Science & Technology

ஐதரசன் மூலம் இயங்கும் எரிகல வாகனத் தொழில்நுட்பத்தில் சீனா வெற்றி பெறுமா?


சிவதாசன்

தண்ணீரில் ஓடும் வாகனங்கள் பற்றி மிகநீண்ட காலமாகப் பலர் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள், ஆனால் வர்த்தகரீதியில் இத் தொழில்நுட்பம் இன்னும் சாத்தியமான ஒன்றாக உருவாகவில்லை.

இருப்பினும், வளி மாசடைதலைத் தவிர்க்க, நிலக்கீழ் எரிபொருட்களின் பாவனையை ஒழிக்கவேண்டுமென்ற அனைத்துலக முயற்சிகளின் பலனாகப் அபிவிருத்தியடைந்த பல நாடுகள் மாற்று வலுவைத் தரும் தொழில்நுட்பங்களைத் தேடிப் பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றனர். இதன் ஒரு வடிவம் மின்கலத்தில் இயங்கும் வாகனங்கள். 2038 இல் உலகில் எரிபொருள் வாகனங்களைவிட மின் வாகனங்கள் அதிகமாகவிருக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. இவ் விடயத்தில் சீனா இப்போது முன்னோடியாகவுள்ளது.

உலகின் தொழிற்சாலையான சீனா வளி மாசடைதலுக்குப் பாரிய பங்களிப்பைச் செய்கிறது என்பது பலருக்கும் தெரிந்ததே. சி ஜின்பிங் தலைமையில் சீனா இதற்கு ஒரு முடிவுகட்டத் தீர்மானித்து விட்டது. வளியில் காபனீரொட்சைட் சேர்வதைக் கட்டுபடுத்தும் நடவடிக்கையைச் சீனா 2030 இல் ஆரம்பித்துவிடவேண்டுமென அவர் உததர்விட்டுள்ளார். இத்திட்டத்தின் ஒரு அங்கமாக கனரக வாகனங்களை ஐதரசன் மூலம் இயக்கும் தொழில்நுட்பத்தைப் பாவிக்க சீனா முயற்சி செய்து வருகிறது. கடந்த வருடம் ஐதரசனில் இயங்கும் 2,500 கனரக வாகனங்களை சீன மக்கள் வாங்கியிருக்கிறார்கள்.

தொழில்நுட்பம்

இத் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை FCEV (Fuel Cell Electric Vehicles) என அழைப்பார்கள். இலகுவாக விளக்குவதானால், ஐதரசன் (Hydrogen) வாயுவை ஒரு எரிகலத்துக்குள் (Fuel Cell) அனுப்ப அது மின்சாரத்தை விளைபொருளாகத் தரும். தற்போது தெருக்களில் ஓடுகின்ற மின்சார வாகனங்கள் மீள்வலுவேற்றும் மின்கலங்களிலிருந்து (rechargeable batteries) சக்தியைப் பெறுவதுபோல் ஐதரசன் வாகனங்கள் எரிகலத்திலிருந்து சக்தியைப் பெறும். மின்கலத்தில் கழிவுகள் என்று எதுவுமில்லை. எரிகலத்திலிருந்து பக்கவிளைவுகளாக நீர் மற்றும் வெப்பம் வெளியேற்றப்படும். அவற்றால் பூமிக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படப்போவதில்லை என்பதால் கவலைப்படத் தேவையில்லை.

எரிகலத் தொழில்நுட்பத்தில் பல நன்மைகளும் உண்டு. ஒன்று: மின்கல வாகனங்களில் கலங்களை மீள்வலுவேற்ற நிறைய நேரம் பிடிக்கும். காலநிலை மோசமாக இருப்பின் பாவனை நேரம் குறைவாகச் சாத்தியமுண்டு. எரிகல வாகனங்களுக்கு ஐதரசன் வாயுவை ஏற்றுவதற்கு மிகவும் சொற்ப நேரம் தான் பிடிக்கும். அத்தோடு மிக நீண்ட தூரத்துக்கு இவ்வாகனங்கள் செல்லும்.ஏன் தாமதம்?

இப்படியான, இலகுவான தொழில்நுட்பம் இருந்தும் ஏன் அபிவிருத்தியடைந்த நாடுகள் இத் தொழில்நுட்பத்தை நாடவில்லை?

மின்கல வாகனத் தயாரிப்பில் புரட்சிகளைச் செய்துவரும் ரெஸ்லா நிறுவன அதிபர் இலான் மஸ்க் சமீபத்தில் எரிகல வாகனத் தொழில்நுட்பம் பற்றி கிண்டலடித்து ருவீட் செய்திருந்தார். “Fuel Cell = Fool Sells” என அவரது கிண்டல் இருந்தது. இத் தொழில்நுட்பத்தில் அவருக்கு நாட்டமில்லை என்பது தெரிகிறது. அதற்கான காரணங்கள அவர் வெளியிடவில்லை.

இத் தொழில்நுட்பத்தில் உள்ள பிரச்சினை வினைத் திறன். அதற்கு முன் இத் தொழில்நுட்பம் பற்றி ஒரு சிறிய விளக்கம்.

