Columns

எனது தனிப்பட்ட அருகுப் பார்வையில் அன்ரன் பாலசிங்கம் – டி.பி.எஸ் ஜெயராஜ் / டெய்லி எஃப்.ரி.

இன்று ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் மறைந்த நாள்

டி.பி.எஸ்.ஜெயராஜ்

[இக் கட்டுரை மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களால் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘டெய்லி எஃப்.ரி’ (Daily FT) பத்திரிகைக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பிரசுரமானது. அத்தோடு அவரது வலைப்பதிவான் dbsjeyaraaj.com இலும் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அமரர் அன்ரன் பாலசிங்கம் பற்றிய தனது நெருக்கமான விடயங்களை இக் கட்டுரையில் உருக்கமாகப் பதிந்துள்ளார். வரலாற்று மாணவர்களுக்கு மிகவும் அவசியமான பல விடயங்கள் பொதிந்துள்ள காரணத்தால் அவரது அனுமதியின்றி நன்றியுடன் தமிழில் மீள்பதிவு செய்கிறேன். -சிவதாசன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞரும் அரசியல் ஆலோசகருமான அன்ரன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் 15 வருடங்களுக்கு முன்னர், டிசம்பர் 14, 2006 இல் அவரது தென் இலண்டன் வீட்டில் காலமானார். ‘அண்ணை’ என்று தமிழ் மக்கள் மத்தியில் பொதுவாக அறியப்பட்ட அவர், 68 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார். அவரது மரண நிகழ்வு டிசம்பர் 20, 2006 அன்று இலண்டனிலுள்ள அலெக்சாண்ட்றா பலஸில் நடைபெற்றிருந்தது. அவரின் மரணத்துக்குப் பிறகு “தேசத்தின் குரல்” என்ற பட்டத்தை வழங்கி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரைக் கெளரவித்திருந்தார்.

பாலசிங்கம் ஒரு பகட்டான ஆனால் சர்ச்சைக்குரிய மனிதர். அவரைப் புகழ்பவர்கள் இருந்தாலும் தூற்றுபவர்களும் இருந்தார்கள். அவரோடு எனக்கிருந்த உறவும் பல நெளிவுகளையும் சுழிவுகளையும் கொண்டதுதான். அவ்வப்போது இருந்த நிலைமைகளையும் தேவைகளையும் கொண்டு நானும் அவரைப் போற்றியும் தூற்றியும் எழுதியிருக்கிறேன். அதே போல அவரும் என்னைப்பற்றி நல்லவற்றையும் கெட்டவற்றையும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார். தமிழர் விவகாரங்களில் இந்த மனிதரின் பங்கு பற்றிப் பல தடவைகள் நான் எழுதியிருக்கிறேன். ‘பாலா அண்ணைக்கும்’ எனக்குமிடையே இருந்த தனிப்பட்ட-தொழில்சார்ந்த உறவு பற்றிய பல விடயங்களில் சிலவற்றை இக் கட்டுரையில் தருகிறேன்.

பாலசிங்கத்தின் பின்னணி

அன்ரன் பாலசிங்கம்: பகட்டான ஆனால் முரண்பாடுகளைக் கொண்ட மனிதர்

பல கூறுகளின் கலவையான பாலசிங்கம் மார்ச் 4, 1938 இல் பிறந்தார். அவரது தந்தை கிழக்குமாகாணத்தையும் தாய் வடக்கு மாகாணத்தையும் சேர்ந்தவர்கள். தாயார் ஒரு கிறிஸ்தவர் தந்தை ஒரு இந்து. ஒரு கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டாலும் விரைவிலேயே அவர் பகுத்தறிவுவாதியாகவும் கடவுள் மறுப்பாளராகவும் தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார்.

பாலசிங்கத்தின் முதல் மனைவி யாழ்ப்பாணத்து, புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த பெண். அவரது இரண்டாவது மனைவி ஆங்கிலோ-சக்ஸன் பூர்வீகத்தைக்கொண்ட அவுஸ்திரேலியர். உருவாகிக்கொண்டிருக்கிறது என நம்பிய ‘தமிழ் ஈழத்தை’ மனதில் காவித் திரிந்த ஒரு பிரித்தானிய பிரஜை அவர்.

பாலசிங்கத்தின் பாட்டனார் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்டூர் என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு ‘சைவக் குருக்கள்’. அவரது தந்தையார் மட்டக்களப்பு மருத்துவமனையில் ஒரு மின்சாரப் பணிமுகவராகப் பணியாற்றியவர். பாலாவின் தாயார் யாழ்ப்பாண நகரத்திலுள்ள மார்ட்டின் வீதியில் வசித்தவர். மருத்துவமாதுவாகப் (midwife) பயிற்சி பெற்றிருந்த அவர் அப்போது மட்டக்களப்பு மருத்துவமனையில் பணிபுரிந்துகொண்டிருந்தார். இங்குதான் அவர் பாலாவின் தந்தையாரைச் சந்தித்துக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்கிறார்.

