Health

எளியமுறை விளக்கம் | ஃபைசர் , மொடேர்ணா தடுப்பு மருந்துகள் எப்படிச் செயற்படுகின்றன?


அகத்தியன்

கோவிட் தடுப்பு மருந்துகள் பலவும் உலகின் பல இலட்சம் மக்களில் பரிசோதனை செய்யப்பட்டு தற்போது உத்தியோகபூர்வமான ‘தடுப்பூசியாக’ மனித உடல்களில் செலுத்தப்படுவது ஆரம்பித்துவிட்டது. பிரித்தானியாவின் 91 வயதுள்ள மூதாட்டியான மார்கரெட் கீனன், அந்த முதலாவது மனித உடலுக்குரியவர் என்ற பெருமையைப் பெறுகிறார். கனடாவில் ரொறோண்டோவில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், கியூபெக்கில் நெடுநாட் பராமரிப்பு மூதாட்டி ஒருவருக்கும் ஃபைசர் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் 70 மில்லியன் மக்களில் தொற்றி, 1.5 மில்லியன் மக்களைக் கொன்ற கொறோணாவைரஸை ஒழித்துக்கட்டுவதற்கு அதன் பரவலைக் கட்டுப்படுத்துவது முதலாவது படி. அக் கட்டுப்பாட்டையே தடுப்பு மருந்து செய்கிறது.

இத் தடுப்பு மருந்துகளைப் பல நிறுவனங்கள் அவசரம் அவசரமாகச் செய்து அரசாங்கங்களின் அனுமதியோடு மனிதரில் பிரயோகிக்க ஆரம்பித்து விட்டன. ஃபைசர்/பயோஎன்ரெக், மொடேர்ணா, அஸ்ட்றாசெனிக்கா, ஸ்புட்னிக் 5 என்று பல மருந்துகள், சில பாவனைக்கு வந்தும், சில அனுமதிக்காகக் காத்துக்கொண்டும் உள்ளன.

இம் மருந்துகள் எப்படிச் செய்யப்படுகின்றன, இவற்றினால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றி விளக்குகிறது இக்கட்டுரை.



தடுப்பு மருந்துகளின் பின்னணி

இதுவரை நாம் அறிந்த தடுப்பு மருந்துகள், இறந்த அல்லது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரிகளை (வைரஸ்களை) உடலில் செலுத்துவதன் மூலம் செய்யப்பட்டு வந்தது. உள்ளே வந்த போலி வைரஸ்களை நிஜமென நினைத்து உடல் தானாகவே அக் கிருமிகளை அழிப்பதற்கான வழிவகைகளைச் செய்துகொள்கிறது என்பதே இதன் பின்னணி.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பு மருந்துகளான பைசர், மொடேர்ணா, அஸ்ட்றாசெனிக்கா ஆகிய மருந்துகளின் செயற்பாடு வித்தியாசமானது. ஃபைசரும், மொடேர்ணாவும், இறந்த அல்லது செயலிழக்கப்பட்ட வைரஸ்களுக்குப் பதிலாக, mRNA எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பாவிக்கின்றன.

mRNA என்றால் என்ன?

mRNA என்பது மனிதக் கலங்களுள் ‘கூரியர்’ (courier) வேலை செய்யும் ஒரு புரதம். எமது உடலில் சகல தேவைகளையும் நிகழ்த்துவது புரதங்கள். ஒவ்வொரு தேவைக்கேற்ப அப் புரதங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவற்றைத் தயாரிப்பதற்கென பிரத்தியேக ‘தொழிற்சாலைகள்’ பல கலத்தினுள்ளேயே இருக்கின்றன. இதற்குப் பெயர் ‘றைபோசோம்’ (ribosome).

