எறும்புண்ணி விலங்கிலிருந்து கொறோனாவைரஸ் தொற்றியது | சீன விஞ்ஞானிகள்

பெப்ரவரி 7, 2020

பங்கோலின் எனப்படும் ஒருவகை எறும்புண்ணி விலங்கிலிருந்து கொறோனாவைரஸ் மனிதர்களுக்குத் தொற்றியிருக்கிறதென சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இப் புதிய ரக வைரஸ் (2019 – nCoV) இன் ஆதி மூலம் வெளவால்களாக இருந்தபோதிலும் அது நேரடியாக மனிதருக்குக் தொற்றவில்லையென அவர்கள் கூறிவந்தார்கள். தற்போது அந்த இடைநிலை விலங்கை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பாலூட்டி விலங்கான பங்கோலின் உலகினில் அரிதாகிவரும் ஒரு இனமாகும்.

இதுவரை 630 பேர் இந் நோயினால் மரணமடைந்தும், 31,000 பேர் நோயின் தொற்றுக்குள்ளாகியும் இருக்கிறார்கள். குறைந்தது இருபத்தைந்து நாடுகளுக்காவது நோய் பரவியிருக்கிறது.

ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் காணப்படும் உடும்பினத்தைப் போல உடலெல்லாம் செதில்களைக் கொண்ட இப் பிராணியைச் சீனர் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இதிலிருந்து தான் கொறோனவைரஸ் மனிதருத்துத் தொற்றியிருக்கச் சாத்தியமுண்டென தென் சீனா விவசாயப் பலகலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள கருதுகிறார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலுள்ள விலங்குப் பண்னையொன்றிலிருந்து இவ் வைரஸ் மனிதருக்குத் தொற்றிக்கொண்டதெனவும், அதன் மூலம் வெளவால்கள் எனவும் மரபணுப் பரிசோதனை மூலம் நிறுவியிருந்தாலும், வெளவால்களுக்கும் மனிதருக்குமிடையில் இன்னுமொரு காவி இருந்திருக்கவேண்டுமென விஞ்ஞானிகள் உறுதியாக நம்பியிருந்தனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளைப் பரிசோதனை செய்த விஞ்ஞானிகள் இறுதியில் பங்கோலின் விலங்கில் காணப்பட்ட வைரஸ் இற்கும் மனிதரைக் கொன்றுவரும் 2019-nCoV வைரஸிற்குமிடையில் 99 வீதம் ஒற்றுமையிருப்பதாக மரபணுப் பரிசோதனை மூலம் (genome sequencing) கண்டுபிடித்திருக்கிறார்கள் என சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி ஸ்தாபனமாகிய சின்ஹுவா தெரிவித்திருக்கிறது.

உலகின் அதிகம் ‘கடத்தப்படும்’ விலங்கான பங்கோலின், ஆசிய, ஆபிரிக்கக் காடுகளிலிருந்து கடந்த பத்து வருடங்களில் 1 மில்லியன் அளவில் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதென சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்புத் தெரிவிக்கிறது.

சீனாவிலும், வியட்னாமிலும் இவ் விலங்கின் செதில்களை மருந்து தயாரிக்கப் பாவிக்கும் அதே வேளை அதன் இறைச்சியை உணவுக்கும் பாவிக்கின்றனர்.

காட்டு விலங்குகளின் விற்பனையைச் சீனா சென்ற மாதம் தற்காலிகமாகத் தடைசெய்து வைத்துள்ளது.

பாதுகாக்கப்படவேண்டிய, அருகிவரும் விலங்குகளை மருந்துத் தேவைகளுக்காக சீனர்கள் பாவிப்பதை அனுமதிப்பதாக உலக விலங்கினப் பாதுகாப்புச் சங்கம் குற்றஞ்சாட்டி வந்துள்ளது.

2002-2003 காலப்பகுதியில் பலனூற்றுக்கணக்கானவர்களைக் கொன்ற சார்ஸ் வைரஸும் வெளவால்களிலிருந்து ஆரம்பித்து காட்டுப் பூனைகள் மூலம் மனிதர்களுக்குத் தாவியிருந்தது.