ஏ.ஆர்.ரஹ்மான் வீதியின் கனடிய சுற்றுப் பயணம்
மாயமான்
கடந்த வாரம் (ஆகஸ்ட் கடைசி வாரம்) கனடாவின் புலம்பெயர் நகரமான மார்க்கத்தில் இசைப் புயல் அடித்து சில கம்பங்களை (மனிதர்களையும்கூட) வயல்வெளிகளில் விட்டுச்சென்றமை குறித்து படங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்தன. நாமும் நம் பங்குக்கு அச்செய்தியை மெருகூட்டிப் பதிவு செய்திருந்தோம். இது தொடர்பாகப் பின்னர் மாகாண சட்டமன்றப் பிரதிநிதி லோகன் கணபதி அவர்களது அலுவலகமும் இசைப்புயலின் பயணம் பற்றி விபரமாகத் தந்துதவியிருந்தது.

இச் செய்தியைப் படித்த இரு நண்பர்கள் ஏ.ஆர்.ரஹ்மாணின் பெயரில் மார்க்கத்தில் புயலடித்தது இது முதல் தடவையல்ல என அடித்துச் சொன்னார்கள். நவம்பர் 04, 2013 இல் மார்க்கத்தின் இப்புயலடித்ததற்கான தடயங்களை இன்று ஒரு நண்பர் அனுப்பி வைத்தார். அப்போதும் இப்புயல் மாநகரசபைக் கட்டிடத்துக்குள் பெயர்ப்பலகைக் கம்பமொன்றையும் கூடவே நகரபிதா ஃப்ராங்க் ஸ்கார்ப்பிட்டியுடன் நமது ஏ.ஆர்.ரஹ்மானையும் அடித்துச் சென்றிருந்தது.
அப்போது சூட்டப்பட்ட வீதிக்குப் பெயர் ‘அல்லா-ராக்கா ரஹ்மான் வீதி’. கடந்த 9 வருடங்களாக கனடாவில் இவ் வீதியைத் தேடி கனடா போஸ்ட் தபால் காரர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள். நகரபிதா மீதோ அல்லது ரஹ்மான் சார் மீதோ கனடா போஸ்ட் இதுவரை வழக்குகள் எதையும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.
ஆகஸ்ட் மாதம் சார் புல்லரித்தது போல 2013 இல் இந்திய ஊடகங்கள் பலவும் துள்ளிக்குதித்துக் கொண்டாடிவிட்டு பதுங்கிக்கொண்டுவிட்டன. ஆனாலும் நம்மைப்போல சில விடாக்கொண்டர்கள் இவ் வீதியைத் தேடி இன்னும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். நானும் கூகிள் ஆண்டவருக்கு விரதமிருந்து எனது வேண்டுகோளை முன்வைத்தேன். ‘எத்தினை ட்றக்குகளில றிசல்ட்டுகளை அனுப்பிறது?’ என்று பதில் வந்தது. ஒன்றை மட்டும் பார்வைக்கு வைக்கிறேன்.
சரி இப்போ எனது கேள்வியும், உங்களது கேள்வியும் கூட, 2013 இல் பாவித்ததும் ஆகஸ்ட் 2022 இல் பாவித்ததும் ஒரே கம்பமும் பலகையும் தானா?. பக்கத்தில் நிற்பவர்கள் இருவரும் ஒரே நபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அத்தோடு இன்னுமிரண்டு கேள்விகள்: (1) இக் கம்பம் இன்னும் எத்தனை தடவை பாவிக்கப்படவுள்ளது? (2) கனடாவின் இதர மாகாணங்களுக்கும் இச்சந்தர்ப்பம் வழங்கப்படுமா?
என்னவோ ‘இசைப்பபுயல்’ மட்டுமல்ல அவர் பெயரிலுள்ள வீதியும் சுற்றுப்பயணம் செய்வது எமக்கெல்லாம் பெருமை தான். புயலில் சிக்கிச் சிதறினாலும் ரசிகர்கள் வருடா வருடம் சுழன்றாடுகிறார்கள். அதுவே போதும்.