இப் புரதங்களைச் செய்வதற்கான செய்முறைகள் கருவினுள் உள்ள DNA யில் சங்கேத மொழியில் (coding) மரபணு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட புரதத்துக்கான ‘ இக் குறிப்பை’ (recipe’) DNA பிரதி செய்து, அதை றைபோசோமுக்கு விளங்கும் ‘மொழியில்’ மாற்றி mRNA மூலம் றைபோசோம் தொழிற்சாலைக்கு அனுப்புகிறது. அக்குறிப்பிலுள்ளவாறு புரதத்தை அத் தொழிற்சாலை தயாரிக்கிறது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட புரதங்கள் தான், இறந்த கலங்களைப் புதுப்பித்தல் முதல், செய்திப் பரிவர்த்தனை வரை உடலின் பல தொழிற்பாடுகளையும் செய்கிறது. செய்கிறது.



வைரஸின் தொழிற்பாடு

SARS-CoV-2 என்ற கோவிட் நோயைத் தரும் வைரஸ் மிகவும் கெட்டித்தனமான ஒன்று. அதை RNA வைரஸ் என்று சொல்வர். கொழுப்பினாலான் கோதுக்குள் சுருண்டு படுத்திருக்கும் RNA யினாலான இப் பிறவி தானாக இனப்பெருக்கம் செய்ய மாட்டாது. அதற்காக அது மனிதக் கலங்களுள் புகுந்து தன்னைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் மனிதரை அழித்துக்கொள்கிறது.

இதைச் சாதிப்பதற்கு அது பல ஏமாற்று வேலைகளைச் செய்கிறது. முதலாவதாக வைரஸ் இனப்பெருக்கத்தைச் செய்ய அது மனிதக் கலத்துக்குள் போக வேண்டும். மனிதக் கலத்தின் வெளியுறை இரட்டைச் சுவர்களைக் கொண்டது. இதிலுள்ள காவல் நிலையங்களுடன் கூடிய பாதைகள் உண்டு. இப் பாதைகளினூடு வைரஸ் உள்ளே நுழையவேண்டும். வைரஸ் எவ்வளவு சிறியதாகவிருக்கிறதோ அவ்வளவு இலகுவாக அது புகுந்து கொள்ளலாம். இதற்காக வைரஸ் தன்னைச் சிறிதாக்கிக் கொள்கிறது. இச் சிறிய (நனோ மீற்றர்) துளைகளினூடு உள்ளே செல்வதற்காக வைரஸ் தனக்கு முக்கியமான சில ‘கருவிகளை’ மட்டுமே தனது ‘bag pack ‘ இல் வைத்துக்கொண்டு வருகிறது.

கலம் தனது வேறு பொருள் விநியோகத்துக்காகக் காவலுடன் கூடிய சில பாதைகளை வைத்திருக்கிறது. இவற்றைத் துறைமுகங்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்படியான துறைகளில் ஒன்றுதான் ACE II receptor. இருதயவியாதி, சிறூநீரக வியாதி போன்ற வியாதிகள் உள்ளவர்களது உறுப்புக்களில் இந்த receptors அதிக அளவில் உள்ளன. அதனால் தான் அவர்கள் இவ்வியாதியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

எப்போதும் பூட்டப்பட்டிருக்கும் இத் துறைமுகத்தைத் திறக்கும் சாவியை எப்படியோ இந்த வைரஸ் எடுத்துக்கொண்டுவிட்டது. இத் துறையின் அமைப்பை அறிந்துவைத்திருக்கும் வைரஸ் அந்த இடத்தில் போய் தன்னை நங்கூரமிட்டுக் கொள்கிறது. மேலே கூறியபடி, வைரஸின் கோது கொழுப்பினாலானது. மனிதக் கலங்களின் வெளிச் சுவரும் கொழுப்பினாலானது. கொழுப்பு இலகுவாகக் கொழுப்பில் ஒட்டிக்கொள்ளும்.

அடுத்த கட்டமாக உள்ளே துளைத்துக்கொண்டு போவதற்கு அது பாவிக்கும் கருவி தான் கூர்ப்புரதமென்னும் spike protein. இக் கருவியையும் வைரஸ் தன்னுடன் கொண்டு வருகிறது. இப் புரதத்தினால் துளையிட்டு வைரஸ் மனிதக் கலங்களினுள் செல்கிறது.

