Spread the love
ஈராக்கிலும் சிரியாவிலும் மீண்டும் நிலை கொள்கிறது

‘இஸ்லாமிக் ஸ்டேட்’ (ஐசிஸ்) முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என இந்த வருட முற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தாலும் அது உண்மையல்ல என மறுக்கிறார்கள் அப்பிராந்திய பாதுகாப்பு அதிகாரிகள்.

கடைசித் தளமான சிரியாவிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஆதரவுப் படைகளால் வெளியேற்றப்பட்ட பிறகு, ஐசிஸ் புதிய பலத்தோடு மீண்டும் கொரில்லாத் தாக்குதல்களை சிரியாவிலும் ஈராக்கிலும் மேற்கொண்டு வருகின்றது. அதன் நிதி வழங்கல் வலையமைப்பைப் பலப்படுத்தி வருவதோடு, புதிய போராளிகளைச் சேர்த்துக்கொள்வதிலும் புதிய ஆதரவு அமைப்புக்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்வதிலும் பலம் பெற்று வருகிறது என அமெரிக்க, ஈராக்கிய இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடம் அமெரிக்கப் படைகள் தமது சிரியத் தளத்திலிருந்த 2000 பேரை அரைவாசியாகக் குறைத்ததோடு அதன் உள்நாட்டுப் பங்காளி அமைப்புக்களுக்கான ஆதரவையும் குறைத்துள்ளன.

ஒரு காலத்தில் பிரித்தானியாவுக்கு இணையான நிலப்பரப்பையும், 12 மில்லியன் மக்களையும் கொண்ட கலிபாவைக் கொண்டிருந்த ஐசிஸ் இப்பொழுது 18,000 போராளிகளுடன் ஈராக்கிலும் சிரியாவிலும் முடக்கப்பட்டுள்ளது. மக்களுடன் மக்களாக மறைந்து வாழும் குழுக்களாக இருக்கும் போராளிகள் அவ்வப்போது ஸ்னைப்பர் தாக்குதல்களிலும், பதுங்கித் தாக்குதல்களிலும், பாதுகாப்புப் படைகளையும் பொதுமக்களையும் கடத்திக் கொலைசெய்வதிலும் ஈடுபடுகிறார்கள்.

ஐசிஸ் தன் நடவடிக்கைகளுக்குத் தேவையான 400 மில்ல்யன் டாலர்கள் பணத்தை ஈராக், சிரியா மற்றும் அயல் நாடுகளில் பதுக்கி வைத்திருக்கிறது என்கிறார்கள். அத்தோடு மீன் பண்ணைகள், வாகன வியாபாரம், கஞ்சா வளர்ப்பு போன்ற தொழில்களிலும் முதலீடு செய்திருக்கிறது. வட ஈராக்கில் விவசாயிகளிடம் பலவந்தமாகக் கப்பம் வாங்குகிறது எனவும் ஒத்துழைக்க மறுப்பவர்களது பயிர்களைத் தீயிட்டுக் கொழுத்துகிறது எனவும் அறியப்படுகிறது.

சிரியாவின் குர்திஷ் படைகளினால் நிர்வகிக்கப்படும் முகாம்களில் சுமார் 70,000 பேர்கள் தங்கியிருக்கிறார்கள் எனவும், அவர்களில் 2000 வெளிநாட்டுப் போராளிகள் உட்பட, 10,000 ஐசிஸ் போராளிகள் சிறையிலடைக்கப்பட்டும் அவர்களது குடும்பங்கள் முகாமிலும் ஆக அவ்விடம் மேலு அதிக போராளிகளை உருவாக்கும் பிறப்பிடமாக இருக்கிறதென்றும் அமெரிக்கப் புலனாய்வு தெரிவிக்கிறது.

அல் ஹொல் எனப்படும் இந்த முகாமிலுள்ள ஐசிஸ் உறுப்பினர்களின் குடும்பங்கள் எதிர்காலத்தில் பெருத்த தலையிடியைத் தர்க்கூடுமென ஐ.நா. அறிக்கையொன்றும் எச்சரிக்கின்றது. அமெரிக்க, ஐ,நா., மேற்கத்தய நாடுகளின் ஆய்வுகளின்படி, ஐசிஸ் அதிக பலத்துடன் மீளெழுச்சி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உண்டெனக் கருத இடமுண்டு. இனிவருங் காலங்களில் அதன் நடவடிக்கைகள் சிரியாவிலும் ஈராக்கிலும் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதன் கிளைகளும், பங்காளிகளும் மேற்கு ஆபிரிக்கா முதல் சிரியா வரையில் பரந்துள்ளன எனவும் அவற்றின் குறிகள் அமெரிக்கா மட்டுமல்ல அதன் நேசநாடுகளுமாகவும் இருக்கலாம் என்று புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஈரானுடனான முறுகலில் அமெரிக்காவும் நேச நாடுகளும் காலம் கழிக்கையில் ஐசிஸ் தனது மீள்வருகைக்கான முயற்சிகளில் வெற்றிகண்டு வருகின்றது.

Print Friendly, PDF & Email
Related:  கடவுள் அவர்கள் பக்கம் | அச்சம் தரும் எதிர்காலம்