தாய் தந்தையரது விவாகம் முறிந்துபோனதுடன் இளம் வயதிலேயே தாயார் விதவையானார். இதைத் தொடர்ந்து குழந்தைப் பருவத்திலேயே அவர் தாயாருடனும் மூத்த சகோதரியுடனும் வடக்கிற்குத் திரும்பி வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள கரவெட்டியில் வாழ்க்கையை ஆரம்பித்தார். கரவெட்டியிலுள்ள அம்பம் சிகிச்சையகத்தில் (Ambam Clinic) தாயார் தனது மருத்துவ மாது வேலையை ஆரம்பிக்கிறார். இதே வேளை பாலசிங்கத்தின் மருமக்களான விக்டர், அன்ரன் ஆகியோர், நான் பத்திரிகையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த ‘வீரகேசரி’ பத்திரிகையில் அச்சுக் கோர்ப்பாளர்களாகப் பணிபுரிந்துகொண்டிருந்தனர். எனது தாயாரும் கரவெட்டியிலுள்ள கட்டைவேலி என்னுமிடத்தைச் சேர்ந்தவர். எமது தபால் முகவரி துன்னாலை தெற்கைச் சேர்ந்தது. நானும் தானும் ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் என பாலசிங்கம் பின்னாட்களில் விருப்போடு கூறுவார்.

இளமைப் பருவத்தில் பாலசிங்கம் A.B. ஸ்ரனிஸ்லோஸ் எனவே அழைக்கப்பட்டார். கரவெட்டியிலுள்ள நெல்லியடி தூய இதய கல்லூரி (Sacred Heart College), பின்னர் மத்திய மஹா வித்தியாலயம் என அழைக்கப்பட்ட நெல்லியடி மத்திய கல்லூரியில் ஆகியவற்றில் அவர் கல்வி கற்றார். இடதுசாரிகளின் கோட்டையாக கரவெட்டி விளங்கிய காலமது. ‘ஸ்ரனி’ என அழைக்கப்பட்ட அவரும் இடதுசாரி சித்தாந்தங்களால் உள்வாங்கப்பட்டிருந்தார். அக்காலத்தில் கார்ட்டூன் சித்திரங்களினால் பிரபலமான ‘சிரித்திரன்’ ஆசிரியரான ‘சுந்தர்’ என அழைக்கப்பட்ட சிவஞானசுந்தரமும் கரவெட்டியைச் சேர்ந்தவர்தான். சிவஞானசுந்தரத்தின் முயற்சியால் 60 களில் கொழும்பிலிருந்து வெளியான ‘வீரகேசரி’ தமிழ்த் தினசரியில் உதவி ஆசிரியராக ஸ்ரனிஸ்லோஸ் நியமிக்கப்பட்டார்.

அவரோடு பணிபுரிந்த பலர் அவரைப்பற்றிக் கூறும்போது “ஸ்ரனி எப்போதுமே புத்தகம் வாசிப்பதிலேயே காலத்தைச் செலவழிப்பார்” எனக் கூறுவார்கள். தனது தோற்றத்தைப் பற்றி, குறிப்பாக ஆடைகளைப் பற்றி அவர் ஒருபோதுமே அக்கறை கொண்டதில்லை. சாப்பாடும் அவ்வப்போது தான். மிகக் குறுகிய காலத்திலேயே ‘வீரகேசரி’யின் வெளிநாட்டு செய்திகளுக்குப் பொறுப்பாளராக அவர் நியமனம் பெற்றார். வெளிவிவகாரங்கள் பற்றிய ராய்ட்டர் போன்ற நிறுவனங்களின் செய்திகள் மற்றும் இதர ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பொறுப்பு அவரதாகியது. என்ன இருந்தாலும் தத்துவம், மனோதத்துவம் ஆகியவற்றிலேயே அவரது மனம் கிறங்கியிருந்தது. ‘ஹிப்னாட்டிசம்’ என்ற மனத்திரிப்புக் கலைமீதும் அவருக்குச் சிலவேளைகளில் தடுமாற்றம் இருந்தது.

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பதவி கிடைத்ததும் ஸ்ரானிஸ்லோஸின் வாழ்வில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. ஆடை அலங்காரங்களில் மாற்றங்கள் தெரிந்தன. நாகரிகமான ஆடைகளை அணியத் தொடங்கினார். அவரது புதிய வேலையே இதற்குக் காரணமென்பதென்றில்லை. மன்மத பாணமும் அவரது கைகளுக்கு வந்து சேர்ந்தது. பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்துக்கு அருகில் இருந்த பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகத்தில் பணியாற்றிய அழகிய பெண்ணின்மீது மயக்கம் கொண்டார். அவர்தான் பேர்ள் ராசரத்தினம்; பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி அதிபர் ராசரத்தினத்தின் மகள்.

