எறும்பின் மனதைக் கட்டுப்படுத்தி இனத்தைப் பெருக்கும் பூஞ்சணம்
விஞ்ஞானம்
அகத்தியன்
கோவிட் பெருந்தொற்று வந்ததிலிருந்து உலகில் இந்த நுண்ணுயிர்களின் சாகசங்கள் பற்றிப் பாமரரும் அறியுமளவுக்கு நிறைய தகவல்கள் வந்தவண்ணமிருக்கின்றன. “நுண்ணுயிர்களின் உலகத்தில் தான் நாம் வாழ்கிறோமே தவிர எமது உலகத்தில் அவை வாழவில்லை” என இப் பெருந்தொற்றின் ஆரம்பத்தில் விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். கோவிட்டின் தொந்தரவிலிருந்து விடுதலை பெற நாம் இப்போது அதனோடு சமரசம் செய்திருக்கிறோம். எம்மைப் போலவே நுண்ணுயிர்களும் இயற்கையின் படைப்பு. வாழ்வதற்கான கருவிகளை எமக்குத் தந்ததுபோல் இயற்கை அவற்றுக்கும் கொடுத்திருக்கிறது.

மனிதர் தமக்குத் தேவையான பலவிதமான மருந்துகளை மூலிகைகளிலிருந்து பெறுவதற்குக் காரணம், இம் மூலிகைகள் பிற உயிர்களிலிருது தம்மைக் காப்பாற்றுவதற்காகத் தமது பட்டைகளில் அல்லது இலைகளில் உருவாக்கி வைத்திருக்கும் பதார்த்தங்களே மனிதர் தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் உதவுகின்றன. தலையிடி முதல், இரத்தத்தை மென்மையாக்குவது வரையான தேவைகளுக்கென நாம் பொதுவாகப் பாவிக்கும் ‘அஸ்பிரின்’ (acetaminophen) என்னும் மருந்து இப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றே. இயற்கையின் சகவாழ்வு என்பது இப்படியான பல வாழ்வியல் தத்துவங்களை எமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.
பிரேசில், தென் மெக்சிக்கோ போன்ற நாடுகளில் வாழும் பல தாவரங்களுக்கு பொது எதிரியாக இருப்பது carpenter ant எனப்படும் ஒரு வகையான எறும்பு. இதிலிருந்து தம்மைக் காப்பாற்ற பல தாவரங்கள் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பது பூஞ்சணங்களுடன்.
ஹொலிவூட் படங்களில் வரும் ஒருவரின் மனதின் கட்டுப்பாட்டைத் தன் கையில் எடுத்து அவரை நூற் பொம்மை போல விரும்பிய வேலைகளைச் செய்யவைக்கும் செயற்பாடுகளை மனிதருக்கு முன்னர், பல மில்லியன்கள் வருடங்களுக்கு முன்னரே இப் பூஞ்சணங்கள் செய்யத் தொடங்கி விட்டன.
‘ஓஃபியோகோர்டிசெப்ஸ் யூனிலற்றெறாலிஸ்’ (Ophiocordyceps unilateralis) எனப்படுவது பிரேசில் போன்ற நாடுகளிலுள்ள மழைக்காட்டு மரங்களில் ஒட்டுண்ணியாகக் காணப்படும் ஒருவகைப் பூஞ்சணம். இது தனது இனத்தைப் பெருக்குவதற்குப் பாவிக்கும் நடைமுறை மிகவும் ஆச்சரியமானதும் சாதுரியாமானதுமான ஒன்று.

இம் மரங்களில் வாழும் ‘ஆசாரி’ எறும்புகளில் முதலில் இந்த ‘ஒரு கல’ ஒட்டுண்ணிப் பூஞ்சணம் தொற்றிக்கொள்கிறது. எறும்பின் உடலிலினுள் நுழைந்ததும் அது தன்னைத் தானே பிரதி எடுத்துக்கொண்டு அப்படியான பிரதிகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து குழாய்களை உருவாக்குகின்றன. இப்படி உருவாக்கப்படும் குழாய்கள் எறும்பின் உடல் முழுவதும் பரவும், ஆனால் மூளையை மட்டும் அது பத்திரமாகப் பாதுகாக்கும். ஏனெனில் இறுதியாக அதன் செயற்பாடு எறும்பின் மூளையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. ஏறத்தாள ஒரு hijacking allathu hostile takeover என வைத்துக்கொள்ளுங்கள்.
மூளையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அவயவங்களை இப்போது இப் பூஞ்சணம் இயக்க ஆரம்பிக்கிறது. ஒரு நூற் பாவையை எப்படி ஒருவர் (puppet master) நூல்களை அசைப்பதன் மூலம் இயக்குகிறாரோ அதே போன்று எறும்பின் கால்கள் வாய் போன்றவற்றின் கட்டுப்பாட்டை பூஞ்சணம் கைப்பற்றிவிடுகிறது. இனிமேல் நீங்கள் தலையில் கைகளை வைத்தால் அதற்குப் பூஞ்சணமே பொறுப்பு.
எப்படி வாகனத்தைக் கடத்திய ஒருவர் உரிமையாளரைக் கட்டிப்போட்டுவிட்டு ஸ்டியரிங் வீலைத் தான் கட்டுப்படுத்துகிறாரோ அதே போன்று எறும்பின் மூளையை இனிமேல் பூஞ்சணமே இயக்கும். அதனால் தான் அது கவனமாக மூளையைப் பாதிக்காமல் வைத்திருந்தது. மூளையின் கட்டுப்பாட்டைத் தன் கையில் எடுத்ததும், மரத்தின் வேரிலிருந்து சரியாக 25 செ.மீ. (ஏறத்தாளத் துல்லியமாக) எறும்பை மேல்நோக்கி தாவரத்தின் தண்டில் நடக்கச் செய்கிறது. கீழே எறும்பின் புற்று (colony) இருக்கும் திசையில் மட்டுமே இந்த எறும்பு மேல்நோக்கி ஏறும். 25 செ.மீ. உயரத்தில் ஒரு இலையில் அதன் மத்திய நரம்பைக் கடித்தபடி அவ்வெறும்பு இப்போது அந்த இடத்திலேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும். இந்த 25 செ.மீ. என்பது முக்கியம் பெறுவதற்குக் காரணம் அந்த உயரத்தில் இப் பூஞ்சணம் பல்கிப் பெருகுவதற்குத் தேவையான சீதோஷ்ண நிலை (temperature and humidity) இருப்பதனால் தான்.
இலையின் நரம்பைக் கடித்தபடி இருக்கும் எறும்பின் நகர்வை இப்போது பூஞ்சணம் நிறுத்திவிட்டு தனது இனப்பெருக்கத்தில் கவனம் செலுத்துகிறது. மூளையைத் தவிர எறும்பின் உடல் முழுவதும் தனது வித்திகளை (spores) உருவாக்கியதும் எறும்பின் உடல் தாங்காது வெடித்துச் சிதறுகிறது. அப்போது கீழே விழும் வித்திகள் சரியாக கீழேயுள்ள இதர எறும்புகளின் மீது விழுந்து அவற்றையும் தொற்றிக் கொள்கின்றன. இதன் மூலம் பூஞ்சணம் தனது இனத்தை மென் மேலும் பெருக்கிக் கொள்கிறது.
இப் பூஞ்சணங்களின் வாழ்வியலை மிக நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்துவரூம் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஹியூஸ் என்னும் விஞ்ஞானியும் அவரது குழுவும் மேற்படி தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அதே வேளை வாஷிங்கடனை சேர்ந்த இன்னுமொரு ‘படிக்காத’ விஞ்ஞானியான போல் ஸ்டமெட்ஸ் என்பவர் தனது வீட்டை அழித்த ‘ஆசாரி’ எறும்புகளை முற்றாக அழித்தொழிக்க இப்படியான பூஞ்சணங்களைப் பாவித்த வரலாறும் உண்டு.