ஏழாவது நாளை எட்டும் தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதம்

அரசியல் காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

கொழும்பு மகசீன் சிறைச்சாலையல் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணா விரதம் இன்றோடு (13) ஏழாவது நாளை எட்டுகிறது. அரசியல் காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யுமாறு கோரி எஸ்.உதயசிவம், உ.உமாசுதன், எம்.பார்த்திபன், எல்.இன்பராஜ், வை.றொபின்சன், ஆர்.சயந்தன், பி.நகுலேஸ்வரன், எஸ்.சுதாகரன், உ.சதிஷ்குமார், எஸ்.சசிதரன், ஆர்.விவேகானந்தன், வை.டட்லி, எல்.அஜந்தன் ஆகியோரால் இவ்வுண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வதேச கைதிகள் நீதி நாளன்று இக் கைதிகளைப் பார்க்கச் சென்ற அவர்களின் உறவினர்களின் கருத்துப்படி இக் கைதிகள் சிலரின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என அறியப்படுகிறது.

நல்லாட்சி அரசும் அதைத் தொடர்ந்து வந்த ராஜபக்ச அரசும் நீண்டகாலமாக விசாரணைகளின்றித் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாகப் பல வாக்குறுதிகளை அளித்திருந்தாலும் இதுவரை எவருமே விடுதலை செய்யப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கைதிகளில் சிலர் விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாலும் அவர்களில் பலர் புலிகள் இயக்கத்தால் இறுதிப்போரின்போது பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டார்கள்.சில கைதிகள் விசாரணைகள் ஏதுமின்றி கடந்த 30 வருடங்களாகச் சிறைகளில் வாடுகிறார்கள்.

கொழும்பு மகசீன் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக இக் கைதிகளின் உறவினர்கள் சிலர் நேற்று (12) உண்ணாவிரதம் அனுட்டித்தார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்படப் பல சட்டங்களைக் காரணமாகக் காட்டிக் கைதுசெய்யப்பட்ட தமது உறவினர்களை உடனடியாக விடுதலை செய்ய ஆளுனர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.