உள்ளே போனதும் முதல் வேலையாகத் தன் கொழுப்புச் சட்டையைக் கழற்றி விடுகிறது. இதற்கும் கலத்தின் இன்னுமொரு தொழிற்பாட்டைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது.



சட்டையைக் கழற்றியதும் அதனுள் இருக்கும் RNA சுருள் (gnome) இரண்டு விடயங்களை முதலில் செய்கிறது. அதற்கு முதல் மனிதக் கலங்களின் இன்னுமொரு செயற்பாடு பற்றிக் கூற வேண்டும்.

மனித உடலில் ஒரு பிறபொருள் (வைரஸ்) உட்புகுந்ததும், மனிதக் கலங்கள் உடல் முழுவதுக்கும் இப் பிற பொருளின் வரவு பற்றிய செய்தியை அனுப்பி விடுகிறது. இதற்கு அது பாவிப்பது interferon என்னுமொரு புரதம். Interferon மூலம் செய்தி உடல் முழுவதும் சென்றதும், உடலில் பரம்பரை பரம்பரையாக வரும் எதிர்ப்பாற்றல் (innate immune system) உடனே தன் படையை அனுப்பிவிடுகிறது. அதற்கு எதிரியை இனம் கண்டு தாக்கும் ஆற்றல் இல்லை. வந்த எல்லாவற்றையும் தாக்கும்.

உடலின் இந்தத் தொழிற்பாட்டையும் வைரஸ் அறிந்து வைத்திருக்கிறது. அதற்குத் தக்கபடி தனது அடுத்த நடவடிக்கைகளை அது திட்டமிடுகிறது.

இப்போ உடலுள் புகுந்து சட்டையைக் கழற்றி வெளியே வந்த RNA genome தனது செயற்பாட்டை ஆரம்பிக்கிறது. முதலில் அது செய்வது, மனிதக் கலம் interferon மூலம் செய்தியை அனுப்பாமல் முடக்கி விடுவது. (புரட்சிக்காரர் முதலில் வானொலி / ஊடக நிலையங்களைக் கைப்பற்றுவது போல). இரண்டாவதாகச் செய்வது றைபோசோம்கள் கலத்தின் கட்டளைப்படி புரதங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டுத் தன் கட்டளைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிடுவது. இவற்றைச் செய்வதற்காக, அது கலத்தின் mRNA யை மடக்கிப் பிடித்துக்கொள்கிறது.

புரதத் தயாரிப்பிற்கான குறிப்புகளை கலத்தின் mRNA தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்கிறது எனப் பார்த்தோம். வைரஸ் இந்த mRNA யைப் பிடித்து அதிலுள்ள ‘கட்டளையை’ மாற்றி எழுதிவிடுகிறது (editing the code). இதில் மாற்றப்பட்ட பல கட்டளைகளில் interferon செய்தி அனுப்புவதைத் தடுப்பதும், புரதத் தொழிற்சாலை கலத்தின் ஏவலுக்கேற்பத் தொழிற்படாமல் செய்வதும் அடங்கும். அத்தோடு, தன்னைப் போல் பிரதிகளை மில்லியன் கணக்கில் உருவாக்கும்படியான கட்டளையையும் அது எழுதிவிடுகிறது.

இப்படிக் கலங்களை நிரப்பிய வைரஸ்கள் கலத்தின் சுவரை உடைத்துக்கொண்டு வெளிவரும்போது கலங்களும், உறுப்புகளும் சிதைவடைகின்றன. நுரையீரலின் கலங்கள் இப்படிச் சிதைவடையும்போது போதுமான உயிர்வாயு உடலுக்குள் எடுக்கப்படுவதில்லையாதலால் நோயாளிகள் சுவாசிக்கச் சிரமப்படுகிறார்கள்.



