BusinessMoney

ஏப்ரல் மாத வெளிநாட்டுப் பணவருகை 52% சரிவு

உண்டியல், ஹவாலா முறைகளே மக்களின் தேர்வாக இருக்கிறது


வெளிநாடுகளிலிருந்து இலங்கைப் பணியாளர் ‘சட்டபூர்வமாகத்’ தாய்நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் தொகை, சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது, கடந்த மாதம் 52% த்தால் சரிவடைந்திருக்கிறது. அரசாங்க அனுமதியுள்ள சட்டபூர்வமான நிதி நிறுவனங்களைத் தவிர்த்து உண்டியல் மற்றும் ஹவாலா முறைகளினூடு தமது பணத்தை அனுப்புவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர் எனத் தெரிகிறது.

இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணி வருவாயில், ஏற்றுமதி வர்த்தகம், சுற்றுலா வர்த்தகம் ஆகியவற்றுடன் வெளிநாட்டுப் பணியாளர் அனுப்பும் பணமும் முக்கிய பங்கை எடுக்கிறது. கடந்த வருடம் (2021) ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர் மூலம் US$ 518.8 மில்லியன் வருவாயாகக் கிடைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அது US$ 248.9 மில்லியனாகச் சரிவடைந்திருக்கிறது. இதஹ்ற்குக் காரணம் உண்டியல் போன்ற முறைகளில் இப்பணம் அனுப்புப்படும்போது பெறுபவர்கள் கையில் அதிக ரூபாய்கள் கிடைக்கிறது என்பதாலேயே.

சராசரியாக, வெளிநாட்டுப் பணியாளர் இலங்கைக்கு வருடாந்தம் அனுப்பும் பணம் US$ 7.0 மில்லியன் எனப்படுகிறது. 2020 இல் கோவிட் பெருந்தொற்று அச்சத்தின் காரணமாக உண்டியல்காரர் கடைகளைப் பூட்டிக்கொண்டதால் அரச நிறுவனங்களுக்கூடாகப் பணம் பெறப்பட்டபோது இது US$ 7.1 மில்லியன்களாக அதிகரித்திருந்தது. கடந்த வருடம் மத்திய வங்கி தனது பணமாற்று விகிதத்தைக் குறைத்து வைத்திருந்ததால் பெரும்பாலான வெளிநாட்டுப் பணம் உண்டியல் நிறுவனங்கள் மூலமாகவே அனுப்பப்பட்டது. இதனால் திறைசேரிக்கு வழமையாகக் கிடைக்கும் டொலர்களில் வீழ்ச்சி ஏற்பட்டது.

மார்ச் 7 வரை, வெளிநாட்டுப் பணியாளர் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் உண்டியல் காரரிடமிருந்து இலங்கை ரூபா 360 கிடைத்தது. மார்ச் 7 இலிருந்து, மத்திய வங்கி இதை உத்தியோகபூர்வமாக ரூ.200 ஆகக் குறைத்ததிலிருந்து உண்டியல் மூலம் பொதுமக்கள் ரூ. 240 -260 வரை பெறக்கூடியதாகவுள்ளது. இது தொடருமானால் 2022 இல் இலங்கையின் பொருளாதாரம் மேல்ம் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதைத் தவிர்க்க, மே 20 இல் மத்திய வங்கி புதிய நடைமுறையொன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம், ‘திறந்த கணக்குகளின்’ மூலம் பணம் வழங்கப்படுவதைக் (உண்டியல் காரர்) கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஒருவருக்கு வழங்கப்படும் பணம் வங்கிக் கணக்கினூடு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென்கிறது இச் சட்டம். அத்தோடு வெளிநாட்டு நாணயங்களில் (குறிப்பாக டொலர்) பணத்தைப் பதுக்கிவைப்பவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

இதே வேளை, ‘திறந்த கணக்குகளின்’ மூலம் பணம் வழங்குவதை அரசாங்கம் தடுக்க முயலுமானால் பிரத்தியேகமாக ‘டொலர்களை’ விற்பவர்கள் கையில் பணம் அருகிப்போய்விடும். சிலர் இப்பணத்தைக் கொண்டு தமது இறக்குமதிகளையும் செய்கிறார்கள். பண்டங்களை ஏற்றுமதி செய்பவர்கள தமது வருவாயை இறக்குமதிக்குப் பாவிப்பது வழக்கம். ஆனால் ஏற்றுமதி செய்யாத வர்த்தகர்கள் வங்கிகளில் ‘டொலரில்’பணத்தை இடுகை செய்துவிட்டு அதன் பெறுமதியுடனான ‘வங்கிக் கடிதமொன்றை’ (letter of credit) எடுத்து பண்டங்களை விற்கும் நிறுவனங்களுக்கு அனுப்பும். இப்படியான நிறுவனங்கள் தமது ‘டொலர்களை’ தனியார் சந்தையிலும் வாங்குகின்றன. எனவே அரசாங்கத்தின் இஎத ‘உண்டியல் காரரை’ நசுக்கும் சட்டங்கள் தனியார் சந்தையில் டொலார் வியாபாரத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.