எதிர்க்கட்சிக் கூட்டணி அமைப்பது பற்றி அனைத்துக் கட்சி மாநாடு
இலங்கையில் மோசமாகி வரும் அரசியல் / பொருளாதார நிலைமையைச் சீர்படுத்தும் நோக்கத்தோடு பொது எதிரணியொன்றை உருவாக்கும் நோக்கில் நேற்று (17) எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் சந்தித்து உரையாடியுள்ளனர்.

நாரஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் ஜானகி ஓட்டலில் நடைபெற்ற இம் மாநாட்டை, ‘நீதியான சமூகத்திற்க்கான தேசிய இயக்கம் (National Movement for Just Peace) ஒழுங்குசெய்திருந்தது.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் சமாகி ஜன பலவேகய, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கடசி, அகில இலங்கை மக்கள் கட்சி உட்படப் பல கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தநர்.
நாட்டின் எதிர்கால அரசியற் போக்கை தீர்மானிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் பிரகாரம் செயற்படவேண்டுமெனப் பல சிவில் சமூக, மதத்தலைவர்கள் மற்றும் மக்களமைப்புகள் விரும்புவதாக இம் மாநாட்டை ஒழுங்குசெய்த அமைப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதே வேளை, ஆளும் கட்சிக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்று மூன்றாவது கூட்டணியை அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்ப்ட்ட 11 சிறு கட்சிகளின் தலைவர்களும் தற்போது மனம் மாறிப், பசில் ராஜபக்சவின் பொருளாதார மீள் கட்டுமான முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு, அரசுடன் தொடர்ந்தும் செயற்படப் போவதாக அறிவித்துள்ளனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்காலம் குறித்துத் தனது அங்கத்தவர்களுடன் கலந்து ஆராயவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.