அவர்களது குடும்பத்துடன் எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய பழக்கமுண்டு. நான் சிறுவனாக இருக்கும்போது பேர்ளைப் ‘பூ அன்ரி’ என்றே அழைப்பேன். பேர்ளின் சகோதரி ரதியின் கல்யாணத்துக்கு எனது சகோதரியொருவர் தோழியாகவிருந்தார். பேர்ளின் மூத்த சகோதரி நேசமும் எனது தாயாரும் ஒரே பாடசாலையில் நீண்டகாலமாகக் கற்பித்து வந்தார்கள். ஜூலை 16, 1968 அன்று பேர்-அன்ரன் இருவரும் கொள்ளுப்பிட்டியிலுள்ள மெதடிஸ்த தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்துகொண்டார்கள்.

பாலசிங்கம் தம்பதி

பாலசிங்கத்தின் திருமண வாழ்வின் ஆனந்தம் நீண்ட காலத்துக்கு நிலைக்கவில்லை. மிக மோசமான நோயொன்றினால் பாதிக்கப்பட்ட பேர்ளுக்கு வெளிநாட்டில் வைத்தியம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்விடயத்தில் பிரித்தானிய அலுவலகம் கருணையுடன் உதவ முன்வந்தது. இருவரும் இங்கிலாந்துக்குப் போக அனுமதி கிடைத்தது. ஆகஸ்ட் 3, 1971 அன்று இங்கிலாந்து சென்ற பாலசிங்கம் அங்கு தனது மேற்படிப்பையும் தொடரக்கூடியதாகவிருந்தது. இந்நிலையில் அவரது மனைவியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இக்கடினமான சூழ்நிலையிலும் பாலசிங்கம் வேலைக்குச் செல்லவும், படிப்பைத் தொடரவும் அதே வேளை சுகவீனமான மனைவியைப் பராமரிக்கவும் வேண்டியிருந்தது. சிகிச்சை பலனளிக்காது பேர்ள் 1976 நவம்பரில் காலமானார்.

மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு தாதியாகப் பணியாற்றிய இன்னுமொரு பெண் பாலசிங்கத்தின் மீது பாசப் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார். அவரும் நாட்டுக்கு ஒரு அன்னியர், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். தாதியான அடேல் ஆன் வில்பிக்கும் மனைவியை இழந்து தவிக்கும் பாலசிங்கத்துக்கும் மலர்ந்த காதல் செப்டம்பர் 1, 1980 இல் தென் இலண்டனிலுள்ள பிறிக்ஸ்டன் சிறுநகரில் ஒரு திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் சுருக்கமான திருமணத்தில் முடிந்தது.

1978இல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொள்கிறார். லண்டனிலிருந்தவாறே அவர் புலிகளுக்காக நிறைய விடயங்களை எழுதிக்கொடுத்தார். அதே வேளை இந்தியாவுக்கும் அவ்வப்போது சென்று வந்தார். 1980 இல் புலிகள் அமைப்பு ரீதியாக உடைந்தபோது அவர் பிரபாகரனது பக்கத்தை வரித்துக்கொண்டார். ஜூலை 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து லண்டனிலிருந்து அடேலும் சென்னைக்கு (அப்போது மதராஸ்) இடம்பெயர்ந்தார்.

பாலசிங்கத்துடனான சந்திப்பு

1977 இல் தமிழ்த் தினசரி ‘வீரகேசரியில்’ பத்திரிகையாளராக இணைந்தபின்னர் 1981 இல் புதிதாக அறிமுகமாகிய ஆங்கில நாளிதழான ‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்கு மாற்றலாகினேன். 1984/5 காலப்பகுதியில் இந்தியாவிலிருந்த தமிழ் இயக்கங்களின் தலைவர்களிடமிருந்து பேட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் பொறுப்பை அப்போது ஆசிரியராகவிருந்த விஜிதா யாபா எனக்குத் தந்திருந்தார். தமிழ் நாட்டில் ஏறத்தாள அனைத்து இயக்கத் தலைவர்களையும் சந்திக்க முடிந்திருந்தாலும் விடுதலைப் புலிகள் மட்டும் எட்டாக் கனிகளாக இருந்தார்கள். இறுதியாக ஒரு நாள் மரினா கடற்கரையோரம் இருந்த கண்ணகி சிலைக்கருகில் மாலை 5:30 மணிக்கு நிற்குமாறு தகவல் கிடைத்தது. நான் அதற்கு இணங்கினேன்.

