EntertainmentIndiaNews

‘என்னைத் ‘தல’ என்று இனிமேல் அழைக்கவேண்டாம் – நடிகர் அஜித் கோருகிறார்



‘தல’ என ரசிகர்களாலும், ஊடகங்களாலும் அழைக்கப்படும் பிரபல தென்னிந்திய நடிகர் அஜித்குமார் (அஜித்) தன்னை இனிமேல் ‘தல’ என அழைக்கவேண்டாமெனக் கேட்டிருக்கிறார்.

ஏஜண்ட் சுரேஷ் சந்திரா மூலம் விடுத்த பத்திரிகை அறிக்கையில், “‘தல’ அல்லது வேறெந்த அடைமொழியுமில்லாது ‘அஜித்’ அல்லது ‘அஜித்குமார்’ அல்லது ‘AK’ என என்னை அழைக்குமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் ஆரோக்கியம் நிறைந்த, மகிழ்ச்சியான, வெற்றிகரமான, மன அமைதி நிறைந்த, அடக்கமான அழகான வாழ்வை மேற்கொள்ளவேண்டுமெந நான் உளமார விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டீனா (2001) படம் வந்ததிலிருந்து ரசிகர்கள் அவரைத் ‘தல’ எனக் கொண்டாடுகிறார்கள். தமிழ்த் திரையுலகில் ‘தளபதி’ என அழைக்கப்படும் விஜேயிற்குச் சமமாக மதிக்கப்படும் ஸ்தானத்தில் அஜித் இருக்கிறார். இதனால் ‘தல’ ரசிகர்களுக்கும், ‘தளபதி’ ரசிகர்களுக்குமிடையில் சமூக வலைத் தளங்களில் மிக மோசமான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தமக்கு ரசிகர் சங்கங்களே வேண்டாம் என அடம்பிடிக்கும் வெகு சில நடிகர்களில் அஜித்தும் ஒருவர். பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் இருந்தும் தனது பெயரில் அமைந்த ரசிகர் சங்கங்களை 2011 இல் கலைத்துவிட்டார். தமிழ்நாட்டு அரசியலில் ரசிகர் சங்கங்களுக்கு இருக்கும் பெறுமதி மிக உச்சமாக இருந்தும் அஜித் எடுத்த இந் நடவடிக்கை பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருந்தது.

அஜித் தனக்கென்று சமூக வலைத்தளக் கணக்குகள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. சகல தொடர்பாடல்களையும் அவரது ஏஜண்ட் சுரேஷ் சந்திரா மூலமே செய்துவருகிறார். தனது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதுவதற்கு எதிராகக் குரலெழுப்பி வருபவர். தனது ரசிகர்கள் என்பவர்களால் அவமதிக்கப்படுபவர்களிடம், தனது வக்கீல் மூலம் மன்னிப்புக் கோரியுமுள்ளார்.

அஜித்தின் அடுத்த படம் வலிமை. எச்.விநோத்தின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முன்னோட்டங்கள் பற்றி ரசிகர்கள் அறிய ஆவலுடன் கேட்கும்போதெல்லாம் அப்படியான நெருக்குதல்களைச் செய்யவேண்டாமென்று அஜித் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘தல’ தல தான்.