HealthSri Lanka

ஐந்தாவது சிறுநீரக மாற்று சிகிச்சை – யாழ் போதனா வைத்தியசாலையின் அசுர சாதனை!

ஜனவரி 2023 இல் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் அமெரிக்க கிளையின் ஸ்தாபக அங்கத்தவரும் பிரபல அறுவைச்சிகிச்சை நிபுணருமான டாக்டர் தவம் தம்பிப்பிள்ளை அவர்களால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட உயிர்வாழும் ஒருவரிலிருந்து சிறுநீரக மாற்று சிகிச்சை முறை தற்போது ஐந்தாவது நோயாளிக்குப் பலன் தந்து உதவியிருக்கிறது.

இதற்கு முன் சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தனவாயினும் அவை சடுதியாக இறந்துபோனவர்களின் உடலிலிருந்து பெறப்பட்ட சிறுநீரகங்கள் மூலமே சாத்தியமானது. ஆனால் ஜனவரி 2023 இல், அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) மற்றும் ராஜரட்னம் / சினமன் அமைப்பினால் வழங்கப்பட்ட நவீன கருவிகளின் உதவியுடன் டாக்டர் தவம் தம்பிப்பிள்ளை அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிகிச்சை முறையின் மூலம் உயிரோடு இருக்கும் சிறுநீரக வழங்கி (donor) யிலிருந்து சிறு துளைகள் மூலம் அகற்றப்பட்ட சிறுநீரகத்தை நோயாளியில் பொருத்தும் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியிருந்தது. இதைத் தொடர்ந்து மேலும் சில சிறுநீரக மாற்று சிகிச்சைகளை மேற்கொண்ட யாழ் போதனா வைத்தியசாலை நவம்ப்ர் 13, 2023 அன்று தனது ஐந்தாவது சிறுநீரக மாற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது.

இச்சிகிச்சையின்போது டாக்டர் கெளரிபாகன் சிறுதுளை சிறுநீரக அகற்றலையும், டாக்டர் மதிவாணன் சிறுநீரக மாற்று சிகிச்சையையும் டாக்டர் பிரம்மா மற்றும் இதர வைத்தியர்கள், தாதிகள் போன்றோர் வழங்குனர், பெறுநர் ஆகியோரது சிகிச்சைக்கு முன், பின்னான நலத்தேவைகளைகளையும் கவனித்துக்கொண்டார்கள்.

இச்சிகிச்சைக்குத் தேவையான துளை மூலம் அறுவை செய்யும் கருவியை (Laparascopic Unit) ராஜரட்ணம் / சினமன் அமைப்பும் இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தம் கசியாது இறுகக் கட்டிவிடும் இயந்திரத்தை (LigaSure) அமெரிக்க அனைத்துலக மருத்துவ நல அமைப்பும் தானம் செய்திருந்தன.