உடலின் பாதுகாப்புப் பொறிமுறை

நமது உடலில் இரு பாதுகாப்புப் பொறிமுறைகள் உள்ளன. ஒன்று நமது பிறப்புடன் எம்மோடு வருவது. எம் தாய்மாரினால் bag pack இல் எமது பாதுகாப்புக்காக வைத்து அனுப்பப்பட்டது. இதை innate immune system என்பார்கள். ஒருவரது உடலில் பிறபொருள் (கிருமி) தொற்றிக்கொள்ளும்போது முதலில் வரும் காவற்படை innate immunes system தான். அதற்கு எதிரியை இன்னாரென்று அடையாளம் காணத் தெரியாது. வந்த எல்லாவற்றையும் அழிக்கவே முயற்சி செய்யும். மற்றது, நாமாக, நமது வாழ்வு முறைகள், சாப்பாட்டுப் பழக்க வழக்கங்கள், அப்பியாசங்கள் போன்றவற்றால் தேடிக்கொள்வது. இதை adaptive immune system என்பார்கள்.

பல தடுப்பு மருந்துகள் அல்லது நோய்த் தொற்றின் மூலம் ஒருவர் பெறும் தடுப்பாற்றல் (herd immunity) இந்த adaptive immune system வகையைச் சேர்ந்தது. இந்த நிர்ப்பீடனச் செயற்பாட்டின்போது, உடலினால் தயாரிக்கப்பட்ட விசேட பாதுகாப்பு படைகள் எதிரிகளை அடையாளம் கண்டு அவைகளை அழிக்கும் வழிகளை மேற்கொள்ளுகின்றன. இவற்றையே நாம் பிறபொருளெதிரிகள் (antibodies) என்கிறோம். இவ் விசேட பாதுகாப்புப் படைகள் innate system போலவல்லாது, அடையாளம் காணப்பட்ட எதிரிகளை மட்டுமே குறிவைக்கின்றன. ஒவ்வொரு எதிரியும் தனக்கெனத் தனியான அடையாளங்களைக் கொண்டுள்ளன. இவற்றை antigen என்பார்கள். இப்படியான antigen களைக் கண்டதும் அவற்றை அழிப்பதற்கென B-Cells என்னும் உடலின் பாதுகாப்பு பிரிவினால் அனுப்பப்படுபவையே பிறபொருளெதிரிகள் (antibodies). எனவே தான் ஒவ்வொரு கிருமிக்கும் ஒவ்வொரு பிறபொருளெதிரி தேவைப்படுகிறது.

இறந்த அல்லது செயலிழக்கப்பட்ட வைரஸ்களை உடலுள் அனுப்பும்போது அவற்றில் இருக்கும் antigen களை உடலின் பாதுகாப்பு பிரிவு ஞாபகத்தில் வைத்திருக்கும். அதே போன்ற நிஜமான கிருமிகள் உடலுள் நுழையும்போது அவற்றைப் பாதுகாப்புப் படைகள் கொன்றுவிடுகின்றன.

தடுப்பு மருந்து கொடுப்பதன் மூலம் நாம் உடலுள் கிருமியின் antigen களை அனுப்பியவுடன் உடல் தனது பாதுகாப்பு படைகளைத் தயாரித்து விடாது. அதற்கு குறைந்தது 5 நாட்களாவது ஆகும். எனவே தான் நோயுள்ளவருக்கு அருகில் சென்ற ஒருவர் பரிசோதனை செய்யப்போகும்போது பதில் negative எனக் காட்டுகிறது. காரணம் இப் பரிசோதனைகள் உடலிலுள்ள பிறபொருளெதிரிகளையே கணக்கிடுகின்றன. 5 நாட்களுக்குள் இப் பிறபொருள் எதிரிகள் அவரில் உருவாகியிருக்க மாட்டா.



பல தடுப்பு மருந்துகள் பலனற்றுப் போவதற்குக் காரணம் இந்த innate immune system தான். இறந்த அல்லது செயலிழக்கப்பட்ட வைரஸ்களை அனுப்பும்போது இந்த innate system அவற்றை எதிரிகளாக நினைத்து அழித்துவிடுகின்றன. உடல் தனது பிறபொருளெதிரிகளை உருவாக்குவதற்கான அவகாசம் கிடைப்பதற்கு முன்னரே எதிரிகள் அழிக்கப்பட்டு விடுவதனால் தடுப்பு மருந்து தனது தொழிலைச் செய்யமுடியாமல் போய்விடுகிறது.

தடுப்பு மருந்துகளின் தயாரிப்பு

மேலே குறிப்பிட்டபடி SARS-CoV-2 வைரஸ் கலங்களின் ‘துறைமுகங்களில் நங்கூரமிட்டு’ ACE II receptor கள் மூலமாகத் துளையிட்டு உள்ளே செல்கின்றன என அறிந்தோம். இவற்றின் செயற்பாட்டை நிறுத்துவதற்கு விஞ்ஞானிகள் பல வழிகளிலும் முயற்சிக்கின்றனர். அவற்றில் ஒரு வகை, வைரஸ் இறங்கும் துறைகளை ‘மருந்துகள்’ மூலம் மூடிவிடுவது. அத் துறைகளில் (கலங்களின் வெளிப்பரப்பு) கொழுப்பாக இருந்தால் மட்டுமே அவற்றில் வைரஸின் கொழுப்பு ஆடை (கோது) ஒட்டிக்கொள்ளும். எனவே அத் துறைகளில் ஒட்டிக்கொள்ள முடியாமல் செய்துவிடுவதன் மூலம் வைரஸ் கால் பதிப்பதை நிறுத்துவது. சில மருந்துகள் இம்முறையைப் பின்பற்றினாலும் innate immune system த்தின் செயற்பாட்டினால் இது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

சுயநிர்ப்பீடன மீறல் (Auto Immune Response)

உடலின் பாதுகாப்புக்கென உடலினால் உருவாக்கப்படும் நிர்ப்பீடனத்தைக் கட்டுப்படுத்துவதும் இன்னுமொரு பிரச்சினை. அதாவது உடலுக்குள் அனுப்பப்பட்ட் தடுப்பு மருந்தின் விளைவாக உடல் தேவைக்குமதிகமான நோயெதிர்ப்பாற்றலை உடல் உருவாக்கும் நிலைமைகள் (adverse over reaction) ஏற்படும்போது உடலின் பல உறுப்புகளை அது தாக்கியழிக்கத் தொடங்கி விடுகின்றது. Rheumatoid Arthritis எனப்படும் முடக்குவாதம் இந்த வகையினது. மூட்டுகளிலுள்ள மென்மையான எலும்புகள், இருதயத்தின் வால்வுகள் போன்ற மென்னெலும்புகளை நமது சொந்த பாதுகாப்பு படை தாக்கியழிக்கின்றது. எனவே ஒருவருக்கு எந்தளவுக்கு தடுப்பு மருந்து பாவிக்கப்படவேண்டுமென்பதைத் தீர்மானிக்க முடியாமல் போய்விடுகிறது. அத்தோடு ஒவ்வொருவரது உடலும் வித்தியாசமான அளவு நிர்ப்பீடன ஆற்றலைக் கொண்டது. ஒருவரில் ஏற்றப்பட்ட தடுப்பு மருந்து இன்னொருவருக்கு போதாமலோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். இதனால் தான் பல லட்சக்கணக்கானவர்களில் பல மாதங்களுக்கு பரிசோதனைகளைச் செய்ய வேண்டியுள்ளது.



mRNA தொழில்நுட்பம்

இப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக வந்திருக்கிறது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஃபைசர், மொடேர்ணா போன்ற தடுப்பு மருந்துகள். இவை கொல்லப்பட்ட அல்லது செயலிழக்கப்பட்ட வைரஸ்களைப் பாவிக்காமல், வைரஸ் கையாளும் அதே உத்தியைப் பாவித்து (அதனால் தான் இம் முறையை மருந்து என்று அழைக்காமல் தொழில்நுட்பம் என்று அழைக்கிறேன்) – அதாவது வைரஸ் எப்படி உடலின் mRNA யைத் தன்வசப்படுத்தி அதன் குறிப்பை மாற்றி எழுதி புரதத் தொழிற்சாலையைக் கொண்டு தன்னைப் பிரதி செய்து கொண்டதோ அதைவிட வைரஸுக்கும் ஒருபடி மேலே போய், ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கை mRNA யை உடம்பில் செலுத்துகிறார்கள்.

