எரிபொருள் அமைச்சர் கம்மன்பில மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்! – எதிர்க்கட்சி கொண்டு வருகிறது

எரிபொருள் விலையேற்றத்திற்குக் காரணமானவர் எனக்கூறி, சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி, சமாகி ஜன பலவேகய தீர்மானித்துள்ளது.

இத் தீர்மானத்தைப், பாராளுமன்றத்தில், இயலுமான வரையில் மிக விரைவாகக் கொண்டுவருவதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக, சமாகி ஜன பலவேகய கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மட்டும பண்டார கூறியதாக, கொழும்பிலிருந்து வெளிவரும் ‘டெய்லி மிரர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமது இத் தீர்மானத்துக்கு ஆதரவாக, எரிபொருள் விலையேற்றத்தால் அதிருப்தியடைந்திருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் வாக்களிக்கலாமெனவும், இதர எதிர்க் கட்சிகளான த.தே.கூ., மற்றும் ஜே.வி.பி. ஆகியனவற்றிடம் ஆதரவு தரும்படி கோரப்படவுள்ளதெனெவும், பண்டார தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்துக்குக் காரணமானவர் எனக்கூறி, அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சிக் கூட்டணியான சிறீலங்க பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் ஏற்கெனவே பகிரங்கமாகக் கேட்டு வருகிறார்.

ஆனாலும், இவ்விலையதிகரிப்பு பற்றிய முடிவு, ஜனாதிபதி ராஜபக்ச, பிரதமர் ராஜபக்ச ஆகியோர் சமூகமளித்திருந்த மந்திரிசபை உப குழுக்கூட்டமொன்றிலேயே எடுக்கப்பட்டதெனவும் கம்மன்பில தெரிவித்துள்ளார். இதனால் கட்சிக்குள்ளும் வெளியிலும் அமைச்சருக்கு ஆதரவான குரல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

அத்தோடு இவ் விலையதிகரிப்பு விடயத்தில் பிரதமருக்குக் கீழ் இயங்கும் நிதியமைச்சு தான் நேரடிப் பொறுப்பேற்க வேண்டுமென அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.