ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தொடர்கிறது…


மீளாய்வு செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாத அமைப்புகள், நபர்களது பெயர்களைக்கொண்ட பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தத் தடவையும் நீக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சபையாகிய ஐரோப்பிய ஒன்றிய சபை (European Union Council) ஒவ்வொரு 6 மாதங்களிலும் அது உருவாக்கியுள்ள பயங்கரவாத அமைப்புகளினதும், நபர்களினதும் பெயர்களைக் கொண்ட பட்டியலை மீளாய்வு செய்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது முற்றாகச் செயலற்றுப் போய்விட்டதால் அதன் பெயரைப் பட்டியலிலிருந்து சபை நீக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின், மீளாய்வு செய்யப்பட்ட, 21 அமைப்புக்களையும், 14 தனியார் பெயர்களையும் கொண்ட பட்டியலில் அது தொடர்ந்தும் வைத்திருக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

இப்பட்டியலில் உள்ள அமைப்புகள், தனியாரது சொத்துக்களை முடக்கி வைக்கவும் அவர்களுக்கு வேறெந்த வகையிலும் வளங்கள் கிடைப்பதைத் தஹ்டுக்கும் வழிகளையும் செய்வதற்கான ஆலோசனைகளை இச் சபை செய்கிறது.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1373/2001 இன் பிரகாரம் இச் சபை பயங்கரவாத அமைப்புகளினதும், நபர்களினதும் பெயர்களைக் கொண்ட பட்டியலை உருவாக்கியிருந்தது. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் இப் பட்டியலிலிருந்து சில அமைப்புகள், தனிநபர்களின் பெயர்கள் நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதும் நடந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடுகளினதும் அபிப்பிராயங்களையும் கருத்தில் கொண்டு சபை இப் பட்டியலை மீளாய்வு செய்துவருகிறது.