NewsSri Lanka

‘எனக்கும் முதுகெலும்பிருக்கிறது’ என்பதைக் காட்டவே 2018 அரசியலமைப்புச் சதி | சிறிசேன

‘எனக்கும் முதுகெலும்பிருக்கிறது என்பதைக் காட்டவே 2018 அரசியலமைப்புச் சதியை மேற்கொண்டேன்’ எனக் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி சிறீசேன தெரிவித்தார். நேற்றய தினம் (ஞாயிறு) கட்டுவப்பிட்டிய தேவாலய நிகழ்வொன்றின்போது ‘தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு முதுகெலும்பில்லை’ என்ற கருத்துப்பட கார்டினல் மல்கம் ரஞ்சித் பேசியிருந்தார். இப்பேச்சினால் கோபமுற்ற ஜனாதிபதி ‘அக்டோபர் 2018இல் பிரதமர் விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கம் செய்துவிட்டு முன்னாள் ஜனாதிபதியைப் பிரதமராக்கியது எனக்குப் பலமான  முதுகெலும்பிருக்கிறது என்பதைக் காட்டவே’ என்று இன்று மகரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது தெரிவித்தார்.

“தற்போதய தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லை எனவும் தற்போதய அரசு ‘வீட்டுக்குப் போகவேண்டும்’ எனவும் கார்டினல் அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். நாங்கள் வீட்டுக்குப் போகத்தான் செய்வோம். இங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்க வரவில்லை” என மிகவும் கோபம் தொனிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்தார்.