Art & LiteratureNews & AnalysisSri LankaTamil Historyமாயமான்

எரித்த நாள் | யாழ். நூலகம் ஆரம்பிக்கப்பட்ட கதை…

மாயமான்

[மு.கு.: இன்று மே மாதம் 31ம் திகதி – 1981 இல் இன்றைய நாளில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்நாளை நினைவு கூர்ந்து எழுதப்படுகிறது இக்கட்டுரை. நண்பர் சிவா பூலோகம் அவர்கள் முகநூல் மூலம் அனுப்பியிருந்த பதிவு ஏற்படுத்திய ஆர்வத்தின் பெறுபேறு இது. அடி தலையில்லாத அப்பதிவின் மூலத்தைத் இணையத்தில் தேடியபோது இவ்வரலாறு கிடைத்தது. இக் கட்டுரை சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் ஆவணப்பதிவாளராகக் கடமையாற்றும் சுந்தர் கணேசன் என்பவரால் எழுதப்பட்டு ஜனவரி 14, 2014 பதிப்பான ஹிமால் சவுத்தேசியன் (Himal Southasian) என்ற இணைய சஞ்சிகையில் பிரசுரமானது பற்றி அறிந்தேன். ஆங்கிலத்தில் இருக்கும் அக்கட்டுரையின் முழுமையான வடிவத்தைத் தமிழில் இங்கு தருகிறேன் – எரிந்தவை, இழந்தவை மட்டுமல்ல இதுவும் ஆவணப்படுத்தப்படவேண்டிய ஒன்று என உணர்வதால்.]

முன்னுரை

யாழ். பொது நூலகம் யாழ்ப்பாண நகரத்தின் அதி முக்கிய அடையாளங்களில் ஒன்று. யாழ் மாநகரசபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந் நூலகம் 1933 இல் கட்டப்பட்டு, 1981 இல் சிங்கள இராணுவத்தினாலும் காடையர்களாலும் எரிக்கப்பட்டது. 1980 களில் 97,000 நூல்களையும், சுவடிகளையும் கொண்டு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக இது திகழ்ந்தது. எரிக்கப்பட்டபோது 1 மில்லியன் நூல்கள் தீக்கு இரையாகின. பல சிங்கள, தமிழ் நூல்கள் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிட்டன. 2001 இல் இந் நூலகம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு புதிய நூல்களால் நிரப்பப்பட்டது. இன்று, இலங்கையில், கொழும்பு பொது நூலகத்துக்கு அடுத்த பெரிய நூலகமாக இது திகழ்கிறது.

எரிக்கப்பட்ட யாழ் பொதுசன நூலகம்

வரலாறு

‘ஜேர்மானியத்துக்கு எதிரானவை’ எனப்பட்ட பல்லாயிரக்கணக்கான நூல்கள் நாஜி ஜேர்மனியில் எரிக்கப்பட்ட ஆண்டான 1933 ல் பிறந்தது யாழ்ப்பாண நூலகத்துக்கான கருவூலம். அப்போது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கே.எம்.செல்லப்பா என்பவர் தனது நண்பர்கள், தெரிந்தவர்களிடையே தமிழறிவைப் பெருக்குவதற்காய், தான் சேகரிக்கும் நூல்களைப் பகிர்ந்து வந்தார். இவரது பெருந்தன்மையை உணர்ந்த யாழ்ப்பாணச் சமூகத்தைச் சேர்ந்த பல பெரியவர்கள் ஒன்றுகூடி முறையான ஒரு நூலகத்தை நிர்மாணிக்க முடிவெடுத்தார்கள். அப்போதைய மாவட்ட நீதிபதியைத் தலைவராகவும், வண.டாக்டர் ஐசாக் தம்பையாவை உப தலைவராகவும், கே.எம். செல்லப்பா மற்றும் சீ.பொன்னம்பலம் ஆகியோரை இணைச் செயலாளார்களாகவும் கொண்டு ஜூன் 9, 1934 ல் ஒரு குழு உருவாக்கப்பட்டது. அதன் முதல் முயற்சியாக, தமிழ்க் கலாச்சாரம் செழிப்புற்றிருந்த, யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் பல கிராமங்களிலுமிருந்தும் இயலுமான அளவு ஓலைச் சுவடிகளைச் சேகரிக்க இக் குழு தீர்மானித்தது.