முதலில் எரிகல வாகனங்களுக்குத் தேவையான ஐதரசன் நீரிலிருந்து மின்பகுப்பு (electrolysis) மூலம் பிரித்தெடுக்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு மின்சாரம் பாவிக்கப்படுகிறது. பின்னர் பிரித்தெடுக்கப்பட்ட ஐதரசன் வாயு அமுக்கம் செய்யப்பட்டு (compressed) சிலிண்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் சேமிக்கப்படுகிறது. இப்படியான சிலிண்டரை வாகனத்தில் பொருத்தும்போது வாகனத்திலுள்ள எரிகலம் காற்றிலுள்ள ஒட்சிசனை (oxygen) எடுத்து ஐதரசனோடு இணைத்து நீரை உற்பத்தி செய்கிறது. எப்படி ஆரம்பத்தில் மின்சாரத்தைப் பாவித்து நீரைப் பிரித்து ஐதரசனை உருவாக்கினோமோ அதன் பின்னோக்கிய செயற்பாடு எரிகலத்தில் நடைபெற்று மின்சாரமும் நீரும் விளைபொருட்களாக வெளிவருகின்றன.

எனவே ஐதரசனை உற்பத்திசெய்ய முதலில் மின்சாரம் வேண்டும். உலகில் பல நாடுகள் தமது மின்சாரத் தயாரிப்பிற்கு இன்னமும் நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றில் தான் தங்கியுள்ளன. வளியை மாசடைய வைத்து இப்படியாகத் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைப் பாவித்து மின்வாகனங்களை ஓடுவதன் மூலம் வளியை மாசடையச் செய்யாமல் தவிர்க்கலாம் என்பது முட்டாள் தனம். எனவே தான் பல அபிவிருத்தியடைந்த நாடுகள் இன்னமும் இத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தவில்லை.

சீனா நிலக்கீழ் எரிபொருளுக்காக வெளிநாடுகளில் தங்கியுள்ளது. அதற்காகத் தற்போது மத்திய ஆசியாவினூடாக குழாய்களை நிர்மாணித்து ரஸ்யா போன்ற நாடுகளிடமிருந்து எரிவாயுவை வாங்கத் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது. இருப்பினும் சீனாவின் நிலக்கீழ் எரிபொருட் தேவையைக் குறைக்க சூரிய ஒளி, காற்றாடி போன்ற மாற்று வலுப்பிறப்பாக்கிகளை நிர்மாணித்துவருகிறது. இதற்காக மொங்கோலியாவில் 3 பில்லியன் செலவில் ஆலைகளை அமைத்துள்ளது. 2021 இல் இவ்வாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் மூலம் 500,000 தொன் ஐதரசனை உற்பத்தியாக்கத் திட்டமிட்டுள்ளது.

சீனாவின் ஆரம்பத் திட்டத்தின்படி பஸ்கள், ட்றக்குகள் போன்ற கனரக வாகநங்களை மட்டுமே எரிகலத் தொழில்நுட்பத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது. சிறிய வாகனங்கள், கார்கள் போன்றவை தொடர்ந்தும் மின்கலங்களில் இயங்குபவையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரொயோட்டா, ஹுண்டாய் போன்ற் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து எரிகல வாகனத் தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தங்களைச் செய்துள்ளன.வினைத் திறன்

தற்போதுள்ள தொழிநுட்பத்தின்படி, ஒரு எரிகல வாகனத்தின் வினைத்திறன (efficiency) 38% எனப்படுகிறது. அதாவது 100 வாட்ஸ் மிசாரத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐதரசன் மூலம் கிடைக்கும் பலன் 38 வாட்ஸ் மட்டுமே. அதே வேளை தற்போதுள்ள மின்கல வாகனங்களில் 100 வாட்ஸ் மின்சாரத்தால் மின்னேற்றப்பட்ட மின்கலத்திலிருந்து 80 வாட்ஸ் வலுவைப் பெறக்கூடியதாக உள்ளது (80% வினைத்திறன்).

எரிகலத் தொழில்நுட்பத்தின் தீமைகள்

  • ஏற்கெனெவே குறிப்பிட்டதுபோல எரிகலத் தொழில்நுட்ப வினைத்திறன் போதாது.
  • பல நாடுகள் இன்னமும் தமது மின்சார உற்பத்திக்கு நிலக்கீழ் எரிபொருளிலேயே தங்கியுள்ளன. எனவே வளி மாசடைதல் என்ற காரணத்துக்காக இத் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த முடியாது.
  • ஐதரசனைச் சிலிண்டர்களில் அடைத்துப் பாதுகாப்பது மிகவும் ஆபத்தான நடைமுறை. வாயுக்கசிவு பாரிய வெடிவிபத்திற்குக் காரணமாகலாம்.
  • வாகனங்களில் பொருத்தப்பட்ட சிலிண்டர்களும் இப்படியான பாதுகாப்புக்கு உட்படுத்தப்படவேண்டியவை.

எனவே இலான் மஸ்க் கூறுவதுபோல சீனாவின் இம் முயற்சி நகைப்புக்கிடமாகவும் போகலாம். மேற்குநாடுகளைப் போல கட்டுபாடற்ற ஊடகங்களை அனுமதிக்காத வரைக்கும் சீனாவின் இத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் எதுவும் நம்மை வந்தடையாது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.