இந்த mRNA யைக் கொண்டு அவர்கள் புரதத் தொழிற்சாலையைத் தம் வசப்படுத்தி சில விடயங்களைச் சாதிக்கிறார்கள். அவற்றில் ஒன்று உடலின் இயற்கையான புரதத் தயாரிப்பிற்கான கட்டளையை மீண்டும் உடலுக்கே கொடுத்து விடுவது. இரண்டாவது வைரஸினால் நிறுத்தப்பட்டிருந்த interferon தயாரிப்பை மீளவும் அனுமதித்தல். மூன்றாவது கலங்களைக் கொண்டு விஞ்ஞானிகளுக்குத் தேவையான இன்னுமொரு புரதத்தைத் தயாரித்தல்.

அந்த இன்னுமொரு புரதம் தான் நமது வைரஸின் ‘அடையாளப் பட்டியான’ கூர்ப் புரதம் (spike protein). இது முழு வைரசோ அல்லது செயலிழக்கப்பட்ட வைரஸோ அல்ல. மாறாக வைரஸின் உடலின் ஒரு பகுதி மட்டுமே. எனவே தான் இவற்றால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படாது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த spike protein மூலம் கலங்களை நிரப்பி விட்டால், கலங்கள் தமது ஆபத்தை உணர்ந்து interferon மூலம் உடல் முழுவதும் செய்தியை அனுப்பிவிடும். உடலும் இதற்குத் தகுந்த தனது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும். இதன் காரணமாக உருவாக்கப்படும் T-Cells எனப்படும் கொலைகாரக் கலங்கள் நிஜமான கிருமிகள் வரும்போது அவற்றை ஒழித்துக்கட்டி விடுகின்றன.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இந்த செயற்கை mRNA யை விஞ்ஞானிகள் முதலில் வைரஸின் RNA யிலிருந்து தான் பிரதி செய்தார்கள். பின்னர் அதன் மரபணு வரிசையை (gnome) தமது தேவைக்கேற்ப ஆஉவுகூடத்தில் மாற்றியமைத்தார்கள் (editing). சீனாவில் தொற்று ஆரம்பித்த காலத்தில் இவ் வைரஸின் மரபணுவரிசையை (gnome) அந்நாடு மேற்குநாடுகளுடன் பகிர்ந்துகொண்டிருந்தது நமது விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.



நமது விஞ்ஞானிகள் இந்த RNA யின் மரபணுவரிசையை எடுத்து தமது தேவைகளுக்கேற்ப அவற்றை edit செய்து முற்றிலும் தமக்கு இசைவான கட்டளையை உருவாக்கி விட்டனர். இக் கட்டளையைக்கொண்ட mRNA யை அவர்கள் ஆய்கூடத்தில் செய்வதற்கு சில மணித்தியாலங்கள் மட்டுமே பிடித்தது.

எனவே, இத் தொழில்நுட்பம் மனித உடலுக்குள் செலுத்துவது ஒரு புரோகிராம் செய்யப்பட்ட ஒரு mRNA யைத் தாநே தவிர ‘மருந்துகளை’ அல்ல.

பக்க விளைவுகள்

இந்த mRNA தொழில்நுட்பத்தைப் பாவிக்கும் இரண்டு தடுப்பு மருந்துகள் ஃபைசரும், மொடேர்ணாவும் மாத்திரமே. அதற்குக் காரணம் 30 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இத் தொழில்நுட்பத்தை அறிந்த விஞ்ஞானிகளில் ஒருவர் மொடேர்ணாவிற்கும் இன்னுமொருவர் ஃபைசருக்கும் போயிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது.

