India

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணி வெற்றி பெறும் – கருத்துக் கணிப்பு

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. அணிக்கு அமோக வெற்றி - கருத்துக்கணிப்பு

திங்களன்று ‘Times Now-C” இனால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணி 158 ஆசனங்களையும், அ.இ.அ.தி.மு.க. அணி 65 ஆசனங்களையும் பெறுமென எதிர்வுகூறபடுகின்றது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் 5 ஆசனங்களையும், தினகரனது அ.ம.மு.க. உள்ளிட்ட இதர கட்சிகள் தலா 3 ஆசனங்கள் வீதம் பெறுமென இக்கணிப்பு தெரிவிக்கிறது. வாக்கு விகிதாசாரம் முறையே: தி.மு.க. அணி: 43.2%, அ.தி.மு.க. அணி: 32.1%, ம.நீ.மை.: 7.1%, அ.ம.மு.க.: 6.5%, இதர கட்சிகள்: 11.1% என இக் கணிப்பு எதிர்வு கூறுகிறது.

கடந்த தேர்தலில் (2016), அ.தி.மு.க. கூட்டணி 134 ஆசனங்களையும் (40.77%) தி.மு.க. கூட்டணி 98 ஆசனங்களயும் (31.64% ) பெற்றிருந்தன.

ஏப்ரல் 6 நடைபெறவுள்ள தேர்தலில், தி.மு.க. அணியிலுள்ள இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியான காங்கிரசுக்கு 25 ஆசனங்களும், அ.தி.மு.க. அணியிலுள்ள இரண்டாவது பெரிய கட்சியான பா.ம.க. விற்கு 23 ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு பெரிய அணிகளும் மேலும் சிறிய கட்சிகளையும் இணைத்துக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது உறுதிசெய்யப்பட்ட பங்காளிக் கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகளை வழங்குவது என்பதுபற்றியும் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.