• Post category:INDIA
  • Post published:August 26, 2020
Spread the love

இசையைக் கேட்டு தாளம் போடுகிறார்; பாட்டுப்பாட முயற்சிக்கிறார்

சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அபிமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் வெலியிட்டுள்ள யூ டியூப் காணொளி மூலம் அறிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.பாலா, தொடர்ந்தும் சுவாசக் கருவியின் துணையுடனும், ECMO எனப்படும் இரத்த சுத்திகரிப்பு நடைமுறையுடனும் இருந்தாலும் அவர் சுய நினைவுடன், தன்னைச் சூழ நடைபெறும் விடயங்களை அவதானித்து எதிர்வினையாற்றும் நிலையில் உள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலை தேறுகிறது என்பதன் அறிகுறியாக, அவர் முதல் தடவையாக இசையைக் கேட்டு ரசிக்க ஆரம்பித்தது மட்டுமல்ல பாடவும் எத்தனிக்கிறார் என மருத்துவமனை வட்டாரம் அறிவித்திருக்கிறது.

“நேற்று முந்தினம் இருந்ததைவிட அவர் உடல்நிலை மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளது. சுவாசப்பைகளின் தொழிற்பாடு சிறிதள்வு முன்னேறியிருக்கிறது. மயக்க மருந்துகளின் துணை இல்லாமலேயே அவர் இலகுவாக செயற்படுகிறார். ஆறுதலாகவேனும் அவர் படிப்படியாக முன்னேறுகிறார்” என எஸ்.பி.சரண் தனது காணொளியில் தெரிவிக்கிறார்.

“திங்களன்று, எழுத்து மூலம் தகவல் தர முயன்றபோது அவரால் பேனையைக்கூட கைகளால் பிடித்திருக்க முடியவில்லை. ஆனால் பின்னர் அவரால் எழுத்து மூலம் தனது எண்ணங்களைத் தெரிவிக்க முடிந்தது. மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு பத்திரிகையொன்றை வாசித்துக் காட்டியபோது அவர் அதை விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டார். இசையைக் கேட்டு மகிழ்ச்சியாக அதற்குத் தகுந்த வகையில் கைகளால் தாளம் போடுகிறார். பாடவும் முயற்சிக்கிறார். இவையெல்லாம் விரைவில் குணம்பெறுவார் என்பதற்கான அடையாளங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவமனையின் மருத்துவசேவைகளுக்கான உதவிப் பணிப்பாளர் அனுராதா பாஸ்கரன் அவர்களது அறிக்கையின்படி, “பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருக்கிறது, அறிவு தெளிந்த நிலையில் தன்னைச் சுற்றி நடப்பவற்றை கிரகிக்கும் நிலையில் உள்ளார்; தொடர்ந்தும் அவர் பல்துறை விற்பன்னர்களால் காலக்கிரமமாக அவதானிக்கப்பட்டு வருகிறார்” என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மகன் எஸ்.பி.சரண் புதனன்று வெளியிட்ட காணொளி (நன்றி: ‘தி நியூஸ் மினிட்’)
Print Friendly, PDF & Email