“எனது கழுத்தை வெட்டி சார்ள்ஸ் அரசருக்கு அனுப்புங்கள்” – PETA ஸ்தாபகர் வேண்டுகோள்
ஜனாதிபதி பைடனுக்கு உதடுகள்!
எச்சரிக்கை: சிலருக்கு இச்செய்தி படிப்பதற்கு அருவருப்பாக இருக்கலாம்
விலங்குகளின் தார்மீக நடமுறைக்கான மனிதர்கள் (People for Ethical Treatment of Animals – PETA) என்ற அமைப்பின் ஸ்தாபகராகிய 73 வயதுடைய இங்கிரிட் நியூகேர்க் என்பவர் அகோரமான முறையில் எழுதி வைத்துள்ள உயில் தற்போது PETA அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தான் இறந்த பின்னர் தனது உடல் துண்டங்களாக வெட்டப்பட்டு அரசியல்வாதிகளுக்கும் வர்த்தகப் பிரமுகர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். மிகவும் அதிர்ச்சி தரும் வகையில் எழுதப்பட்டுள்ள இவ்வுயிலில் தனது கழுத்து பிரித்தானிய அரசர் மூன்றாவது சார்ள்சுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டுமெனக் கேட்டுள்ளார். சார்ள்ஸ் அரசர் இன்னமும் புறாக்களைப் போட்டிக்கு விடும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர் எனவும் இப் போட்டியில் தோற்கும் புறாக்கள் கழுத்துத் திருகிக் கொல்லப்படுகென்றன எனவும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாது தனது உதடுகளை ஜனாதிபதி பைடனுக்கு அனுப்பிவைக்கும்படி அவர் தனது உயிலில் கேட்டுள்ளார். வான்கோழிப் பண்ணை உரிமையாளர்களுடன் நெருங்கிய உறவைப் பேணும் பைடனின் செயலை எதிர்த்து அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். உடற்பாகங்கள் அனுப்பப்பட்டபின் மீதமான தனது உடலைச் சமைத்து மனிதர்கள் உண்ணவேண்டுமெனவும் அவர் தனது உயிலில் கேட்டுள்ளார்.
இவரது கோரிக்கையின்படி ஈரல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்றோனுக்குப் போகிறது. பிரான்சில் வாத்துக்கள் கொழுப்புள்ள ஈரல்களை உற்பத்தியாக்குவதற்காக அவை கட்டாயப்படுத்தி ஊட்டப்படுகின்றன எனவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக மக்றோனுக்கு ஈரல் பரிசாகிறது.
ருவிட்டர், ஸ்பேஸ்X அதிபர் எலான் மஸ்கிற்கு நியூகெர்க் தனது இதயத்தைப் பரிசளிக்கிறார். எலான் மஸ்கின் மூளைப் பரிசோதனைகளில் மிருகங்கள் பயன்படுத்தப்படுகின்றன எனவும் இவ்விடயத்தில் அவர் இதயமில்லாது நடந்துகொள்வதனால் அவருக்கு தனது இதயத்தை அனுப்புவதாக நியூகேர்க் கூறுகிறார்.
தனது இறப்பிற்குப் பிறகு கால் ஒன்று மிக மோசமாக உடைக்கப்பட்டு ‘கிராண்ட் நாஷனல்’ குதிரைப் பந்தயத்தின்போது பகிரங்கமாகக் காட்சிக்கு வைக்கப்படவேண்டுமெனவும், ஸ்பெயின் மாட்டுச்சண்டைப் போட்டியில் மாடுகளின் காதுகள் வெட்டப்படுவதை எதிர்த்து அந்நாட்டின் அரசர் ஆறாம் பிலிப்பியிற்கு தனது காதில் ஒன்று அனுப்பிவைக்கப்படவேண்டுமெனவும் அவர் கோருகிறார். செம்மறியாடுகளின் பின் துடைகளை இறைச்சிக்காக விற்பதற்காக அவுஸ்திரேலிய பிரதமருக்குத் தனது ‘பின்பக்கத்தை’ அனுப்பவேண்டுமென்கிறார்.
விலங்குத் தோல்களில் ஆடம்பரப் பொருட்களைச் செய்யும் நிறுவனங்களுக்கு, தனது தோலைப் பதனிட்டு இடுப்புப் பட்டிகளாகவோ அல்லது பணப்பைகளாகவோ செய்து அனுப்பும்படி கேட்டுள்ளார். மீதமான தனது உடலைத் துண்டம் துண்டமாக வெட்டி வெங்காயம் சேர்த்து பார்பிக்கியூ செய்து பரிமாறும்படி அவர் கேட்டுள்ளார். இதன் மூலம் மனிதரைக் கருணையுள்ளவர்களாக மாற்றமுடியும் என அவர் கூறியுள்ளதாக PETA அறிவித்துள்ளது.