ஐசிஸ் தலைவர் பிடிபட்ட விதம்... -

ஐசிஸ் தலைவர் பிடிபட்ட விதம்…

அக்டோபர் 27, 2019

ஜனாதிபதி ட்ரம்ப்

ஐசிஸ் தலைவர் அபூபக்கர் அல்-பாக்டாடி இன்று கொல்லப்பட்டது பற்றி அமெரிக்க ஜனாதிபதி இன்று காலை தெரிவித்திருந்தார். சிரியாவின் இட்லிப் பகுதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க விசேட படைகளின் நடவடிக்கையின் போது தப்பிக்க முடியாத ஒற்றைவழிச் சுரங்கமொன்றினுள் சிக்கிக்கொண்ட அல்-பாக்டாடியும் அவரது மூன்று குழந்தைகளும் அல்-பாக்டாடி வெடித்த தற்கொலைக் குண்டினால் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்படுவதற்கு முன் அவர் அழுதுகொண்டும், சிணுங்கிக்கொண்டும் கோழை போல் இறந்தார் என ட்ரம்ப் அவர்கள் நையாண்டி செய்திருந்தார்.

மேற்கத்தய மற்றும் அரபு உளவு நிறுவனங்களின் கண்களில் நீண்டகாலம் மண்ணைத் தூவி வந்த பாக்டாடியைப் பிடிக்கமுடியாமல் இருந்ததும் சிரியாவிலும் ஈராக்கிலும் அவர் தொடர்ந்தும் கொலைகளையும், தலை துண்டிப்புக்களையும் செய்துவந்ததும் இன் நிறுவனங்களுக்குப் பெரிதும் விரக்தியைக் கொடுத்துவந்தன.

இறுதியில், பின் லாடனின் இறுதிக்காலத்தில் போல, பாக்டாடியின் எமனையும் அவரது நெருங்கிய உதவியாளர்தான் கொண்டு வந்தார்.

பாக்டாடியின் நம்பிக்கைக்குரிய ஐந்து உதவியாளர்களில் ஒருவர் எதாவி. அவர் இஸ்லாமிய விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 2006 ம் ஆண்டு அல்-கயீதாவில் இணைந்து பின்னர் 2008 இல் அமெரிக்கப் படைகளினால் கைதுசெய்யப்பட்டு நான்கு வருடங்கள் சிறையிலிருந்தவர்.

சிறையிலிருந்து வெளிவந்ததும் எதாவி, பாக்டாடியுடன் இணைந்தார். ஐசிஸ் தளபதிகளுக்கு மத போதனைகளை வழங்குவதே அவரது வேலை. 2017 இல் ஐசிஸ் அமைப்பின் கட்டமைப்பு உடைந்துபோக எதாவி தனது சிரிய மனைவியுடன் சிரியாவிற்குத் தப்பியோடினார்.

இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க, துருக்கிய, ஈராக்கிய உளவு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது நான்கு ஈராக்கியர்கள், ஒரு சிரியர் உட்படப் பல மூத்த ஐசிஸ் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல்களின்படி சிரியாவில் பாக்டாடி இதர தலைவர்களைச் சந்திக்கும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை சீ.ஐ.ஏ. உளவு நிறுவனத்துக்கு வழங்கியிருந்தனர்.

2019 இன் நடுப்பகுதியில் பாக்டாடி சந்திப்பை மேற்கொள்ளும் இடம் இட்லிப் எனவும் ஆனால் அவர் தந் குடும்பங்களுடனும் உதவியாளர்களுடனும் அடிக்கடி கிராமத்துக்குக் கிராமம் மாறிக்கொண்டிருப்பார் எனவும் தெரியவந்தது.

ஒரு தடவை சிரியாவில் இயங்கிவந்த தகவல் தரும் கிராமத்தவர் கட்டம் போட்ட தலைப்பாகையுடன் ஒருவர் சந்தையில் நடமாடியதைக் கண்டனர். அவர் பாக்டாடியின் உதவியாளரான எதாவி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிப் பின்தொடர்ந்து சென்றபோது அது பாக்டாடியின் இருப்பிடத்துக்குக் கொண்டு சேர்த்தது. இத் தகவல்கள் பின்னர் சீ.ஐ.ஏ. யிற்குக் கொடுக்கப்பட்டு கடந்த ஐந்து மாதங்களாக பாக்டாடியின் இருப்பிடம் ட்ரோன்கள் மூலமும், சட்டெலைட்கள் மூலமும் அவதானிக்கப்பட்டு வந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பாக்டாடி தன் இருப்பிடத்தை விட்டு முதன் முறையாக வெளிஎ வந்து ஒரு மினிபஸ்ஸின் மூலம் அயற்கிராமமொன்றிற்குச் செல்வது தெரியவந்தது.

அதுவே அவரது இறுதி வாழ்விடமாகவும் அமைந்து போனது.

பாக்டாடி சிரியாவிலும் நிறைய எதிரிகளைச் சம்பாதித்திருந்தார்.

முன்னர் நுஸ்ரா முன்னணி என அழைக்கப்பட்ட ஹயட் ராஹிர் அல்-ஷாம் என்ற அமைப்பும் பாக்டாடியைத் தேடிக்கொண்டிருந்தது. இட்லிப் பகுதியில் பாக்டாடி இருப்பது அவர்களுக்கும் தெரியவந்திருந்தது. ஐசிஸ் அமைப்பும் நுஸ்ரா முன்னணியும் பல தடவைகள் தமக்குள் போரிட்ட பரம எதிரிகள். பாக்டாடியின் நெருங்கிய உதவியளரான அபு சுலைமான் அல்-காலிடி என்பவரைச் சமீபத்தில் நுஸ்ரா முன்னணி கைது செய்திருந்தது. காலிடியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை நுஸ்ரா முன்னணி துருக்கிப் படைகளுக்கு வழங்கியதன் மூலம் பாக்டாடியின் வாழ்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error0
error

Enjoy this blog? Please spread the word :)