Columnsசிவதாசன்

ஏமாற்றப்பட்ட வெனிசுவேலா?

மதுரோ அமெரிக்காவால் கடத்தப்பட்டது ஆச்சரியம் தரும் விடயமல்ல. வல்லரசுகளின் விளையாட்டுத் திடல்களில் ‘பந்து பொறுக்கிகளாக’ இருக்கும்வரை இப்படியான நகைப்புத்தரும் விடயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இதில் எந்த வல்லரசு நேர்மையானது அல்லது எது அறத்தைப் பேணுகிறது என்பதையெல்லாம் ஆராய்வதில் பிரயோசனமில்லை.

ஏகாதிபத்திய வல்லரசுகளைக் கையாள்வதில் ஏழை நாடுகளின் தலைவர்களுக்கு மூன்றே வழிகள் தானுண்டு. ஒன்று அவர்களுக்குப் பந்து பொறுக்கி, பலனற்ற போது அவர்களாலேயே கொல்லப்படுவது (ஸொஃப்ட் கில்லிங்); இரண்டாவது தமது மக்களின் நன்மைக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நின்று போராடி அவ்வல்லரசுகளாலேயே கொல்லப்படுவது (ஹார்ட் கில்லிங்); மூன்றாவது தம் மக்களின் நன்மைக்காக வல்லரசுகளோடு ஆடியும் பாடியும் அலுவல்களைப் பார்த்து பிழைத்துப் போவது.


ஒரு காலத்தில் அமெரிக்காவின் பந்து பொறுக்கிகளாக இருந்து மனம் கசந்து இறந்துபோன முன்னாள் ஈரானிய அரசர் ஷா, பனாமா அதிபர் நொறியேகா, பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸ், ஈராக்கின் சதாம் ஹுசெய்ன், லிபியாவின் கடாஃபி போன்றோர் முதலாவது ரகம். அதே வேளை ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு பந்து பொறுக்க மறுத்து வரித்துக்கொண்ட கொள்கைகளுக்காக இறுதிவரை போராடி தத்தம் நாடுகளின் சுதந்திர அரசுகளை நிறுவிய பின்னர் அவர்களது பங்காளிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொங்கோ நாட்டின் பற்றிஸ் லுமும்பா மற்றும் கிறெனாடா நாட்டின் மொறிஸ் பிஷப் ஆகியோர் இரண்டாவது ரகம். இவர்களோடு 2013 இல் இயற்கை மரணமடைந்த வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு ட்றம்பின் அராஜகப் படைகள் குண்டு வீசி பூரிப்படைந்திருந்த சம்பவத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக, பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும் விலாங்குகளாக வாழ்ந்த சிங்கப்பூர் லீ குவான் யூ மற்றும் தற்போதைய தென்னாபிரிக்க தலைவர் றம்போசா போன்றோர் மூன்றாவது ரகம்.

தம்முடன் நம்பிக்கையோடிருந்தவர்கள் பலனற்றுப் போகும்போது அவர்களைப் பலிக்கடாவாக்கும் செயல்முறையை ஆங்கிலத்தில் ‘throwing under the bus’ என்று salng ஆகச் சொல்வார்கள். இப்படியாக அமெரிக்காவின் பின்னால் நம்பிப் போய் பஸ்ஸின் கீழ் தள்ளப்பட்டவர்கள்தான் ஈரானின் ஷா போன்றோர். ஷா, நோறியேகா, மார்கோஸ் மூவரும் மரணிக்கு முன்னர் தாம் அமெரிக்காவை நம்பி ஏமாந்ததற்காக வருத்தப்பட்டவர்கள். சதாம் ஹூசேய்ன் அமெரிக்காவாலும் , லிபியாவின் கடாஃபி பிரித்தானியாவாலும் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டவர்கள்.

சிரியாவைப் பொறுத்தவரையில் அவருடன் இறுதிவரை நின்றவர்களான ரஸ்யாவும் ஈரானும் அஸாத்தை பஸ்ஸுக்குள் தள்ளிவிட்டுத் தப்பி ஓடியவர்கள். தற்போது கிடைக்கும் செய்திகள் உண்மையானால் ‘யூக்கிரெய்னில் தமது நடவடிக்கைகளில் தலையிடுவதை அமெரிக்கா தவிர்க்குமானால் வெனிசுவேலாவில் அமெரிக்கா என்ன செய்தாலும் தான் கவனிக்கப் போவதில்லை” என 2019 இல் ட்றம்பின் யூக்கிரென் ஆலோசகராக இருந்த ஃப்ஃயோனா ஹில் என்பவர் மதுரோவின் கைது பற்றிக் கூறிய கருத்து புட்டினைச் சந்தேகிக்க வைக்கும்.. மதுரோ கடத்தப்பட்டு இத்தனை நாட்களாகியும் புட்டின் இதுவரை வாய் திறந்து கண்டிக்காமல் இருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. அதே வேளை மதுரோவின் கடத்தல் பற்றி சீனா கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாது சீன – வெனிசுவேல பொருளாதார ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறும் பட்சத்தில் அதற்கெதிராக வழக்குப் பதியப்படும் என சீனா அமெரிக்காவை எச்சரித்துமுள்ளது.

இப்பின்னணியில் வெனிசுவேலாவில் தற்காலிக தலைமையேற்றிருக்கும் டெல்சியா றொட்றீகேஸ் எந்த ரகத்தில் அடங்கக்கூடியவர்? அமெரிக்காவின் அராஜகத்தைக் கண்டித்ததோடு மட்டுமல்லாது மதுரோவையும் அவரது மனைவியையும் விடுவிக்க தான் முயற்சிப்பேன் என அறைகூவலும் விடுத்திருக்கிறார். இதே வேளை மதுரோவை அமெரிக்கா தூக்குவத்ற்கு முன்னர் தீட்டப்பட்ட திட்டத்தின் பிரகாரமே றொட்றீகேஸ் நியமனம் நடைபெற்றுள்ளதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது. றொட்றிக்கோவின் அமெரிக்கா மீதான எச்சரிக்கை வந்த மறு கணமே ‘மதுரோவுக்கு நடந்ததைவிட மோசமாக உனக்கு நடக்கும்” என ட்றம்ப் எச்சரித்திருக்கிறார். இறுதியாகக் கிடைத்த செய்திகளின்படி 30 மில்லியன் முதல் 50 மில்லியன் முதல் 90 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணையை அமெரிக்காவிற்கு கொடுக்க புதிய வெனிசுவேல அரசு இணங்கியிருக்கிறதாம். இதில் றொட்றீகேஸ் சிங்கப்பூரின் லீ குவன் யூ மாதிரி செயற்படப் போகிறாரா அல்லது மதுரோவின் புரூட்டஸாக இருக்கப்போகிறாரா? தெரியாது.

மதுரோவின் கடத்தல் நடவடிக்கையின் போது 24 வெனிசுவேல படையினரும் 32 கியூபா இராணுவத்தினரும் சில பொது மக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என செய்தியொன்று கூறுகின்றது. 12 அமெரிக்க படையினர் காயமடைதுள்ளார்கள் எனவும் அவை பாரதூரமற்றவை எனவும் ட்றம்ப் புழுகுகிறார். இதற்கு காரணம் இக்கடத்தல் நடவடிக்கையின் போது அமெரிக்க ‘சீல்’ படையினர் மேற்கொண்ட உத்தி எனப்படுகிறது. சோமாலியாவின் மொகதிசு சண்டையில் அமெரிக்க சீல் படையினர் கண்ட பேரிழப்புக்குப் பிறகு அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் பெரும்பாலும் வெற்றி பெற்றவை. இந்த தடவை வெலினிசுவேலாவில் அமெரிக்காவின் படை நகர்வு மிகவும் இரகசியமாக இருந்தமைக்கு காரணம் அமெரிக்க விமானங்களின் நகர்வின் போது விமானக்களின் பறப்பிற்கு நேர் கீழே உள்ள தரைப்பிரதேசத்தில் மின்சாரம் / தகவல் தொடர்புகளைத் துண்டிக்கும் வகையிலான புதியதொரு தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டதென ஒரு அமெரிக்கர் கூறினார். தனக்கு ட்றம்பைப் பிடிக்காது என்றாலும் அதிக இழப்புகளின்றி மதுராவைக் கடத்திய முறையைக் கண்டு அமெரிக்கர்கள் வியப்பும் பெருமிதமும் கொள்கிறார்கள்” என்றார் அவர். (இன்னுமொரு ஆனையிறவு / கட்டுநாயக்கா moment?).

மதுரோவின் கடத்தல் பற்றி அதிர்ச்சியும் ட்றம்ப் நிர்வாகத்தின் மீது ஆத்திரமும் தோன்றினாலும் ஒரு துருவ உலகில் இது சர்வ சாதாரணம். மடிகளில் பாரத்தைக் கொண்டு திரிபவர்கள் திருடர்களுக்கு அஞ்சித்தானாக வேண்டும். பன்றிக்குடா (Bay of Pig’) விவகாரத்தில் ஏழை நாடான கியூபாவைக் காப்பாற்றியது சோவியத் யூனியன். அப்போதிருந்த பல்துருவ ஒழுங்கு இப்போதில்லை. யூக்கிரெய்ன் படையெடுப்பு விடயத்தில் ரஸ்யாவுக்கு தார்மீக பூர்வமான அங்கீகாரம் இருந்தாலும் அமெரிக்காவைப் போல் ‘வெற்றி எப்போதுமே சரி’ (might is right) என்ற தத்துவத்தை அது பின்பற்றவில்லை. அப்போரில் ரஸ்யாவைச் சிக்க வைத்துவிட்டு மேற்குலகம் எள்ளி நகையாடுகிறது.