சரியாக 5:30 மணிக்கு ஒரு வாகனம் எனக்கருகில் நின்றது. வாகனத்தை ஓட்டிவந்த விடுதலைப் புலிகளைச் சேர்ந்த நேசன் (முன்னாள் இறைப்பணி மாணவர்) முன் ஆசனத்தில் உட்காரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்து இன்னுமொரு இடத்துக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று நிறுத்தினார். சிறிது நேரத்தில் இன்னுமொரு வாகனம் எங்களது வாகனத்துக்குப் பின்னால் வந்து நின்றது. அவ்வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி வந்து எங்கள் வாகனத்தின் பின் ஆசனத்தில் உட்கார்ந்தார். நான் பின்னால் திரும்பிப்பார்க்கும்போது “நான் பாலசிங்கம்” என்றபடியே அவர் கைகளை நீட்டினார்.

நேசன் வேண்டுமென்றே திக்கு எதுவும் தெரியாத வகையில் பல தெருக்களுடாகவும் சிறிய வீதிகளூடாகவும் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். பாலசிங்கம் மிகவும் சுருக்கமான கேள்விகள் மூலம் என்னைத் துளைத்துக்கொண்டிருந்தார். அவரது கேள்விகள் என்னை அவர் கடுமையாகச் சந்தேகிக்கிறார் என்பதைக் காட்டின. நான் எனது பேச்சின் போக்கை மாற்றி எனது குடும்பத்தைப் பற்றியும் இறந்துபோன அவரது மனைவியின் குடும்பத்தைப்பற்றியும் கதைத்தேன். “உங்களைப் போலவே நானும் ‘வீரகேசரியில்’ பணியாற்றினேன்” எனக் கூறினேன். அத்தோடு பாலசிங்கத்தின் அணுகுமுறை மாற்றம் கண்டது. சிரித்தபடி “அப்போ நீயும் எங்களில் ஒருவன்” என்றபடியே “நேரே புஹாரி ஒட்டலுக்கு விடு” என நேசனுக்குக் கூறினார். முஸ்லிம் உணவகத்தில் அன்று மாலை பிரியாணி சாப்பாட்டுடன் நாங்கள் பழைய நினைவுகளையும், அப்போதைய அரசியலையும் அலசினோம். இதுவே பாலசிஙத்துடனான எனது முதல் சந்திப்பு. இதன் பின்னர் பல நடந்தன.

தமிழ்த் துரோகி

1988 இல் ஊடகத் துறையில் நீமான் ஃபெலோஷிப் மேற்கல்விக்கென அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல நேர்ந்தது. இது முடிய 1989 இல் நான் கனடாவுக்குக் குடிபெயர்ந்து 1990 முதல் ரொறோண்டோவிலிருந்து வெளிவந்த தமிழ் வாரப்பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். 1995 ஏப்ரலில் சந்திரிகா குமாரதுங்க அரசுடனான போர்நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் முறித்துக்கொண்டதுடன் போர்ப்பிரகடனத்தையும் செய்துகொண்டனர். இதன் பின்னர் நான் புலிகளை விமர்சித்து வந்தேன்.

இதற்காக நான் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. ‘மஞ்சரி’ என்ற பெயரில் நான் ஆரம்பித்து நடத்திவந்த தமிழ் வாரப் பத்திரிகைக்கு எதிராக கனடாவிலுள்ள புலிகள் மோசமான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பத்திரிகை ‘தடை’ செய்யப்பட்டது. உயிரச்சுறுத்தல்கள் பலனளிக்காது போகவே எனது பத்திரிகையை விற்கும் தமிழ்க் கடைக்காரர்கள், எனது பத்திரிகையில் விளம்பரம் செய்பவர்கள் ஆகியவர்களை அணுகி எனது பத்திரிகையின் வருமானத்தை முடக்க முயன்றார்கள். 22 பக்க விளம்பரங்களுடன் வெளிவந்த 48-பக்க வாராந்தரி அப்போது ஒரு டாலருக்கு விற்கப்பட்டது; சுமார் 4,500-5000 பிரதிகள் வரை விற்கும். புலிகளின் அராஜகத்தால் பல கடைகள் எனது பத்திரிகையை விற்க மறுத்தனர். 2 பக்க விளம்பரங்களுடன் 24 பக்கப் பத்திரிகையாக அது சுருங்கியது. விற்பனை மூன்று இலக்கங்களுக்குள் முடங்கியது. வாழ்விற்காகப் புலிகளின் கட்டளைகளை முழந்தாளிட்டு ஏற்றுக்கொள்ளாமால் நான் என் பாதங்களில் நின்றபடியே பத்திரிகையை மூடிவிட்டேன். ஏப்ரல் 1996 இல் ‘மஞ்சரி’ யின் இதழ்கள் நிரந்தரமாக மூடிக்கொண்டன.

