எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்தார்!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்தார்!

Spread the love

ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் இசையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ‘S.P.B.’ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று (வெள்ளி) மெளனமாக நீங்கிவிட்டார். அவர் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.எம். மருத்துவமனையில் இன்று வெள்ளி (செப்.25), அதி காலை இந்திய நேரம் 1:04 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்தார்! 1
எஸ்.பி.பாலாவின் வீட்டிற்கு முன்னால் அவரது ரசிகர்கள் – படம்: கே.முரளி குமார்

74 வயதுடைய அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் வைத்து அவரது திருமணநாளைக் கொண்டாடியிருந்தார். ஆப்போது அவரது உடல்நிலை தேறியிருந்ததுடன், வீடு திரும்புவதற்கு ஆவலாக இருந்தார் எனவும், மகன் எஸ்.பி.சரண் தெரிவித்திருந்தார். இதுவே அவர் கலந்துகொண்ட இறுதியானதும் மகிழ்ச்சியானதுமான வைபவம். தன் ‘நிலாவை அழைத்து அருகில் வைத்துக்கொண்ட’ நிகழ்வு.

1969 இல் வந்த ஒரு சஞ்சிகையில் “ஆயிரம் நிலவை அழைத்தவர்” என்ற தலைப்புடன் எஸ்.பி.பாலாவின் கருப்பு வெள்ளைப் படமொன்றுடன் அவரைப் பற்றி சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது. கண்களுக்குக் கீழ் கருப்பு வளையங்களுடன், கன்ன உச்சியோடும், என்றும் மாறாத அதே புன்னகையுடனும் அவரது படம் வெளியாகியிருந்தது.

கே சங்கருடன், எம்.ஜி.ஆர். இணைந்து தயாரித்த அடிமைப்பெண் படத்தில் “ஆயிரம் நிலவே வா” என்ற அவரது முதலாவது தமிழ்த் திரையிசையை பி.சுசீலாவிடன் சேர்ந்து பாடியிருந்தார்.

அவர் முதன் முதலில் திரைக்காகப் பாடியது 1966 இல் வெளிவந்த தெலுங்குத் தயாரிப்பான சிறீ சிறீ மரியாத ரமணா என்ற படத்தில். தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், இந்தி என்று 16 மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவரது இறுதிப் பாடல், டி.இமான் இசையில் ரஜினிக்காக அவரது அண்ணாத்த படத்தில். எம்.ஜி.ஆர் இந் அடிமைப்பெண் மூலம் தமிழ்த் திரையில் பூரணையாக முகம் காட்டிய அந்த நிலா, ரஜினியின் அண்ணாத்த யே தன் அமாவாசை எனக்கூறிச் சென்றுவிட்டது.எஸ்.பி.பி. சிறந்த பின்னணிப் பாடகர் மட்டுமல்ல, சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் இருந்திருக்கிறார். பல தமிழ்ப் படங்களைத் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யும்போது அங்கு அவரது குரல் தான் ஒலிக்கும். நடிகர் கமலின் பல படங்களுக்கு, தெலுங்கில், பாலா தான் குரல் வழங்கியிருப்பார். அத்தோடு சில படங்களிலும் பாலா நடித்திருக்கிறார்.

சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தில் பாடிய பாடல்களுக்காக அவருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. இப் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் கர்நாடக மெட்டுக்களைக் கொண்டிருந்தாலும், அவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்றவரல்ல. தமிழில், மின்சாரக் கனவு படத்தில் பாடிய, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான, ‘தங்கத் தாமரை’ பாட்டுக்கு அவருக்கு விருது கிடைத்திருந்தது.

சிறீபதி பாடித அரத்யூல பாலசுப்ரமணியம் என்ற இயற் பெயருடன் 1946 இல் பிறந்த பாலாவின் விருப்பம் ஒரு பொறியியலாளராக வேண்டுமென்பதே. பி.யூ.சி. யில் தேர்ச்சியடைய முடியாததால் இசைத் துறைக்கு வரவேண்டி நேரிட்டது. பாட்டுப் போட்டியொன்றில் அவர பாடியதைக் கேட்ட இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி, சிறி சிறி மரியாதா ரமணா படத்தில் பாடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கினார்.

தமிழ்ப் படங்களில் அவரது இசையைத் தூக்கி நிறுத்தியது சாந்தி நிலையம் படத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அவர் பாடிய ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாட்டு.

“எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே’ பாடலைப் பாடுவதற்கு முன் எனக்கு மலேரியா நோய் வந்துவிட்டது. அப்படியிருந்தும் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை நீக்கி விட்டு வேறெவருக்கும் அந்த சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை. “இப்படத்தில் பாடுவதாக நீ உன்னுடைய நண்பர்களுக்கெல்லாம் சொல்லியிருப்பாய். அவர்களை நீ ஏமாற்றக்கூடாது. நீ குணமடையுமட்டும் நான் பொறுத்துக் கொள்வேன்” என எம்.ஜி.ஆர். கூறியதாக பாலா நினைவுகூர்ந்திருந்தார்.பல்வேறு இசையமைப்பாளர்களோடு பணி புரிந்திருந்தாலும், இசைஞானி இளையராஜாவுடனும், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருடனும் பணிபுரிய ஆரம்பித்தபின்னர் தான் அவருடைய இசைப் பயணம் வீறு கொண்டது. தன்னுடைய உரிமம் கோரிய பாடல்களை பாலா பாடக்கூடாது என இளையராஜா கோரியதுடன் இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் பின்னர் ஒரு பொது நிகழ்வின்போது அவர்கள் இருவரும் மீண்டும் நட்பை வளர்த்துக் கொண்டார்கள்.

‘எஸ்.பி.பி’ எனச் செல்லமாகவும், ‘பாடும் நிலா’ என அவரது ரசிகர்களாலும் அழைக்கப்பட்ட பாலா பழகுவதற்கு மிகவும் இனிமையான ஒருவர். முகம் சுளிக்காது எப்போதும் புன்சிரிப்போடு பக்கத்தில் இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் ஒரு மனிதர். அவரது இசைப் பயணத்தில் அவர் சந்தித்த எவருமே அவரைப் பற்றி இழிவாக எதையுமே பேசியிருக்கவில்லை என்பது அவரது குணாதிசயத்தைப் பறைசாற்றும் ஒன்று.

“நான் வாழ்வதற்கு ஆசைப்படுபவன். இறப்பதற்கு எனக்கு விருப்பமில்லை” எனக் கூறியவர், கொறோணோவைரஸ் பற்றி மற்றவர்களுக்குத் தன் இசை மூலம் அறிவுரை கூறியதற்காக அது அவரைப் பழிவாங்கியிருக்கிறதா?

மனைவி, மகன், மகள் ஆகியோரையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் அவர் விட்டுச் செல்கிறார். மகனும், மகளும் அவர் பாதையில் சமாந்தரமாகப் பயணிக்கும் பின்னணிப் பாடகர்கள். அவர் பாதையில் நடப்பதற்கு இனி எவரும் இல்லை. தனித்துவமான இசையால் தடம்பதித்த அந்த ஒற்றையடிப் பாதை ஒருபோதும் தூர்ந்துவிடப் போவதில்லை.

சென்று வாருங்கள்!

Print Friendly, PDF & Email