இதைத் தொடர்து, 844 நூல்களையும், 30 சஞ்சிகைகளையும் செய்தித்தாள்களையும் கொண்டு ஆகஸ்ட் 1, 1934 இல், ஆஸ்பத்திரி வீதியில் தற்போதுள்ள உப மின்சார நிலையத்துக்கு எதிராகவுள்ள ஒரு சிறிய அறையில் உத்தியோகபூர்வமாக யாழ். பொது நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. 1936 இல், யாழ் நகரமண்டபத்துக்கு அருகாமையில், பிரதான வீதியிலிருந்த ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு இந் நூலகம் குடி புகுந்தது. பாவனையாளரிடம் ரூ.3 அங்கத்துவப் பணமாக அறவிடப்பட்டது. திரு செல்லப்பா அவர்களது முயற்சியால் சேகரிக்கப்பட்ட ரூ.1,184.22 தொகையை ஆரம்ப முதலீடாகக் கொண்டு யாழ். பொது நூலகம் வீறுநடை போட ஆரம்பித்தது.

பெரியோர், இளையோர் மத்தியில் யாழ் நூலகம் மிகவும் பிரபலமாகியது. வெற்றி வெற்றியைப் பின்தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தவரின் தீராக் கற்றல் கடும்பசியைப் போக்க புதிய, நிரந்தரமான கட்டிடமொன்றை நிர்மாணிக்கவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக, யாழ் நகரின் முதலாவது நகரபிதாவான சாம் சபாபதி அவர்கள் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் நிரந்தர கட்டிடமொன்றிற்காக நிதி சேர்ப்பதர்க்காக இந்தியாவிலிருந்து பிரபல கலைஞர்களை அழைத்து இசைவிழாவுடன் கூடிய களியாட்ட நிகழ்வொன்றை யாழ்ப்பாணத்தில் ஒழுங்குசெய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத வெற்றியை இக் களியாட்டவிழா தேடித்தந்தது. புனித பத்திராசியர் கல்லூரியின் அதிபர், அயர்லாந்து தந்த அருட் தந்தை ரிமொதி எம்.எஃப். லோங், நூலக அமைப்புக்குழுவில் இடம்பெற்றிருந்தது வெற்றிக்கு மேலும் உதவியது. நூலகத்திற்கான நிதிச் சேகரிப்பில் அருட் தந்தை லோங் அயராது உழைத்தார். இதற்காகத் ‘தன்னைப் பிச்சைக் கிண்ணம் ஏந்தும் ஒருவராகச்’ சித்தரித்து கேலிச் சித்திரமொன்றை வரையும்படி அக்காலத்தில் பிரபலமான சித்திரக்காரர் கொலெட்டைக் கேட்டிருந்தார். ‘ஒரு மில்லியன் ரூபாய் நூலக நிதி’ அவரது மனக்கருவில் உருவாகிய ஒன்று.

1952இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘விநோத களியாட்ட விழா’ 68,000 ரூபாய்களைச் சேர்த்துக் கொடுத்தது. இது தந்தை லோங்கை மேலும் உற்சாகப்படுத்தியது. தனக்குத் தெரிந்த வசதி படைத்தவர்களின் கதவுகளைத் தட்டத் தொடங்கினார். அப்போதைய அமெரிக்க தூதுவர் திரு பிலிப் கே. குறோ மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சேர் செசில் சேயெர்ஸ் ஆகியோர் அள்ளி வழங்கினர்.

தந்தை லோங் அத்தோடு நின்றுவிடவில்லை. லண்டனில் பிரபல நூற் பிரசுரம் / புத்தக வியாபாரம் செய்யும் நிறுவனமான டபிள்யூ.எச். ஸ்மித் (W.H.Smith & Sons) உரிமையாளரான டபிள்யூ.ஜி.எஃப். கண்ஸ்ரோன் (W.G.F Gunstone) 25, 50 சதங்களுக்குக் கழிவு விலையில் புத்தகங்களை இறக்குமதி செய்து உதவினார். ‘ஏசியா ஃபவுண்டேசன்’ பல நூற்களைத் தானம் செய்தது.

கிடைக்கப்பெற்ற நூல்களைச் சர்வதேச நியமங்களுக்கேற்பத் தொகுக்க, டெல்ஹியிலிருந்து நூலியல் விஞ்ஞானப் பேராசிரியர் எஸ்.ஆர். ரங்கநாதனை வரவழைக்க நூலகக் குழு தீர்மானித்தது. அதே போல, நூலகத்தின் கட்டிட நிர்மாணத்தை திராவிட கட்டிடக் கலைப் பண்பாட்டிற்கமைய வடிவமைக்கும் பணியை, அப்போதய மதராஸ் அரசாங்க கட்டிடக் கலைஞர் வீ.எம். நரசிம்மனிடம் இக் குழு ஒப்படைத்தது.

