ஐயோ பாவம்! – ஏழை நடிகர் டாக்டர் தளபதி விஜய் ஒரு தேசத் துரோகியாம்!


மாயமான்

நடிகர் விஜயை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். 10 வயதில் குழந்தை நடிகராக வெற்றி (1984) படத்தில் அவரது தந்தை, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்ட விஜய், இதுவரை 64 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

நடிப்பில் மட்டுமல்லாது, நடனம், சங்கீதம் ஆகிய துறைகளிலும் விஜய் ஒரு சமர்த்தர் எனக் கூறுகிறது விக்கிபீடியா. அது மட்டுமல்ல அவர் ஒரு பெரிய புரவலர் (philanthropist, yes…). இந்திய Forbes 100 list இல் இடம்பெறும் தனவந்தர். அமெரிக்க தூதரகம், சென்னை சுப்பர் கிங்ஸ், இண்டியன் பிரிமியர் லீக் ஆகியவற்றின் brand ambassador விஜய்!. இது மட்டுமா? இந்தியாவின் அதிகம் ‘கூகிள்’ தேடுதலுக்குட்படும், அதிகமாக ருவிட்டர் செய்யப்படும் நடிகர் என்ற அந்தஸ்து அவரைப் பலதடவைகள் துரத்திப் பிடித்திருக்கிறது. போதாதற்கு 2007 இல் எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சிக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி வேறு கெளரவித்திருக்கிறது!

Vijay
நடிகர் விஜய்

இவ்வளவுமிருந்தும் நடிகர் விஜய்க்கு ஒரே ஒரு குறை. 2021 ஜூலை மாதம் சென்னை உய்ர்நீதிமன்ற நீதிபதி அவருக்கு மிகவும் கடுமையான தண்டனையொன்றைக் கொடுத்துவிட்டார்.

நடந்தது இதுதான். நம்ம குழந்தைகளின் ‘குழந்தை நடசத்திரம்’ 2012 இல் இங்கிலாந்திலிருந்து ஒரு றோல்ஸ் றோய்ஸ் (Rolls Royce) வாகனமொன்றை இறக்குமதிசெய்திருந்தார். உலகின் அதிபெரிய தனவந்தர்கள் தமது செல்வச் செழிப்பைப் படம் காட்டுவதற்கு ‘றோள்ஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் றோல்ஸ் றோய்ஸ்சையே பாவிப்பார்கள். சீன தனவந்தர் லீ என்பவர் தனது றோள்ஸுக்கு தங்க முலாம் பூசி வைத்திருக்கிறார். (சந்தனம் மெத்திய கேஸ்).

இப்படியாகப் படம் காட்டக் கொண்டுவந்த றோள்சுக்கு கட்டவேண்டிய இறக்குமதித் தீர்வை 32 இலட்சம் இந்திய ரூபாய்கள். Guess what? நமது ஆனானப்பட்ட புரவலர் அதைச் செலுத்த மறுத்துவிட்டார். ரசிகர்களைத் திட்டுவது முதல் பல கிறுக்கு குணங்கள் அவரிடம் உண்டு என்று சொல்வார்கள்; அப்படி ஏதுமோ தெரியாது ஆனால் இவ்வரியை அவர் செலுத்தவில்லை. அது மட்டுமல்ல அதைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வாதாடினார். ஜூலை மாதம் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடுப்பாகிப் போய், ‘இறக்குமதி வரியான 32 இலட்சத்தை உடனடியாகச் செலுத்துவது மட்டுமல்லாது மேலும் 1 இலட்சத்தைத் தண்டமாகவும் விஜய் செலுத்தவேண்டுமெனத்’ தீர்ப்பளித்து விட்டார்.

பாவம் விஜய். ஆதரவுக்கு தாய், தந்தையும் அருகில் இல்லாது மிகவும் உருகிப் போனார். பணம் என்ன பணம், நாய் தின்னாப் பணம் என்று அவர் எடுத்தெறிந்துவிட்டுப் போயிருக்கலாம். சன் பிக்சர்ஸுடன் அடுத்த நிமிடமே ஒப்பந்தம் செய்துவிட்டால் போகிறது. தேர்தலின் போது அடியாட்களோடு சைக்கிளில் ஊர்வலம் போய் கழகக் கண்மணிகளுக்கு வாக்கெடுத்துக் கொடுத்தமைக்காக கழகம் நிச்சயம் அவரைக் கைவிட்டுவிடப் போவதில்லை.

