NewsSri Lanka

ஐ.நா. என்ற கட்டமைப்பொன்றை இலங்கை அனுசரிக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம்


ஜி.எஸ்.பி + சலுகை தொடர்பாக ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு விரைவில் இலங்கை செல்கிறது

“கடந்தகால நிகழ்வுகளுக்காகப் பரிகாரம் தேடுவதன் மூலம், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் ஆகியவிடயங்களில் ஒத்துழைப்பு வழங்காமை, ஐ.நா. என்றொரு கட்டமைப்பை இலங்கை இனிமேல் அநுசரித்துப் போவதாக இல்லை என்பதையே காட்டுகிறது” என ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 வது அமர்வின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

சபையின் தீமானம் 46/1 இற்கிணங்க, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்பதில் தாம் உறுதியாக உள்ளதாகவும், காணாமற் போனோர் அலுவலகம், நிவாரணங்களுக்கான அலுவலகம் ஆகியன சுதந்திரத்துடன் இயங்ககுவது அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படவேண்டுமெனவும் ஒந்றியப் பிரதிநிதிகள் குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதே வேளை “ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்றுவரும் அரசியல் நியமனங்கள் இப்படியான நிறுவனங்களின் சுதந்திரமான இயக்கத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றன. லசந்தா விக்கிரமதுங்கவின் கொலையின்போது எடுக்கப்பட்ட தடயங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஜயந்தா விக்கிரமரட்ண, மற்றும் மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர்களெனக் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலைசெய்வதில் முன்னின்றுழைத்த, ஆணையத் தலைவர் உபாலி அபயவர்த்தன ஆகியோரைக் காணாமற் போனோர் அலுவலகதிற்கு நியமனம் செய்தமை போன்ற விடயங்கள், நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க அநுமதிக்கப்படாமையின் வெளிப்பாடுகள் எனவும் அரசின் இப்படியான நடவடிக்கைகள் அச்சம் தருவனவாக உள்ளன” எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் எடுத்துக்காட்டியுள்ளது.

இலங்கையின் மிக மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டம் திருத்தப்படுவதன் மூலம், சிவில் சமூக அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒந்றியத்தின் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகளின் காவலாளர்கள், ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆகியவர்களைக் கண்காணிப்பதும், சட்ட ரீதியாக மிரட்டுவதும் தொடர்கின்றது மட்டுமல்லாது அது தற்போது மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் மதத் தலைவர்கள் ஆகியோர் மீதும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது என இக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி, பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றில் முன்னேற்றம் காணப்படாவிட்டால் ஜி.எஸ்.பி.+ வரிச்சலுகையைத் தொடர்வது பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டிவரும் என ஐரோப்பிய ஒன்றியம், இவ்வருட ஆரம்பத்தில் எச்சரித்திருந்தது. நீதி பரிபாலனம், அதிகாரப் பகிர்வு, மனித உரிமைகள் விடயத்தில் உறுதியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுமென்பதை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.இதே வேளை, ஏற்கெனவே அறிவித்தபடி, இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக உண்மையைக் கண்டறியும் ஐரோப்பிய ஒந்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கை செல்லவுள்ளதாகவும் இதையொட்டி பயங்கரவாதத் தடைசட்டத்தைச் சடுதியாக மீளாய்வதற்கென தாம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே அறிவித்துல்ளதாகவும் கூறப்படுகிறது.

மனித உரிமைகள் சபையின் 48வது அமர்வுகளின்போது ஆணையாளர் பக்கெலெயின் அறிக்கை தொடர்பாக, “இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டிலேயே போதுமான வளங்களுண்டு, வெளிநாட்டார் தலையீடு அவசியமில்லை ” என கொலம்பகே உள்நாட்டு ஊடகங்களுக்குத் தொடர்ந்தும் கூறிவருகிறார்.