Satire | கடி-காரம்மாயமான்

ஏழைகளாகப் போன உலக கோடீஸ்வரர்கள் (பில்லியனாதிபதிகள்?)

மாயமான்

2023 ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் (Forbes) உலக பில்லியனாதிபதிகளின் பட்டியல் வந்துவிட்டது. இது டொலரில் கணக்கெடுக்கப்படுவதால் மஹிந்த ராஜபக்ச இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இந்த வருடம் மொத்தம் 2,640 பில்லியனாதிபதிகளாம். சென்ற வருடத்தை விட 28 குறைவு. பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு அனுதாபங்கள்.

அமெரிக்க வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் வருடா வருடம் உலக பில்லியனாதிபதிகளைக் கண்டுபிடித்து பட்டியலிடுவது வழக்கம். பிரஞ்சு வணிகரான பேர்ணா ஜான் ஆர்ணோ $211 பில்லியன்களைக் காட்டி முதலாமிடத்தை எட்டியிருக்கிறார். உலகின் அதி பெரிய ஆடம்பரப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு இவர் அதிபர். இவ்வருட பட்டியலில் $200 பில்லியனைத் தாண்டியவர் இவர் ஒருவரே. உலகின் 75 க்கும் மேற்பட்ட ஆடம்பர அலங்காரப் பொருட்கள் இவரது நிறுவனத்துக்குரியவை. அடுத்த தடவை நீங்கள் Sephora விலோ அல்லது Louis Vuitton இலோ பொருட்களை வாங்கினால் இவரது சொத்து $300 பில்லியனையும் தாண்டலாம். 74 வயதுடைய ஆணோ சென்ற வருடம் $158 பில்லிஅந்களோடு மூன்றாமிடத்தில் இருந்தார்.

பாவம் இலான் மஸ்க். சென்ற வருடம் முதலாவது நிலையிலிருந்தவர் ‘X’ ஐ (முன்னாள் ருவிட்டர்) வாங்கியவுடன் ex ஆகிவிட்டார். பட்சி பணத்தைத் திருடிக்கொண்டு பறந்துவிட்டது. $180 பில்லியன்களோடு இரண்டாமிடத்தில் குந்தியிருக்கிறார். முதல் 10 பேரைக் கொண்ட பட்டியல் கீழே.

இவ்வருட பில்லியனாதிபதிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்களில் பாதிப்பேருக்கு மேல் சென்ற வருடத்தில் இருந்ததைவிட ஏழைகளாகப் போய்விட்டார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி. சும்மா அறுக்கிறதை விட்டிட்டு ‘நம்மாளுகள்’ அதானியும் அம்பானியும் எங்க நிக்கினம் எண்டு சொல்லு என்கிறீர்கள். சரி, மூக்கேஷ் அம்பானி $83.4 பில்லியன்களைச் சுருட்டிக்கொண்டு 9 ஆவது இடத்தில் இருக்கிறார். அது சரி யார் அந்த அதானி? டொணால்ட் ட்றம்பிடம் அக்கவுண்டிங்க் பழகிய அந்தப் பையனா? கணக்குப் புத்தகங்களில் திடீரெனத் தானாக இலக்கங்கள் முளைக்கும் வித்தையைச் சரிவரக் கையாண்ட அந்தப் பையன் இப்போது விலாசமில்லாமல் போய்விட்டான். பாவம் மோடிஜியால் கூட எதையும் பண்ண முடியவில்லை. இப்போ அவன் ford டுகள் கட்டுகிறானா அல்லது பழைய சைக்கிளில் food delivery செய்கிறானா தெரியவில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

றொபின் ஹூட்டின் வில்லனான கோவிட் ஏழைகளிடமிருந்து பணத்தைப் பிடுங்கி பணக்காரருக்குக் கொடுத்துவிட்டுப் போய்விட்டது. அதில் பெரும்பான்மை அரசாங்கங்களின் பணம் தானே என்பதால் பலர் கவலைப்படாமல் இருந்திருக்கலாம். பங்குச் சந்தைகள் ஓஹோ என்று ஓடியதால் 2022 ஆம் ஆண்டு பில்லியனாதிபதிகளுக்கு சிரிப்பு கொஞ்சம் அதிகம். 2023 இல் நிலைமை வேறு. கோவிட்டை நம்பிய அரசியல்வாதிகளுடன் சில பில்லியனாதிபதிகளும் அள்ளுப்பட்டு விட்டார்கள்.

சரி, இதோ அந்த பில்லியனாதிபதிகள் பட்டியல்:

இடம்சொத்துபெயர்
1$211 billionBernard Arnault 
2$180 billionElon Musk
3$114 billion Jeff Bezos
4$107 billionLarry Ellison
5$106 billionWarren Buffett
6$104 billionBill Gates
7$94.5 billionMichael Bloomberg
8$93 billionCarlos Slim Helu & Family
9$83.4 billionMukesh Ambani
10$80.7 billionSteve Ballmer
2023 Forbes பில்லியனாதிபதிகள் பட்டியல் – முதல் 10 பேர்

இலான் மஸ்க் ருவிட்டரை வாங்கி X ஆக்கியவுடன் ரெஸ்லாவின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. இனிமேல் சீனாவின் மின்வாகனம் ரெஸ்லாவைத் தாண்டிவிடுமென்றால் மஸ்க் கீழே போவதைத் தவிர வேறு வழியில்லை.

அமசோன் நிறுவன அதிபர் ஜெஃப் பேஸோஸ் இந்த வருடம் மூன்றாமிடத்தில் இருக்கிறார். வரன் பஃபே, பில் கேட்ஸ் ஐந்தாம், ஆறாம் இடங்களில் இருக்கிறார்கள்.

கோவிட் வந்து போனதன் பின் உலகை உலுப்ப வந்திருக்கிறது AI – செயற்கை விவேகம். இதை வைத்து சில புதிய பில்லியனாதிபதிகள் முளைக்கலாம். சிலர் தாளலாம்.

அப்போ தமிழர் ஒருவரும் – அட் லீஸ்ட் கனடியத் தொழிலதிபர்கள் (பணம் எப்படி வந்தது என்பதைக் கண்டுகொள்ளாது விட்டுவிட்டாலும் கூட) இப்பட்டியலில் வரமாட்டார்களா என்று உங்களில் சிலருக்கு ஏக்கம் இருக்கலாம். ராள்ஸ் ராய்ஸ், குதிரை வண்டி, ஹெலிகொப்டர் சகிதம் சாமத்திய வீடு, கல்யாண வீடுகள் நடைபெறாவிட்டால் சில வேளை சாத்தியமுண்டு.