பிரச்சினை அதுவல்ல. இத் தீர்ப்பின்போது நீதிபதி வாய்மலர்ந்த விடயம் – பதிவேட்டில் நிரந்தரமாகப் பதியப்பட்ட அந்தக் கருத்துக்கள் – அவரது நற்பெயருக்கு நிச்சயம் களங்கம் விளைவிக்கும். இப்பதிவை ஏட்டிலிருந்து அகற்றவேண்டுமென விஜய் நேற்று (அக்டோபர் 25) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்திருக்கிறார்.



அப்படி என்னதான் அந்த நீதிபதி சொல்லிவிட்டார்?

“வரி தவிர்ப்பு என்பது தேசத்துரோகம், ஒரு மனநிலை அது அரசமைப்புக்கு முரணானது. சமூகத்துக்கு நீதியைக் கொண்டுவருகிறோமென்று இந் நடிகர்கள் சமூக போதனை செய்கிறார்கள். வெறுமனே நாயக வேடம் போடாமல் (real life hero) (விஜய்) இவ்வரியை உடனடியாகச் செலுத்த வேண்டும்” என நீதிபதி சுப்ரமணியன் தனது தீர்பின்போது தெரிவித்திருந்தார். வரி செலுத்துவதில் தனக்கு (இப்போது) ஆட்சேபணை இல்லை ஆனால் தன்னை ஒரு ‘தேசத் துரோகி’ எனத் தெரிவித்த நீதிபதியின் குறிப்பைப் பதிவேட்டிலிருந்து நீக்கவேண்டுமென விஜய் தற்போது வழக்குப் பதிந்திருக்கிறார்.

பாவம் விஜய். இக் குறிப்புகள் அவரது அரசியல் பிரவேசத்தைப் பாதிக்கப்போகிறது என்பதில் சில உண்மைகள் இருப்பினும் அவருக்கு முன்னர் இன்னுமொரு நடிகர், ரஜினிகாந்த் என்று ரசிகர்கள் அவரை அழைப்பார்கள்; அவரும் தனது திருமணமண்டபம் கொரோணாத் தொற்றினால் வருமானம் எதையும் ஈட்டாமையால் அதற்கும் வரி கட்ட மாட்டேன் என அடம் பிடித்தமையையையும், மனைவி லதாவின் பள்ளிக்கூடம் வாடகை கட்ட இயலாமல் போனமையையும் மறந்து தமிழ்நாடு அவரை அரவணைத்து ஆட்சிபீடம் ஏற்றுவதற்குத் தயாராகவிருந்தது. In fact, தமிழ்நாட்டில் ஊழல் செய்யாதவன் அரசியலுக்கு வரமுடியாது, வந்தாலும் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க இயலாது என்ற நல்லுதாரணத்தைப் பின்பற்றி நடிகர் விஜய் கொஞ்சம் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது.

இந்தியாவில் நேர்மையாகவும் துணிச்சலோடும் இயங்கும் ஒன்றே ஒன்று நீதிமன்றன்றம். அதன் தீர்ப்பில் தலையிடுவதே தேசத்துரோகச் செயல் என்பதை உணர முடியாதவர் என்பதையே இவ்வழக்கின் மூலம் விஜய் நிரூபிக்க விரும்புகிறார். இதற்கு இலகுவான தீர்ப்பு, பேசாமல் கொழும்பு Port City இல் ஒரு பங்களாவை வாங்கிக்கொண்டு அங்கத்தய அரசியலில் குதிப்பதுவே. பெண்ணெடுத்த இடத்தில் சீதனம் தராமலா விடப்போகிறார்கள்….

The moral of the story is… ‘மை லார்ட்டைக்’ கடுப்பேத்தாதீர்கள்…..