Spread the love

ஆகஸ்ட், 19, 2020: உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் குணம்பெறவேண்டுமென்று கோரி, நாளை, வியாழக்கிழமை ஆகஸ்ட் 20, மாலை 6 மணிக்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் பாலாவின் பாடல்களைக் கேட்கவேண்டுமென இயக்குனர் பாரதிராஜா கேட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலகலையுலகப் பிரமுகர்கள் இப் பிரார்த்தனையில் கலந்துகொள்வார்கள்.

தேசிய விருது பெற்ற பாடகர் எஸ்.பி. பாலா, ஆகஸ்ட் 5ம் திகதி முதல், கோவிட்-19 நோய்த் தொற்றுக்காக, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் இரவு பகலாகச் சிறப்பு கண்காணிப்பில் இருக்கும் அவர் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லையென அவரது மகன் சரண் ருவீட் மூலம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலா விரைவில் தேறி இயல்புவாழ்வுக்குத் திரும்பவேண்டுமென அவரது உலக ரசிகர்கள், வியாழன் மாலை 6:00 மணிக்கு அவரது பாடல்களைக் கேட்பதன்மூலம் ‘பிரார்த்தனை’ செய்யும்படி இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

16 இந்திய மொழிகளில், சுமார் 40,000 பாடல்களுக்குமேல் பாடித் தன் இனிமையான குரலால் பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளைகொண்டு வந்தவர் எஸ்.பி. பாலா அவர்கள்.



இந்திய திரையுலகத்தின் பல்வேறு நடிக, நடிகையர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், படத் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாள்ர்கள், விநியோகிஸ்தர்கள், ஊடகவியலாளர்களுடன் பல பில்லியன் ரசிகர்கள் ஆகஸ்ட் 20 மாலை 6:00 மணிக்கு எஸ்.பி.பாலாவின் குரலைக் கேட்பார்கள் எனவும், அதே வேளை அவர் விரைவில் குணமடைந்து வீடு போகவேண்டுமென்று பிரார்த்திப்பார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் பாரதிராஜா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதே போன்றதொரு கூட்டுப் பிரார்த்தனை பொன்மனச் செம்ம்மல் எம்ஜி.ஆர். சுகவீனமாகவிருந்தபோதும் மேற்கொள்ளப்பட்டது எனவும் அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் சுகம் பெற்று வீடு திரும்பியிருந்ததாகவும் பாரதிராஜா மேலும் தெரிவித்தார்.

“எஸ்.பி.பி. இற்கு அன்பென்னும் விதைகளை விதைக்க மட்டுமே தெரியும். அவர் ஒரு அற்புதமான கலைஞர். அவரி நாங்கள் மீளப் பெற்றேயாகுவோம்” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலாவின் மகன் எஸ்.பி.சரண் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் விடுத்த அறிவித்தலில், “தந்தையார் இன்னும் சுவாசக் கருவியின் ஆதரவில் தான் இருக்கிறார், எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் அவரை மிக மிகத் திறமையாகக் கவனித்துவருகிறார்கள், உங்கள் பிரார்த்தனைகள் எங்களுக்குத் துணைபோகின்றன, தயவுசெய்து தொடர்ந்து பிரார்த்தியுங்கள். எங்கள் குடும்பம் உங்கள் எல்லோருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Three different ways to become a TNM member – check them out now!.

Print Friendly, PDF & Email