“எனது வாக்குமூலத்தின்மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், பொலிஸ் அமைச்சர் இப்போது சிறைக்குள்ளிருப்பார்” – ஷெஹான் மலாக்கா


சாஹ்ரானின் மனைவி ஹாதியா கொடுத்த ஆதாரம் வத்திக்கனிடம் இருக்கிறது

நேற்று (15) குற்ற விசாரணைப் பிரிவில் அருட் தந்தை சிறில் காமினி அவர்கள் வாக்குமூலமளித்தது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மலாக்கா அவர்கள் ” தனது வாக்குமூலத்தின்மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வோரசேகரா இப்போது சிறைக்குள்ளிருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

பேராயர் மல்கம் ரஞ்சித் நினைவுத் தூபி திறப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் அமைச்சர் வீரசேகராவுக்கு நேரடி ஈடுபாடுண்டு எனவும் அதற்கான ஆதாரங்களைத் தான் குற்ற விசாரணைப் பிரிவிடம் சமர்ப்பித்திருந்ததாகவும் மலாக்கா தெரிவித்திருந்ததுடன், நீதியைப் பரிபாலிக்கும் நிறுவனங்கள் அதை எல்லோருக்கும் சமமாகப் பாவுஇக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

“சிவில் சமூகம் ஏற்கெனவே கொதித்தெழுந்து விட்டது. இளையோர் சமூகம் ஏற்கெனவே இயங்க ஆரம்பித்து விட்டது. ஊடக பலத்தையும், இராணுவ அடக்குமுறையையும் பாவித்து எங்களை அடக்கிவிடலாமென்று யாராவது நினைத்தால் அது நடக்கப் போவதில்லை. நாம் முன்னர் சொன்னது போலவே இப்போதும் சொல்கிறொம், நாம் கடவுளுக்கு மட்டுமே பயப்படுபவர்கள், திரு சுரேஷ் சாலியோ அல்லது நாட்டின் புலனாய்வுப் பிரிவுகளோ எங்களை அடக்க முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் ஆமி முஹைதீன், பொலிஸ் பெய்ஸ் மொஹமெட் நியாஸ் மற்றும் சாஹ்ரானின் மைத்துனரான அன்சார் ஆகியோரது ஈடுபாடுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் யார்? அவர்கள் புலனாய்வு அதிகாரிகள் இல்லையா? அவர்கள் உளவாளிகளாகப் பாவிக்கப்படவில்லையா?” என இவ்வூடக சந்திப்பின்போது மலாக்கா கேள்வியெழுப்பினார்.

அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, சாஹ்ரானின் மனைவி ஹாதியா கொடுத்திருந்த ஆதாரங்கள் வத்திக்கனுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் மலாக்கா மேலும் தெரிவித்தார்.