Spread the love
செய்தி அலசல் | சிவதாசன்

ஜனவரி 12, 2020

ஐ.தே.கட்சியை உடைப்பதில் ராஜபக்சக்கள் வெற்றி? 1

ஐ.தே.கட்சிக்குள் நடைபெறும் இழுபறி முடிவுக்கு வராத நிலையில், சஜித் பிரேமாதச தனியாகச் சென்று புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தேசிய அமைப்பாளராக சஜின் வாஸ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுளார் எனவும் அறியப்படுகிறது.

சஜின் வாஸ் குணவர்த்தன, ராஜபக்ச குடும்பத்திற்கு மிக நெருங்கியவர். ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையாளராக இருந்தவர். பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தன. 2015 நல்லாட்சி பதவிக்கு வந்ததும் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியிருந்தார்.

ஜனாதிபதி தேர்தலின்போது பிரேமதாசவுக்கு ஆதரவாக சஜின் வாஸ் செயற்பட்டார். ரணில் விக்கிரமசிங்க ஒரு முடிவை எடுப்பதில் காட்டிய தாமதமும், அசட்டையும் ராஜபக்சக்கள் பிரேமாதாசவை அன்னியப்படுத்துவதற்கு உதவி செய்தன. இதற்கு முன்னாள் ஜனாதிபதி சிறீசேனவும் உதவியாயிருந்தார். இருவருமே மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் காணப்பட்டதாக அப்போது செய்திகள் கசிந்திருந்தன. இதன் பின்னணியில் ‘ஒருங்கிணைப்பாளராக’ இருந்தவர் சஜின் வாஸ் குணவர்த்தன என்பது பரவலாகப் பேசப்பட்டது.

அதே வேளை, சுஜீவ சேனசிங்க கொழும்பு மாவட்டத்துக்கும், ஹரின் பெர்னாண்டோ கம்பஹா மாவட்டத்துக்கும், அஜித் பெரேரா களுத்துற மாவட்டத்துக்கும் பிரேமதாசவின் புதிய கட்சியின் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இவர்கள் ஒவ்வொருவரும் தமது மாவட்டங்களில் தலா மூன்று இலட்சம் வாக்குகளைப் பெற்றுத் தருவதாக வாக்களித்திருப்பதாகவும் அறியப்படுகிறது.

இவ் விடயங்கள் உண்மையாகில், ஐ.தே.கட்சியின் எதிர்காலம் மட்டுமல்ல நாட்டின் எதிர்காலம் கூட மிகவும் இருண்ட காலத்திற்குள் தள்ளப்படும் அச்சம் உருவாகியிருக்கிறது. சிறுபான்மைக் கட்சிகளும் வாக்குகளப் பிரிப்பதில் தமக்குள் மோதிக்கொள்வது ராஜபக்சக்களுக்கு மிகவும் அனுகூலமாகவிருக்கும்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு கட்சிக்குள்ளும் வெளியும் நிறைய எதிரிகளுண்டு. மைத்திரிபால சிறீசேன தன் சுய தேவைகளுக்காக இதைச் சாதகமாகப் பாவித்தது போல ராஜபக்சக்கள் இதைத் தமது கட்சியின் தேவைகளுக்காகச் சாதகமாகப் பாவித்திருந்தனர். அதி பழைமை வாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் (Grand Old Party (GOP)) ஆரம்பகர்த்தாவின் பேரனான வசந்த சேனநாயக்கா போன்றோர் கூட கட்சியை விட்டு விலக்கப்பட்டதால் பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளார்.

ராஜபக்சக்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து நிறைவேற்று அதிகாரங்களை மீண்டும் ஜனாதிபதியிடம் ஒப்புவிப்பதே தலையாய நோக்கம். அதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோதாபய பதவியேற்றதுமே அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். ஐ.தே.க. அங்கத்தவர்கள் பலர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதும், ஊழலில் சம்பந்தப்பட்ட ஐ.தே.கட்சியினர் அச்சத்தில் இருப்பதும், தெரிந்த விடயங்களையும் வெளியே தெரிவிக்க முடியாது அச்சத்தில் உறைந்திருக்கும் ஊடகங்களும், புத்திமான்களின் நிலைமைகளும், நெளிந்து வளையும் நீதித்துறையும், ராஜபக்சக்களின் திட்டத்துக்குத் துணைபோகும் காரியங்களாகும். நாட்டின் பாதுகாப்பு, சிங்கள பெளத்த தேசீய உணர்வின் மாயையில் இருக்கும் மக்களும் அதைக் கொதிநிலையில் வைத்திருக்க உதவும் பெளத்த சிங்கள தீவிரவாதிகளும் ராஜபக்சக்களின் திட்டங்கள் நிறைவேற உதவி செய்கின்றனர்.

Related:  கருணா விவகாரம் | எப்படிச் சுழற்றப் போகிறார்கள் ராஜபக்சக்கள்?

இன் நிலையில், மிதவாதிகள் எனத் தமிழர் தரப்பு நம்பியிருந்த சஜித் பிரேமதாச மைத்திரிபால சிறீசேநாவாக உருமாற மாட்டாரென்றோ, சரத் பொன்சேகா இன்னுமொரு ராஜபக்சவாக மாற மாட்டாரென்றோ எந்த உத்தரவாதமுமில்லை.

வானத்தை அண்ணாந்து பார்ப்பதைத் தவிர தமிழருக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை.

ஏழு மில்லியன் மக்கள் முட்டாள்களில்லை என்பதை அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்

Print Friendly, PDF & Email