீட்டைத் தவிர்ப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்” என ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

போத்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்ரோனியோ குத்தெரெஸ் ஐ.நா. செயலாளர் நாயகமாகப் பதவியேற்பதற்கு முன்னர் மனித உரிமைகள் சபை ஆணையாளராக இருந்தவர். 1974 வரை, போர்த்துக்கல் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்த செயற்பாட்டாளராவார்.மோஹன் பீரீஸ் முதன்மை நீதிபதியாக இருந்தபோது ‘சித்திரவதைக்கான ஐ.நா. குழு’ விற்கு அளித்த அறிக்கையில் காணாமற்போன ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட “வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக வாழ்கிறார்” எனத் தெரிவித்திருந்தார். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கணேசன் நிர்மலரூபன் என்னும் ஊடகவியலாளர் கொல்லப்பட்டபோது அதற்கு எதிராக அவரது பெற்றோர் பதிவுசெய்த அடிப்படை உரிமைகள் வழக்கை விசாரித்த மோஹன் பீரீஸ் “பயங்கரவாதிகளுக்கு மனித உரிமைப் பாதுகாப்பு கிடையாது” எனப் பிரகடனம் செய்தவர்.

முந்தைய அரசாங்கங்கள், மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் போன்ற விடயங்களை நியூ யோர்க் சபைக்கு உள்ளே கொண்டுபோகாமல் தவிர்த்து வந்திருந்தார்கள். ஆனால் மோஹன் பீரீஸ் எந்தவித தேவைகளுமில்லாது தனது முட்டள்தனத்தினால் இவ்விடயங்களை நியூ யோர்க் அரங்கிற்குக் கொண்டு சென்றிருக்கிறார். இதனால் தான் இலங்கையை விமர்சிக்கும் செயலாளர் நாயகத்தின் காட்டமான உரை அங்கு இடம்பெறவேண்டி ஏற்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை பற்றிய விடயம் விவாதிக்கப்படும்போது பொதுச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் தமது கருத்துக்களைக்கூற அவகாசம் வழங்கப்படும்.

அத்தோடு, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கும் தெரிவைக் கருத்தில் கொள்ளும்படி ஆணையாளர் மிஷெல் பக்கெலெ மனைத உரிமைகள் சபை அங்கத்தவ நாடுகளைக் கேட்டுள்ளார். இதைப் பரிந்துரைக்கும் அதிகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு மட்டுமே உண்டு. இக் காரணங்களுக்காக, இலங்கை பற்றிய விடயம் ஜெனிவாவிலிருந்து நியூ யோர்க் அரங்கிற்கு நகர்த்தப்படவேண்டுமெனத் தமிழர் தரப்பு கேட்டு வருகிறது. மோஹன் பீரீஸ் அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.