ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்ப மறுப்பு
கொழும்பு ஜூன் 18, 2020: ஆகஸ்ட் 5, இலங்கையில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களைக் கண்காணிக்க தான் கண்காணிப்பாளர்களை அனுப்பப்போவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவித்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் இது குறித்து முடிவை எழுத்து மூலம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிவரும் கோவிட் தொற்றைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியம் இம் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கு மாற்றீடாக, தேர்தல் நடைமுறைகளை ஆராய, இரண்டு அல்லது மூன்றுபேர் கொண்ட, தேர்தல் நிபுணர்கள் குழுவொன்றைத் தாம் அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளது. இக் குழு பகிரங்கமாக இயங்க மாட்டாது எனவும், அவர்களைத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் என அழைக்க முடியாதெனவும் ஐ.ஒ. மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, ஐரோப்பிய ஒன்றியம் 60 பேர் வரையிலான முழுமையான தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பியிருந்தது.
தேர்தல்கள் சர்வதேச, பிராந்திய, தேசிய கடப்பாடுகளுக்கமைய நடைபெறுகின்றனவா என நிபுணர்கள் குழு மதிப்பீடு செய்து தேர்தல் முடிந்ததும் அதுபற்றிய அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கும் என தெரிவித்துள்ளது. இந் நிபுணர் குழுவை அனுப்புவதா இல்லையா என்னும் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் எடுக்கும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபுணர்கள் குழு அனுப்பப்படுமானால் அவர்களில் கோவிட்-19 நீய்ப் பரிசோதனைகள் நிகழ்த்தப்படவேண்டுமெனவும், இலங்கை அரசின் வரைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுமென்றும் அதே வேளை இலங்கைக்கு வெளிநாட்டார் வருவதில் விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படவேண்டுமென்றும் அது கூறியுள்ளது.
இதே வேளை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு, இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்பாளர் குழுவை அனுப்புவது பற்றி இன்னும் முடிவுகளை எடுக்கவில்லையென்றும் தெரிகிறது.