வைரஸ் தனது தேவைக்காக mRNA யைத் திருத்தி எழுதித் தன்னைப் பிரதி செய்யும்போது தவறுகள் ஏற்பட்டால் சற்று வித்தியாசமான வைரஸ்கள் தோன்றலாம். இவைதான் புது strains அல்லது மாற்றமடைந்த வைரஸ்கள் எனப்படுகின்றன. ஆனாலும் வைரஸ் இதற்காக ஒரு proof reader ஐயும் தன்னுடன் வைத்திருந்து தவறுகளைத் திருத்திக் கொள்கிறது என்பது இன்னுமொரு அதிசயம்.

ஆனால் நமது விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட செயற்கை mRNA gnome இல் இப்படியான தவறுகள் ஏற்படாமல், ஆய்வு கூடத்திலேயே பல தடவைகள் proof reading செய்துகொள்ளலாம்.



நமது விஞ்ஞானிகள் மாற்றி எழுதும் கட்டளைகள் mRNA வைத்திருக்கும் பிரதிகளிலேயே தவிர ‘ஒரிஜினலில்’ அல்ல. ‘ஒரிஜினல்’ பாதுகாப்பாக DNA யில் வைத்துக் கருவினுள் ‘பூட்டப்பட்டிருக்கிறது’. அதற்கு போவதற்கு முதல் இன்னுமொரு இரட்டைச் சுவரை உடைக்க வேண்டும். எனவே gene editing என்ற விஞ்ஞானிகளின் செயற்பாடு ‘ஒரிஜினலை’த் தொடமாட்டாது என்பதனால் நாம் பூதங்களை உருவாக்கிவிடுவோம் என்று அஞ்சத் தேவையில்லை.

இத் தொழில்நுட்பத்தால் பல நன்மைகளை உலகம் அடைந்துள்ளது. இத் தடுப்பு மருந்துகளை விரைவாகவும், மலிவாகவும் தயாரித்துக் கொள்ளலாம். அதே வேளை, ஏதாவது பிசகுகள் ஏற்பட்டால் உடனேயே ஆய்வுகூடத்தில் அவற்றைத் திருத்தி விடலாம். முந்திய தடுப்பு மருந்துகளைப் போல் பல இலட்சம் பேரில், பல வருடங்களுக்கு பரிசோதிக்கத் தேவையுமில்லை.

இதைவிட இன்னும் மிக அற்புதமான வெளிப்பாட்டை இத் தொழில்நுட்பம் தந்திருக்கிறது, எந்தவொரு நோய்க் கிருமிக்கும் உடனடியாகத் தடுப்பு மருந்தை உருவாக்கவும், தீர்க்கப்படமுடியாத புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் இத் தொழில்நுட்பம் மூலம் மிக விரைவில் முடிவு காணப்படும் என்ற நம்பிக்கையையையும் இத் தொழில்நுட்பம் எமக்குத் தந்திருக்கிறது.

இம் மருந்துகளைப் பேணிப் பாதுகாப்பதில் தற்போது சில சிரமங்களுண்டு. ஃபைசர் -70 பாகை செல்சியஸிலும், மொடேற்ணா -20 பாகை செல்ஸியஸிலும் பாதுகாக்கப்படவேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். உயர் வெப்பநிலைகளில் அவை சிதைவடையலாமென்று கூறப்படுகிறது. அதற்கும் விரைவில் தீர்வுகளை அவர்கள் கண்டறிவார்கள் என நம்பலாம்.

அஸ்ட்றா செனிக்கா mRNA தொழில்நுட்பத்தைப் பாவிக்கவில்லை என்றாலும் அதுவும் பிறபொருளெதிகளுடன் T-Cells ஐயும் உற்பத்தி செய்கின்றன எனப்படுகிறது. ஆனால் அதன் செயற்திறன், ஏனைய இரண்டைப் போலவல்லாது (95%), 62% எனக் கூறப்படுகிறது. இதை முன்னேற்ற, ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இத்தனை அழிவுகளையும் உலகுக்குத் தந்த கொறோணாவைரஸ் உலகுக்கு விட்டுப் போகும் மிகச் சிறந்த பரிசு இந்த mRNA தொழில்நுட்பம். இனிமேல் விஞ்ஞானிகளுக்கு sky is the limit!