அதே வேளை இப்படியான காரியங்களைச் செய்ததில் ட்றம்ப் முதலானவர் இல்லை. 19ம் நூற்றாண்டில் இல் வரையப்பட்ட மொன்றோ கோட்பாட்டின் (Monroe Doctrine) பிரகாரமே ட்றம்ப் தான் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறுகிறார். அப்போது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே ஏற்பட்ட பிணக்கில் “மேற்கு அரைக் கோளத்தில் நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் நீங்கள் அதில் தலையிடக்கூடாது. அதே வேளை ஐரோப்பிய விடயங்களில் நாமும் தலையிட மாட்டோம்” என்பது ஒரு ஒப்பந்தமாகியது. அதுவே மொன்றோ கோட்பாடு. துர்ப்பாக்கியமாக அவ்வொப்பந்தத்தை , இந்தத் தடவை ரஸ்யாவும் அமெரிக்காவும் மட்டுமே அனுசரித்துப் போகின்றன. இங்கும் கூட மேற்கின் சதி வலையில் ரஸ்யா வீழ்ந்திருக்கிறது எனவே படுகிறது.

அடுத்த கட்டமாக, கடந்த வாரம் நடந்த பாரிஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி யூக்கிரெய்னில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தமது படைகளை நிலைகொள்ள வைக்கப்போகின்றன. இதன் போது புட்டின் போரொன்றை முடுக்கி விடாவிட்டால் இதுவரை அவரது வீராவேச அறிக்கைகள் பொய்ததுப்போய் அவரும் தூக்கியெறியப்படுவார். இப்போரில் அமெரிக்க ‘நேரடி’ தலையீடு இல்லாமலேயே ஐரோப்பா வெல்லக்கூடிய சாத்தியங்களுண்டு. அணுவாயுத பாவனைக்கு ரஸ்யா தள்ளப்படும் நிலை ஏற்பட்டால் அமெரிக்கா இதில் தலையிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. அப்போது இது ‘ஐரோப்பியர்களின் போர்’ எனச் சீனாவும் இந்தியாவும் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருக்கும்.

1960 களில் கென்னடி ஆட்சியின்போது மார்ட்டின் லூதர் கிங்க் தலைநகர் வாஷிங்டனுக்கு ஒரு நீண்ட யாத்திரை சென்றார். அய்யாத்திரை நடைபெறுவதை அனுமதிக்கக்கூடாது என பாதுகாப்பு அலுவலர் வற்புறுத்தியும் கென்னெடி அதைச் செவி மடுக்கவில்லை. நீண்ட தூரம் யாத்திரையில் வந்தவர்களுக்கு மலசலகூட மற்றும் உணவு வசதிகளையும் கென்னெடி ஒழுங்கு செய்திருந்தார். இங்கு நடைபெற்ற கூட்டத்தில்தான் மாட்டின்லூதர் கிங் தனது பிரபல “I have a dream” பேச்சை நிகழ்த்தியிருந்தார். இப்பேச்சைத் தவிர இய்யாத்திரை வேறெதையும் சாதிக்கவில்லை. இது லூதர் கிங்கிற்கு பெருத்த ஏமாற்றத்தையும் கென்னெடிக்கு மிகுந்த வரவேற்பயும் பெற்றுக்கொடுத்தது. ஊர்வலத்தை முடித்துக்கொண்டு கிங் தனது வாழிடமான மொண்ட்கோமெரிக்குச் சென்று மிகவும் மனமுடைந்த நிலையில் கூறிய வார்த்தைகள் ” நாங்கள் எங்கள் மக்களுக்கு முதலில் கல்வியைப் புகட்ட வேண்டும். முதலில் அதற்குத் தடையாகவிருக்கும் வறுமையை ஒழிக்க வேண்டும்”

வெனிசுவேலாவின் பிரச்சினைகளுக்கு ட்றம்ப் காரணமல்ல. ரெக்ஸாஸ், கலிபோர்ணியா, லொஸ் ஏஞ்ஞலிஸ் எல்லாமே ஒரு காலத்தில் அமெரிக்காவிடம் இருக்கவில்லை, பின்னர் பறிக்கப்பட்டவை. அவற்றைப் பறித்த ஜனாதிபதிகள் இப்போதும் போற்றப்படுகிறார்கள். எனவே ட்றம்பின் தலை மலையில் பொழியப்பட்டு எதிர்கால அமெரிக்கர்களின் வழிபாட்டு நாயகனாக மாற்றப்படலாம். வெனிசுவேலாவின் வெற்றி தலைக்கேறி அவரது கவனம் மீண்டும் கிரீன்லாந்து மீது தாவியிருக்கிறது. அடுத்தது கனடாவாகவும் இருக்கலாம். இப்பாரிய திட்டத்தின் பின்னால் மிகப் பெரிய தலைகள் இருக்கின்றன. ட்றம்ப் போன்ற ஒரு கோமாளி அவர்களுக்குத் தேவையாகவிருந்தது. அவர்களது உழைப்பும் பெறுபேறும் ‘மாகா’ வழியாக நிறைவேறியிருக்கிறது. இதன் பெரும் பேறாக இன்னும் ஒரு நூற்றாண்டில் உலகின் பல நாடுகளும் தமக்கான பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும். ஆமென்.