மார்ச் 29, 1953 அன்று யாழ் நூலகத்துக்கான அடிக்கல் சம்பிரதாயபூர்வமாக நாட்டப்பட்டது. அது யாழ்ப்பாணத்தவரின் பொன்னாள்.

தந்தை லோங் தளராது உழைத்தார். புனித பத்திராசியர் கல்லூரியில் அப்போது லத்தீன், ஆங்கில மொழிகளைக் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் திரு எஸ்.எஃப்.சந்தியாப்பிள்ளை என்பவரை, முழு உதவிப்பணத்துடன் (Fulbright Scholarship), அமெரிக்காவில், கிளீவ்லாந்து, ஒஹாயோவிலுள்ள குயஹோகா கவுண்டி பொது நூலகத்தில் நூலியல் விஞ்ஞானத்தில் மேற்க்கல்விக்காக அனுப்பி வைத்தார்.

அருட் தந்தை லோங்கின் அயராத சேவைகளைப் பாராட்டிக் கெளரவிக்க அவரது உருவச் சிலையொன்றை நூலக முன்றலில் நிறுவப்பட்டது.

நூலகத்தின் முதலாம் கட்ட நிர்மாணம் பூர்த்தியடைந்ததும், அக்டோபர் 11,1959 இல், அப்போதைய யாழ் நகரபிதா அல்பிரெட் துரையப்பா அவர்களினால், யாழ். பொதுசன நூலகம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. பின்னர், நவம்பர் 3ம் 1967 இல் குழந்தைகளுக்கான பிரிவு திறந்துவைக்கப்பட்டது.

31 மே 1981 அன்று யாழ்ப்பாணம் துயின்று கொண்டிருந்தபோது தந்தை லோங், ஐசக் தம்பையா, கே.எம்.செல்லப்பா, சீ.பொன்னம்பலம் போன்ற பலரது அயராத உழைப்பு அனைத்தும் சுவாலையோடு சொர்க்கப் புகுந்தது. ஒரு நாட்டின், இனத்தின் கலாச்சாரத்தின், பண்பாட்டின் பெருமையை உலகுக்குக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்த ஒரு பொக்கிசத்தை அழிக்கிறோமென்பதை உணராத முடியாத ஈனப்பிறவிகள், வரலாறுகளை வாசிக்கத் தெரியாத மனிதர்கள் புதிய வரலாற்றை ஒரே இரவில் எழுதி முடித்துவிட்டார்கள். யாழ்ப்பாணம் கண்விழித்தபோது நூலகத்தின் கடைசி அத்தியாயாயம் கருகிக் கொண்டிருந்தது.

அன்றிரவு, இத் துயரச் சம்பவத்தைக் கேட்ட புனித பத்திராசியர் கல்லூரி ஆசிரியரும், மொழியியல் அறிஞருமான கலாநிதி எச்.எஸ்.டேவிட் இதயமுடைந்து இறந்து போனார். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த, இந்நூலகத்தின் பிதாமகரான தந்தை ரி.எம்.எஃப். லோங், இச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மனமுடைந்து இறந்து போனார்.

யாழ் நூலக எரிப்பு தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. யாழ்ப்பாணத்தின் கலாச்சார இதயத்தை நிரந்தரமாக நொருக்கியது. எரிக்கப்பட்ட சுவடிகளின் சாபம் இன்னும் பல தலைமுறைகளுக்கு எரித்தவர்களைச் சூழும்.

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கதை பற்றி இன்னுமொரு நாளில் கூறுவோம்….

(ஆங்கிலக் கட்டுரை ஆசிரியர் சுந்தர் கணேசனுக்கும், அவருக்கு தகவல்களை வழங்கிய சார்ள்ஸ் சந்தியாப்பிள்ளைக்கும், தனது முகநூல் பதிவின் மூலம் இவ்வரலாற்றின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய நண்பர் பூலோகத்துக்கும் நன்றிகள். இந்நூலக உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் மேலும் பலரது உழைப்பு இணைந்திருக்கலாம். அப்படியிருப்பின் அத் தகவல்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். தகவல் தெரிந்தவர்கள் editor@marumoli.com என்ற மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வைக்கலாம்- நன்றி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *