எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் பிரித்தானியா கொண்டுவரலாம்!


எதிர்வரும் மார்ச் மாதம் (2021) கூடவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றைக் கொண்டுவர பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என நேற்று இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் குழுத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல அரசாங்கத்துக்கு ச் சுட்டிக் காட்டினார்.

2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை பிரேரித்த தீர்மானம் 30/1 இலிருந்து ராஜபக்ச நிர்வாகம் தன்னிச்சையாக விலகியிருந்தது.

பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக புதனன்று சபையில் எச்சரித்ததைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தனா ” சென்ற வருடம் நவம்பரிலும், இந்த ஆண்டு ஆகஸ்ட்டிலும் மக்கள் கொடுத்த ஆணைக்கு இணங்க இலங்கை ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பேணும்” எனப் பதிலளித்திருக்கிறார்.

அக்டோபர் 13, 2020 இல் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் சபைத் தேர்தலில் பிரித்தானியா உள்ளிட்ட 15 நாடுகளை ஐ.நா.பொதுச்சபை தெரிவுசெய்திருந்தது. இவர்களுக்கான 3 வருடத் தவணை ஜனவரி 2021 இல் ஆரம்பிக்கும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 47 அங்கத்துவ நாடுகள் இருகின்றன.