ஐ.தே.கட்சியின் பாராளுமன்றக்குழுவின் மூன்றிலிரண்டு பகுதி சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கிறது – சமரவீர
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் மூன்றில் இரண்டு பகுதியினர் சஜித் பிரேமதாசாவையே ஆதரிக்கிறார்கள். எனவே அவரையே கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவித்தார்.
இன்று காலை ஊடகவியலாளர்களுடன் பேசும்போது அவர், ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்குக் கட்சியிலிருந்து பலரும் முன்வந்திருந்தாலும் வீடமைப்பு அமச்சர் பிரேமதாசவுக்கே அதிக ஆதரவு இருக்கிறது என்று கூறினார்.
” மதிப்புக்குரிய தயா கமகே உட்பட நான்கு அல்லது ஐந்து பேர் வேட்பாளராக வருவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பிரேமதாசவே பிரதானமாக முந்தள்ளப் படவேண்டும், காரணம் மூன்றில் இரண்டு பகுதியினர் அவரை ஏற்கெனவே ஆதரிக்கின்றனர்“ என்றவர் மேலும் தெரிவித்தார்.
யார் கட்சியின் வேட்பாளராக வரவேண்டுமென்பது குறித்து கட்சிக்குள் பலவிதமான விவாதங்கள் இடம்பெறுகின்றன தான். அதில் தவறொன்றும் இல்லை. அது கட்சியினதும், நாட்டினதும் ஜனநாயக பாரம்பரியத்தையே தான் எடுத்துக் காட்டுகிறது. எதேச்சாதிகார நாடுகளில் மட்டுமே இப்படியான ஜனநாயக மரபைப் பின்பற்றாமலேயே கட்சியின் தலைவர்களும் வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என அவர் கூறினார்
“ஐக்கிய இராச்சியத்தில் பிரதமர் தெரேசா மே க்கு எதிராகச் சில உறுப்பினர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக மாறியதால் அவர் பிரதமரானார். அதனால் அரசாங்கம் ஆட்டம் காணவில்லை. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியில் 15 வேட்பாளர்கள் வாரா வாரம் விவாதிக்கிறார்கள். அது அமெரிக்காவை உலுப்பிவிட்டதா?” என்று கேட்டார் அவர்.
“இன்று, சிறீலங்கா ஒரு ஏழு-நட்சத்திர ஜனநாயக நாடு. அதுவே எமது பலம். இந்நாட்டில் பூரண சுதந்திரமும் ஜனநாயகமுமுண்டு. நாங்கள் ஊடகங்களைக் கண்டு ஓடி ஒளிவதில்லை. எங்கள் நிகழ்வுகளில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது எனத் தடுப்பதில்லை. நாங்கள் ஒரு நவீன, ஜனநாயகக் கட்சி. 21ம் நூற்றாண்டுக்கேற்ற ஒரு நவீன ஜனநாயக நாட்டை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.” என்றவர் தொடர்ந்து பேசினார்.
“இதை ஒரு பலவீனமாகப் பார்ப்பவர்களைப் பார்த்து நான் அனுதாபப்படுகிறேன்“ என்று கூறி அவர் தனது பேச்சை முடித்தார்.