‘மஞ்சரி’க்காக நானும் எனது மனைவியும் முழுநேரமாக உழைத்தோம். அத்தோடு ஒன்பது பேர் பகுதிநேரமாக எங்களுடன் பணிபுரிந்தார்கள். பத்திரிகை நிறுத்தப்பட்டது எங்களுக்கு பெருத்த நிதி நெருக்கடியைத் தந்தது. ‘மஞ்சரி’ நிறுத்தப்பட்டதை சில வேளைகளில் நல்லதொரு விடயமாகவும் நான் பார்ப்பதுண்டு. நான் மீண்டும் ஆங்கில ஊடகத்துறைக்குள் காலடி எடுத்துவைக்க அது மறைமுகமாக உதவி செய்திருக்கலாம்.

கொழும்பில், ‘வீரகேசரி’யில் தமிழில் எழுதுபவனாகவே நான் எனது ஊடகப்பணியை ஆரம்பித்தேன். பின்னர் ‘தி ஐலண்ட்’, ‘தி ஹிந்து’ ஆகிய பத்திரிகைகள் என்னை ஆங்கில ஊடகவியலாளராக மாற்றின. கனடாவுக்கு வந்ததும் நான் மீண்டும் தமிழ் ஊடகத்துறைக்குள் நுழைந்து ‘செந்தாமரை’ என்ற பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியபின் ‘மஞ்சரி’யை ஆரம்பிக்க நேர்ந்தது. பின்னர் ஆங்கில ஊடகத்துறைக்குள் மீண்டும் சென்று ‘தி ஐலண்ட்’, ‘தி சண்டே லீடர்’, ‘தி நாஷன்’, ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றி இப்போது ‘டெய்லி மிரர்’, ‘டெய்லி ஃபைனான்சியல் ரைம்ஸ்’ ஆகியவற்றில் பணியாற்றுகிறேன்.

விடுதலைப் புலிகளுக்குப் பயந்து, என்னை வளர்த்துவிட்ட ‘வீரகேசரி’ உட்பட்ட கொழும்பிலிருந்து வெளியாகிய தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் எனது உண்மையான பெயரில் விடயங்கள் எழுதப்படுவதை விரும்பவில்லை. அதே வேளை புனை பெயர்களில் எழுதுவதை நானும் விரும்பவில்லை. எனவே கடந்த 25 ஆண்டுகளாக எனது ஊடகப் பதிவுகள் ஆங்கிலத்திலேயே இருந்துவருகின்றன.

என்னை அமைதியாக்கிவிடலாமெனெ நினைத்து புலிகள் எனது பத்திரிகையைத் தடைசெய்திருந்தாலும் நான் ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களையும் புலிகளையும் தொடர்ந்தும் ஆங்கிலப் பத்திரிகைகள் மூலம் விமர்சித்துக்கொண்டுதான் இருந்தேன். புலி ஆதரவாளர்கள் என்னைத் தமிழினத் துரோகியெனக்கூறித் தூஷித்தார்கள். அப்படியிருந்தும்கூட நான் தொடர்ந்தும் எனது ஊடகப் பணியைத் தொடர்கிறேன்.

பாலசிங்கம் என்னுடன் தொடர்பு

புத்தாயிரமாண்டின் பிறப்பு ஆச்சரியத்துடன் நிகழ்ந்தது. 2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழ் கத்தோலிக்க பாதிரியார் அருட் தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் ரொறோண்டோவிற்கு வருகை தந்திருந்தபோது என்னைத் தொடர்பு கொண்டு “லண்டனிலிருந்து பாலசிங்கம் உங்களோடு பேச விரும்புகிறார்” எனத் தெரிவித்தார். இது பாலசிங்கத்துடனான எனது தொடர்பை மீண்டும் ஆரம்பித்தது. இலங்கையை விட்டுப் புறப்பட்டதும் நான் அவருடனான தொடர்புகளை இழந்திருந்தேன். இருப்பினும் 1999 இல் வன்னியிலிருந்து பாலசிங்கம் லண்டன் செல்வது பற்றிய தகவலை நான் வேறு வழிகள் மூலம் அறிந்திருந்தேன்.

நீண்ட வருடங்களுக்குப் பின் நாம் மேற்கொண்ட உரையாடலின் போது பாலசிங்கம் “பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் ஒரு சமரசத் தீர்வினால் போர் முடிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சமாதானம் கிடைக்கப்பெற வேண்டும் ” என்ற எனது கருத்துடன் தான் உடன்படுவதாக ஒத்துக்கொண்டார். “தான்”நான் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு முயற்சிக்கிறேன்; நீங்கள் உங்கள் எழுத்தின் மூலம் அதற்கு ஆதரவு வழங்கவேண்டும்” என பாலா அண்ணை என்னிடம் கேட்டுக்கொண்டார். அப்போது நான் ‘தி சண்டே லீடர்’ பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தேன்.

