ஐ.நா. சபையில் ‘ஐக்கிய கைலாசா” நாட்டின் பிரதிநிதி!

நித்தியானந்தா அச்சுறுத்தப்படுகிறாராம்.

இந்து மதத்தின் பிரதமகுருவாகிய சுவாமி நித்தியானந்தா துபுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டுமெனவும் கேட்டு ‘ஐக்கிய கைலாசா’ வின் (United State of Kailasa) பிரதிநிதி விஜயபிரியா நியூ யோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. சபையின் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல இடங்களில் ஆச்சிரமங்களை நடத்திக்கொண்டிருந்த நித்தியானந்தா மீது நவம்பர் 2019 இல் குஜராத் காவல்துறையினால் பதியப்பட்ட குழந்தைக் கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு காரணமாக அவர் நாட்டை விட்டுத் தப்பியோடி தனது சொந்த நாடான ஐக்கிய கைலாசாவை நிர்மாணித்திருந்தார். கைலாசா நாட்டின் மன்னராக அவர் தன்னைப் பிரகடனப்படுத்தியிருந்தாலும் இந் நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கிறதா என்பதை அறிய முடியவில்லை.

பெப்ரவரி 22 இல் நடைபெற்ற ஐ.நா. சபையின் 19 வது பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் கூட்டத்தில் கைலாசா நாட்டின் பிரதிதியாக விஜயபிரியா நித்தியானந்தா என்பவர் சமூகமளித்து நித்தியானந்தாவுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டுமெனக் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார். ஐ.நா. சபையினால் அதன் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் கைலாசா நாட்டின் நிரந்தர பிரதிநிதி என்ற தோரணையில் விஜயபிரியா பேசுவது பதியப்பட்டுள்ளது. இப்பதிவிலே நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கும் (Sustainable Deveolpment Goals) இந்து மதத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகள் பற்றிப் பேசிய விஜயப்பிரியா பின்னர் நித்தியானந்தாவுக்கு வுக்கு இந்தியாவினால் விடுக்கப்படும் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்புத் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

ஐ.நா.பிரதிநிதிகளுடன் விஜயபிரியா

இந்து மதத்தின் பிரதம குருவாகிய சுவாமி நித்தியானந்தா தற்போது சுதேசிய விவசாய குலங்களின் ஆதி சைவ மரபு உட்பட 10,000 மரபுகளை மீளக் கட்டமைத்து வருகிறார் எனவும் காலத்தை வென்ற இந்து மரபுத் தத்துவங்கள் தற்போதைய நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணக்கம் காண்கிறது எனவும் இக்காணொளியில் குறிப்பிடுகிறார். உலகளாவிய ரீதியில் 2 மில்லியன் குடிமக்களைக் கொண்டது ஐக்கிய கைலாசா நாடு எனவும் 150 உலக நாடுகளில் அது தூதுவராலய்ங்களையும் அரச சார்பற்ற அமைப்புக்களையும் கொண்டுள்ளது எனவும் இக்காணொளியில் அவர் தெரிவிக்கிறார்.

நித்தியானந்தா மீது இண்டர்போலினால் விடுக்கப்பட்ட ‘நீல அறிக்கை’ தற்போது மீளப்பெறப்பட்டுவிட்டதாக குஜராத் காவல்துறை தெரிவிக்கிறது.

கைலாசா நாட்டிற்குப் போக விரும்புபவர்கள் அவுஸ்திரேலியா சென்றால் அங்கிருந்து கைலாசா நாட்டின் விசேட விமானம் மூலம் மூன்று நாட்கள் கடவு அனுமதியுடன் சென்று வரலாம். கைலாசா நாட்டின் நாணயமாக கைலாஷியன் டாலர் நடைமுறையிலுள்ளது எனவும் அதற்கான றிசேர்வ் வங்கிக் கணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அந்நாட்டின் இணையத்தளம் குறிப்பிடுகிறது. இதே வேளை அதிபர் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்களில் உண்மை இல்லை எனக்கூறும் காணொளியொன்றையும் ஐ.நா.பிரதிநிதி விஜயபிரியா வெளியிட்டுள்ளார்.

Video Credit: DT Next