எதிர்கால அரசியலை மாற்றியமைக்கப்போகும் செயற்கை விவேகம் (AI); சீனா, ரஷ்யா முன்னணியில் – பிரித்தானிய உளவுத்துறை MI6


‘பகிரங்கமாகும்’ பிரித்தானிய உளவுத்துறை ?

“அடுத்த 10 வருடங்களில் பூகோள அரசியலைப் புரட்டிப் போடப்போகும் செயற்கை விவேகத் தொழில்நுட்பப் பிரயோகத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அசுர வேகத்தில் முன்னேற்றம் கண்டுவருகின்றன” என பிரித்தானிய உளவுத்துறையான MI6 இன் தலைவர் றிச்சார்ட் மூர் இன்று (30) தெரிவித்துள்ளார்.

ஒட்டுக்கேட்கும் கருவிகள்?

பிரித்தானிய உளவுத்துறைகளின் தலைவர்கள் பொதுவாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுவதோ ஊடகங்களைச் சந்திப்பதோ இல்லையெனினும், உலகம் எதிர்கொள்ளவிருக்கும் இப்பேராபத்துபற்றி மக்கள் அவதனமாகவிருக்கவேண்டுமெனபதால் பிரித்தானிய அரசு றிச்சர்ட் மூரின் இக் கருத்துக்களைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறது.

செயற்கை விவேகம் (artificial intelligence), குவாண்டம் கொம்பியூட்டிங் (quantum computing), செயற்கை உயிரியல் (synthetic biology) ஆகிய துறைகளில் கணனிகளின் செயற்திறன் அதிகரித்தமை காரணமாக பெருந்தொகையான தரவுகளைச் சேகரிக்க முடியும். சீனா, ரஷ்யா போன்ற சர்வாதிகார நாடுகளில் மக்களின் பிரத்தியேகங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களது உருவங்கள், அசைவுகள் முதல் அவர்கள் பற்றிய பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும் அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் சேகரிக்கப்படுகின்றன. இதனால் உலகம் முழுவதும் அவர்களது நடமாட்டங்களைக் கண்காணிக்க முடியும். இது உளவுத் துறைக்குப் பெரும் உதவியாக இருக்கும். அதிவேகமான கணனிகளின் உருவாக்கம் இதைச் சாத்தியமாக்குகிறது.

ஜனநாயக நாடுகளில் தனி மனித சுதந்திரம் இப்படியான தகவற் சேகரிப்புக்கு முட்டுக்கட்டை போடுகிறது . அதனால் ஜனநாயக நாடுகள் இன்னமும் ஆயிரம் வருடப் பழைமையான முறையில் மனிதர்களைக் கொண்டுதான் தமது உளவு விடயங்களைக் கையாளவேண்டியிருக்கிறது.

ராஜதந்திரியான றிச்சார்ட் மூர் 2020 இல் MI6 இன் தலைவராகப் பதவியேற்றார்.



கடந்த 40 வருடங்களில் சீனாவின் பொருளாதார, இராணுவ முன்னேற்றங்கள் பாரிய பாய்ச்சலைக் கண்டுள்ளது. 1991 இல் சோவியத் யூனியனின் உடைவிற்குப் பிறகு ரஷ்யாவும் இப் போட்டியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. செயற்கை உயிரியல், மரபணு மாற்றீடுகள் போன்ற பரிசோதனைகளில் சீனா பாரிய முன்னேற்றங்களைக் கண்டுவருகிறது என மேற்கின் உளவு நிறுவனங்கள் கூறுகின்றன.

தமது நடவடிக்கைகளை இரகசியமாக வைத்திருக்கும் பழமைவாதச் சிந்தனையைப் புறந்தள்ளிவிட்டு, இவ்விடயங்களில் முன்னேற்றங்கண்டுவரும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பிரித்தானிய உளவு நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வேண்டுமென மூர் தெரிவித்தார். “இரகசியத்தைக் காப்பதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டுபிடித்த புதிய நுட்பங்களை நாமும் திருப்பிச் செய்யவேண்டுமென்ற அவசியமில்லை. இனிமேலும் நாம் இரகசியமாக இருக்க முடியாது, வெளியே வரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.