நான் இதை எனது நெருங்கிய நண்பனும், பத்திரிகை ஆசிரியருமான லசந்தா விக்கிரமதுங்கவுக்கு அறிவித்தபோது அவர் பெருமகிழ்ச்சியுடன் “(இனப்பிரச்சினையின்) வெற்றிகரமான முடிவிற்கான அனைத்து முயற்சிகளுக்கும் பத்திரிகை உறுதுணையாக இருக்கும்” எனக் கூறினார். இதன் பிறகு நான் பாலசிங்கத்துடன் அடிக்கடி தொடர்புகொண்டேன். பல சந்தர்ப்பங்களில், நாங்கள் பதிவு செய்யப்பட முடியாதவை உட்படப், பல விடயங்களைப் பல மணித்தியாலங்கள் பேசியிருக்கிறோம். இவ்வுரையாடல்கள் மூலம் புலிகளின் உருவாக்கம், வளர்ச்சி, கூர்ப்பு மற்றும் ‘உள்வீட்டு விடயங்கள்’ பற்றி நிறையவே அறிந்துகொண்டேன்.

ஒஸ்லோவின் அனுசரணையுடனான போர் நிறுத்தம் பெப்ரவரி 23, 2002 இல் நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இது எனக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் உண்மையான சமாதான உடன்பாட்டைப் பெறும் வகையில் புலிகள் நடந்துகொள்ளவில்லை என்பதை நான் விரைவிலேயே அறிந்து கொண்டேன். இதைப் பற்றி நான் பாலசிங்கத்துடன் முறையிட்டபோது அவற்றை அவர் உதாசீனம் செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் என்னை மெதுவாக அலட்சியம் செய்யத் தொடங்கினார். புலிகள் சமாதான நடைமுறைகளுக்குப் பரிச்சயமாவதற்குக் கால அவகாசம் தேவை என்ற நினைப்புடன் ஆறு மாதங்கள் வரை நான் பொறுமையாக இருந்தேன். எதுவித மாற்றங்களுமில்லை என்றவுடன் புலிகளின் எதிர்மறை நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்த மீறல்கள் பற்றி விமர்சிக்க ஆரம்பித்தேன். சமாதானப் பேச்சுவார்த்தை மீது புலிகளுக்கு உண்மையான அக்கறையில்லை என்பதை விரைவிலேயே நான் உணர்ந்துகொண்டேன். எனது பத்திகளும் இவற்றையே பிரதிபலித்தன.

இதனால் ஆத்திரமுற்ற பாலசிங்கம் எனது பத்திகளைப் பிரசுரிக்க வேண்டாமென்று லசந்தாவுக்குப் ‘புத்தி’ கூறினார். தமிழ் வாசகர்களிடையே அது பத்திரிகைக்கு பங்கம் விளைவிக்குமெனத் தெரிவித்தார். இருப்பினும் “வழக்கம்போல எழுது மச்சான்” என லசந்தா என்னிடம் கூறிவிட்டார். நானும் அப்படியே தொடர்ந்தேன். இதன் பிறகு ஊடக மாநாடுகளிலும் பொதுக் கூட்டங்களிலும் பாலசிங்கம் எனது பெயரைக் கூறி என்னைத் தாக்கத் தொடங்கினார். எங்களுக்கிடையேயான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. தமக்கு இசைவான இதர தமிழ்ப் பத்திரிகைகளைக் கொண்டு என்னை மிக மோசமாகத் தாக்கவாரம்பித்தார்.

சில வருடங்களுக்குப் பிறகு, நவம்பர் 2006 இல் லண்டனிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது பாலசிங்கத்தினுடையது. எமக்கிடையேயிருந்த முரண் கருத்துக்கள் காரணமாக சுமார் மூன்று வருடங்களாகப் பேசாமலிருந்த எனக்கு இது ஆச்சரியத்தைத் தந்தது. இருப்பினும் மாற்ற முடியாத சுகவீனத்துக்குள்ளாகி அவரது மரணத்திற்கான நாட்கள் குறிக்கப்பட்டுவிட்டன என்பதை நான் அறிந்திருந்தமையால் பாலா அண்ணையின் அழைப்பை நான் மகிழ்வோடு எடுத்துக்கொண்டேன்.

தனது முன்னாள் சகபாடிகள், நண்பர்கள், தொடர்பிலிருந்தவர்களுடன் தான் தொடர்புகொண்டு வருவதாக அவர் கூறினார். அவர் அதை வெளிப்படையாகக் கூறவில்லையாயினும், விரைவிலேயே அமைதி உறக்கத்துக்குத் தயாராகும் ஒரு மனிதரின் விடைபெறு அழைப்பாகவே அதை நான் உணர்ந்தேன். பித்தக் குழாயில் உருவாகும் சிகிச்சையற்ற கொடிய வகையான புற்றுநோயால் அவர் பீடிக்கப்பட்டிருந்தார். நோய் முற்றிய நிலையை எட்டிவிட்டதால் மருத்துவர்கள் அவருக்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் அவகாசம் கொடுத்திருந்தனர்.

