Health

எரிவாயுச் சமையல் உடல் நலத்தைப் பாதிக்கிறது

வளர்ச்சியடைந்த மேற்குநாடுகளில் மட்டுமல்ல அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் பலர் சமையலுக்கு எரிவாயுவைப் பாவிக்கிறார்கள். குளிர்காலங்களில் சில மேற்குநாடுகளில் விறகு / மரத் துண்டுகளை எரிப்பதன் மூலம் வீடுகளை வெப்பமூட்டுகிறார்கள். காற்றோட்டமில்லாத, மூடப்பட்ட வீடுகளில் இச்செய்கைகளின் போது வெளிப்படும் நச்சு வாயுக்களால் மக்களது ஆரோக்கியம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது என நியூசீலந்தில் சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

உலக ஆய்வாளர்கள் பலரால் அங்கீகரிக்கப்பட்ட இவ்வாய்வின்படி, 5 மில்லியன் மக்கள் மட்டுமே வாழும் நியூசீலந்தில் விறகு வெப்பமூட்டிகளைப் (wood burners) பாவித்தமையால் (523,000 வெப்பமூட்டிகள்) வருடமொன்றுக்கு 446 பேர் இருதய, சுவாசப்பை கோளாறுகள் காரணமாக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டும், அவர்களில் 101 பேர் மரணித்தும் உள்ளனர். அதே வேளை சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்தும் வீடுகளிலிருந்து, வருடமொன்றிற்கு சுமார் 1,000 மருத்துவமனை அனுமதிகளும், 208 பேர் மரணமடைந்தும் 3,000 குழந்தைகள் தொய்வு (ஆஸ்துமா) நோய்க்குள்ளாகியும் இருக்கிறார்கள்.


2015 இல் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி நியூசீலந்து சனத் தொகையில் 5% வீடுகளில் மட்டுமே நவீன மத்திய வெப்பமாக்கி (Central Heating) வசதிகளுடனுள்ளன. ஏனையவை, பெரும்பாலும் ஒவ்வொரு அறைகளுக்கும் ஒரு வெப்பமாக்கிகள் என்ற முறையில் வெப்பமூட்டப்படுகின்றன. மாறாக, பிரித்தனியாவில் 95% மான வீடுகளில் மத்திய வெப்பமாக்கிகள் பாவிக்கப்படுகின்றன. விறகு மற்றும் நிலக்கரி பாவனைகள் இங்கு அருகி வருகின்றன. கனடாவில் 93% மான வீடுகளில் எரிவாயுவைப் பாவிக்கும் மத்திய வெப்பமாக்கிகள் பாவனையிலுள்ளன. இவற்றிலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் பாதுகாப்பாக புகை போக்கிகள் மூலம் அகற்றப்படுகின்றன. (Image Credit: kwon-junho-CdW4DAF5i7Q-unsplash)