Sri Lanka

எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியமைக்க த.தே.கூ. நிபந்தனையுடன் ஆதரவு – சுமந்திரன்

பிந்திய செய்தி: கீழே குறிப்பிட்ட செய்தியில் உண்மையில்லை எனத் த.தே.கூ. பாராளுமந்ற உறுப்பினர் திரு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக கொழும்பு கசெட் என்னும் செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், த.தே.கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளமான ‘புதிய சுதந்திரனில்’ இச் செய்தி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. – டிசம்பர் 24, 2019

வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சிக் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்கத் தேவையான 113 ஆசனங்களைப் பெறாதுபோனால் அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவிருக்கிரது என த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், பா.உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்ததாக பிரெஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள 13 ஆசனங்களை விட அதிகமான ஆசனங்களை இம்முறை தாம் வெல்லக்கூடிய சாத்தியக்கூறு உண்டென்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் மொத்தம் 225 ஆசனங்களுண்டு.

“கூட்டணிக்கு எமது ஆதரவைத் தருவதைத் தொடர்ந்து, 13 வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்காக நாம் செயற்படுவோம். தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் எமது பொறுப்பிலிருந்து நாம் ஒரு போதும் விலகிப் போய்விடப் போவதில்லை” என சுமந்திரன் தெரிவித்தார்.

இருப்பினும், பெரும்பான்மைச் சிங்கள வாக்குகளினால் அமோக வெற்றியைப் பெற்ற ஜனாதிபதி ராஜபக்ச தமிழ்ப் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை மக்களின் ஒப்புதலின்றி அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியாது, வலுவான அபிவிருத்தி ஒன்றின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியுமென அவர் தீர்க்கமாக நம்புகிறார்.

பெப்ரவரி 2020 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் / மே மாதமளவில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.