பிரபாகரனின் நிலைப்பாடு

கேலிகளிலும் கிண்டல்களிலும் பாலசிங்கம் தனது பாணியை மாற்றியிருக்கவில்லை. உரையாடல் நீண்டுபோகப் போக அவர் மிகவும் கவலைக்குள்ளாகியிருப்பது தெரிந்தது. நிச்சயமாக அது அவரது விரைவிலேயே பிரியப்போகும் உயிர் பற்றியது அல்ல. அவரது வார்த்தைகள் பீறிட்டன. “தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை. நிலமை படு மோசமாகுது. முழு உலகமும் சேர்ந்து புலிகளை மொங்கப் போகுது”.

“புலிகளின் நடத்தையால் சர்வதேச சமூகம் மிகவும் கோபத்துடன் இருக்கிறது. சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடையாத உடனடியான மாற்றுவழியொன்றைப் புலிகள் தேர்ந்தெடுக்காவிட்டால் மேற்கு நாடுகள், சீனா, யப்பான், பாகிஸ்தான், இந்தியா அனைத்தும் ராஜபக்ச அரசுக்கு ஆதரவு வழங்கி புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு நிர்மூலமாக்கப் போகின்றன” என பாலசிங்கம் கூறினார். இது பட்டவர்த்தனமாகத் தெரிந்திருந்தும் ஏன் பிரபாகரனால் அதற்கேற்றபடி நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என நான் கேட்டேன். அதை அறிவதற்குத் தான் பலமுறை முயன்றும் தோற்றுப் போனேன் என பாலா அண்ணை கூறினார்.

தொடர்ந்து பேசும்போது “இது விடயமாகப் பிரபாகரனின் நிலைப்பாட்டை அறியும் நோக்கில் வன்னிப் பெருமண்ணிலுள்ள கேப்பாப்புலவு என்னுமிடத்தில் நான் அவரை நேரடியாகச் சந்தித்தேன். ஆனால் பிரபாகரன் மசியவேயில்லை”; என பாலா அண்ணை கவலைப் பட்டார். “உனக்குத் தெரியும் ‘வீரமார்த்தாண்டன்’ (கோபம் வரும்போது பாலசிங்கம் பிரபாகரனை அழைக்கும் பதம் இது) என்னோடு எப்படி நடந்துகொள்வார் என்று” என அவர் மேலும் தொடர்து விளக்கவாரம்பித்தார்.

“இவ் விடயத்தைப்பற்றி நான் தொடர்ந்து நச்சரித்தபோது பிரபாகரன் திடீரெனக் கேட்டார் “‘ஆட்டோகிராஃப்’ படம் பார்த்துவிட்டீங்களோ” (தமிழ்நாட்டின் பிரபல இயக்குனர் சேரனின் படம் இது) என்று. இல்லை என நான் கூறியபோது அதை நாங்கள் இப்போதே பார்க்கவேண்டும் எனப் பிரபாகரன் கூறினார். ஒளித்தட்டிலிருந்த அப்படத்தை தொலைக்காட்சியில் நாங்கள் இருவரும் மெளனமாக இருந்து பார்த்தோம். படம் முடிந்ததும் மீண்டும் அரசியல் நிலைமை பற்றிய பேச்சை நான் எடுத்தேன். “இப் படத்தை மீண்டும் பார்ப்போம்” எனப் பிரபாகரன் சொன்னார். படத்தை இரண்டாவது தடவையும் பார்த்தோம். அது முடிவுற்றதும் நான் மீண்டும் பேச்சை எடுத்தேன். பிரபாகரன் ஒரு நக்கல் சிரிப்புடன் “இன்னொருக்காப் பார்ப்பம்” என்றார். அதன் அர்த்தம் எனக்குப் புரிந்துவிட்டது. அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன். அப்படி அவர் நடந்துகொள்ளும்போது, எனது அனுபவத்தில் நான் கண்டுகொண்டது, அவர் ஒருபோதும் மனம் மாறப் போவதில்லை என்பதே”.

விடுதலைப் புலிகளின் இதர மூத்த தலைவர்களினால்கூட நிலைமையைப் புரிந்துகொள்ள முடியவில்லையா என நான் கேட்டதற்கு, “ஒஸ்லோவில் நடைபெற்ற ரணில் விக்கிரமசிங்க-விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழ்ச்செல்வன், காஸ்ட்றோ, பொட்டு அம்மான், நியூ யோர்க்கிலிருந்து உருத்திரகுமாரன் ஆகியோர் பிரபாகரனின் மனதை மாற்றிவிட்டார்கள்” என பாலசிங்கம் பதிலளித்தார்.

