எழுத்தாளர் அம்பைக்கு டாட்டா இலக்கிய வாழ்நாள் சாதனை விருது
‘அம்பை’ என்ற புனை பெயரில் எழுதும் எழுத்தாளர் சீ.எஸ்.லக்ஷ்மி இற்கு 2023 ம் ஆண்டிற்கான டாட்டா இலக்கிய வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பாயில் வாழும் இவர் பெண் விடுதலை சார்ந்த விடயங்களில் இன்றுள்ள முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராவார். “தமிழ் புனைவை, குறிப்பாக சிறுகதை வகைகளை, அமைப்பிலும் மொழியிலும் மாற்றியமைத்தவர் அம்பை. இந்திய இலக்கியத்துக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடக்கூடிய ஒன்று” என விருதுத் தெரிவுக்குழு அதிகாரி ஒருவர் தெர்வித்திருக்கிறார். 2021 இல் அம்பைக்கு சாகித்திய அக்கடெமி விருதும் வழங்கப்பட்டிருந்தது.
“பெண்கள் பற்றிய அவரது கதைகளில் காதல், உறவுகள், தேடல்கள், பயணங்கள் போன்றவற்றை மிகவும் கூர்மையாக ஆராய்பவர்” என விருது விழாவின் கூட்டுப் பணிப்பாளர் ஏமி ஃபெர்ணாண்டெஸ் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் 1944 இல் பிறந்த அம்பை பங்களூர் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் இள, முதுமானிப் பட்டங்களைப் பெற்ற பின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கற்று கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். தனது ஆய்வுகளை மேற்கொண்டிருந்த காலத்திலேயே பல்வேறுபட்ட பிரசுரங்களுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவுகளை எழுதி வந்தார்.
சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற அவரது நூலுக்கு இந்தியாவின் அதி உச்ச இலக்கிய விருதான சாஹித்திய அக்கடெமி விருது வழங்கப்பட்டது. அம்பையின் பெரும்பாலான தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் லக்ஷ்மி ஹோல்ஸ்ட்றோம் அவர்களால் மொழி மாற்றப்பட்ட வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற நூல் மிகவும் வரவேற்பைப் பெற்றது.
பெண் விடுதலைச் செயற்பாட்டாளர்களில் முன்னோடியான அம்பை SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்றொரு அமைப்பை உருவாக்கியுள்ளார். பல் வகையான எழுத்து, ஒளி, ஒலி வடிவங்களில் பிரதிகளைக் கொண்டிருக்கும் இது இந்தியாவிலேயே பெண்களுக்கான விடயங்களை ஆவணப்படுத்தும் முதல் அமைப்பு ஆகும்.
இதற்கு முன்னர் டாட்டா வாழ்நாள் இலக்கிய சாதனை விருதைப் பெற்றவர்கள்: மகேஷ் எல்குன்ச்வர், அனித்தா தேசாய், றஸ்கின் பொண்ட், ஷாந்தா கோகலே, சேர் மார்க் ரலி, கிரிஷ் கர்னாட், அமித்தாவ் கோஷ், கிரான் நாகர்கார், எம்.டி. வாசுதேவன் நாயர், குஷ்வந்த் சிங், சேர் வி.எஸ்.நாய்போல் மற்றும் மஹாஷ்வேத தேவி ஆகியோர்.