“அதுமட்டுமல்லாது இலங்கை இராணுவத்தைப் புலிகளால் தோற்கடிக்க முடியுமெனவும் ராஜபக்ச அரசுக்கெதிராக புலிகளை உலகம் ஆதரிக்குமெனவும் அவர்கள் பிரபாகரனுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார்கள். சூசை, ‘பேபி’ சுப்ரமணியம், பாலகுமாரன், பரா போன்ற இதர மூத்த தலைவர்களுக்கு இக்கட்டான நிலைமை புரிந்திருந்தது ஆனால் யதார்த்தத்தைப் பிரபாகரனுக்கு எடுத்துக்கூறுமளவுக்கு அவர்களுக்கு பலம் போதாமலிருந்தது” என பாலா அண்ணை தெரிவித்தார்.

இருபது நிமிடங்கள் வரை நாங்கள் பேசியிருப்போம் அப்போது பாலசிங்கம் இடையற்ற இருமலுக்கு உள்ளானார். உரையாடலை அவரால் மேலும் தொடர முடியவில்லை. உரையாடல் அத்தோடு நின்று போனது. போர் மேலும் உக்கிரமாக முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாமற் போகிறது என்பதை இந்த உரையாடல் மூலம் அறிந்து நான் மிகவும் கவலையடைந்தேன். வன்னி நிலப்பரப்பும், அப்பாவித் தமிழ் மக்களும் பேரழிவுக்குள்ளாகப் போகிறார்கள் என்ற எனது அச்சத்தை தொடர்ந்த சம்பவங்கள் நியாயப்படுத்தின. பாலசிங்கம் எதிர்வு கூறியபடியே சர்வதேச சமூகம் புலிகளை மொங்கப் போகிறது எனபது நிரூபிக்கப்பட்டது. ஒரே ஒரு விடயம் – இலங்கை அரசாங்கத்தைக் கொண்டே அவர்கள் அந்த ஈனச்செயலைச் செய்துவிட்டு இப்போது போர்க்குற்ற விசாரணைகளைக் கோருகிறார்கள்.

பாலசிங்கம் விடைபெறுதல்

பாலசிங்கத்துடனான அந்த இறுதி உரையாடல் என்னிடமிருந்த பல சந்தேகங்களைப் போக்கியிருந்தது. அதில் முதன்மையானது அவரைப் பற்றி நான் கொண்டிருந்த தவறான புரிதல் (இதன் ஆழம் இன்னும் அதிகமானது). பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றைப் பெறுவதில் அவர் மனதார ஆசை கொண்டிருந்தார் எனினும் பிரபாகரனால் அது முடக்கப்பட்டுவிட்டது என்பதை எமது நீண்ட உரையாடல் மூலம் நான் உணர்ந்திருந்தேன்.

‘தி சண்டே லீடரில்’ என்னை எழுதாமல் தடுத்தமை பற்ரியோ அல்லது அவர் என்னைப் பகிரங்கமாகத் தாக்கியமை பற்றியோ நான் அவரை எதுவும் கேட்கவில்லை. ஒரு மனிதன் இறந்துகொண்டிருக்கும்போது கேட்கப்படக்கூடிய விடங்கள் அவையல்ல.

புலிகளிடமிருந்து அவர் தன்னைக் காப்பாற்றுவதற்காக, என்னைத் தாக்குவதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாமெனவே நான் எண்ணுகிறேன். தமிழ்ச்செல்வனும், காஸ்ட்றோவும் வெளிநாடுகளில் எனக்கெதிராகப் பயங்கரமான போரைத் தொடுத்துவந்தார்கள். பாலசிங்கம் என்னோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தமையால் அவரும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டி ஏற்பட்டிருக்கலாம்.

அன்ரன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 ஃந்று பிரித்தானிய நேரம் பி.ப. 1:45 மணிக்கு அவரது தென் லண்டன் இல்லத்தில் அமைதியாக உயிர் நீத்தார். அவரது இறுதிச்சுவாசம் நிகழும்போது அவுஸ்திரேலியாவில் பிறந்த அவரது விசுவாசம் மிக்க மனைவி அடேல் ஆன் அருகில் இருந்தார். டிசம்பர் 14 அண்மிக்கும்போது அவரது இழப்பின் 15 ஆவது நிறைவு எங்கள் உறவின் நினைவுகளை மீட்டுத் தருகிறது. (ஆங்கில மூலம்: டி.பி.எஸ். ஜெயராஜ் (டெய்லி எஃப் ரி) – தமிழில்: சிவதாசன். இக் கட்டுரையின் ஆங்கிலப் பதிவை Daily FT இணையத்தளத்தில் படிக்கலாம்)