ArticlesTechnology & Science

எதியோப்பிய விமான விபத்து | போயிங் விமானங்கள் பாதுகாப்பானவையா?

எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொருங்கியிருக்கிறது. பயணம் செய்த 157 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விமானத்தின் ரகம் போயிங் 737 MAX 8. புத்தம் புதியது. அக்டோபர் 29 2018 அன்று இந்தோனேசியாவின் லயன் எயர் விமானம் 189 பேருடன் ஜாவா கடலில் விழுந்து நொருங்கியது. எவருமே பிழைக்கவில்லை. அதுவும் புத்தம் புதிய 737 MAX 8 விமானம். அவ் விபத்தும் புறப்பட்டு அரை மணித்தியாலத்துக்குள் நடந்தது.

Photo Credit: mybroadband.co.za

வழக்கம் போல போயிங் விமானிகளையே குற்றஞ்சாட்டுகிறது. உதவி விமானி 200 மணித்தியாலங்கள் மட்டுமே ஓட்டப் பயிற்சி பெற்றவர் என்பதை விபத்து நடந்து சில நிமிடங்களில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் லயன் எயர் விபத்து நடைபெற்று நான்கு மாதங்கள் ஆகியும் விபத்தின் காரணம் பற்றி அறிக்கையை விடவில்லை. விமானங்களின் பாதுகாப்பு விவகாரங்களைக் கண்காணிக்கும் மத்திய வான்பறப்பு ஆணையம் (Federal Aviation Authority) விமானத் தயாரிப்பாளரின் ‘இயக்கக் கைநூலைக் (Operating Handbook)கவனமாகப் படியுங்கள் என்பதோடு அமுக்கிக் கொண்டார்கள். காரணம் போயிங் ஒரு அமெரிக்க நிறுவனம். அமெரிக்காவின் போராயுதங்களைன் பெரும் பங்கு இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. இந்தோனேசிய விபத்திற்குப் பிறகு பங்குச் சந்தையில் விலை வேகமாகச் சரிந்து விட்டது. தவறு நிறுவனத்தின் மேல் என்பது நிரூபிக்கப்பட்டால் காப்புறுதிக் கொடுப்பனவு பிரச்சினையாகிவிடப் போகிறது. விமானதின் புதிய கொள்வனவுகள் நிறுத்தப்படலாம்.

அமெரிக்க அரசும், ஒத்தூதும் ஊடகங்களும் இருக்கும் மட்டும் போயிங் மட்டுமல்ல எந்த நிறுவனமும் தப்பிப் பிழைக்கும். கனடாவில் SNC lavalin விவகாரம் போல.

இந்தோனேசியாவின் லயன் எயர் விபத்துக்குள்ளாகியபோது அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை போயிங் நிறுவனத்துக்கு ஒரு தகவல் அனுப்பியது. லயன் எயர் விமானத்தின் புலன் கருவியான (sensor) ‘ஆங்கிள் ஒப் அற்றாக்’ (AOA – Anglle of Attack) இலிருந்து தவறான உள்ளீடுகள் (inputs) கணனிக்கு வருகின்றன என்பதே அச் செய்தி. ஒரு விமானத்தின் அசையும் இறக்கைகளே அவ் விமானம் என்ன கோணத்தில் வான் பரப்புக்குள் நுழைவது என்பதைத் தீர்மானிக்கின்றன. அவிவிறக்கைகளின் அசைவையும் தீமானிக்கப்படும் கோணங்களையும் இந்த AOA கருவிகள் விமானியின் முன்னிருக்கும் கணனிக்கு அறிவிக்கின்றன. இக் கோணங்களைக் கொண்டு கணனி விமானத்தின் மூக்கின் திசையையும் அதன் சார்பு வேகம் மற்றும் தேவையான உந்து விசையையும் கணித்துக் கொண்டு தான் விரும்பியபடி இயக்கத்தை முடுக்கி விடுகிறது. முற் காலத்தில் விமானிகள் இறக்கைகளின் அசைவுகளையும் மூக்கின் திசையயும், தேவையான உந்துவிசையையும் தீர்மானித்து தம் கைகளாலேயே அதற்குரிய பொத்தான்களையும் முறுக்கிகளையும் இயக்குவார்கள். இதற்கு அடுத்ததாக வந்த தயாரிப்புகளில், தானியங்கி முறையாக இயங்கவில்லை என்று விமானி கண்டால் உடனே கருவிகளைத் தன் சுய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். போயிங் 737 MAX 8 இன் உருவாக்கத்தின் போது அது ஒரு முற்றிலும் தானியங்கும் இயந்திரங்களைக் கொண்டதாக வடிவமைக்கப் பட்டது எனவும் கணனியின் அறிவிப்புக்கள் விமானியைக் குழப்பி விடுவதாகவும் விமானி விமானத்தை உடனடியாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குள் புலன் கருவியின் (sensor) தவறான உள்ளீட்டை வைத்துக் கொண்டு கணனியே விமானத்தின் மூக்கின் திசையையும் உந்துவிசையையும் தீர்மானித்து விடுகிறது என்றும் இது பற்றி போயிங் அறிந்திருந்தது என்றும் சொல்லப்படுகிறது. பாதுகாப்பைவிட அதனால் எந்தளவு எரிபொருளைச் சேமிக்கலாம் என்பதே போயிங்கின் நோக்கமாக இருந்தது எனவும் சொல்லப்பட்டது. தானியக்க ரீதியில் செயற்படும் இயந்திரங்கள் எரிபொருளையோ அல்லது மின் வலுவையோ சேமிப்பது என்பதிலும் உண்மை இருக்கிறது தான்.

லயன் எயர் விமான விபத்தின் பின்னர் போயிங் நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள போயிங் 737 MAX 8 பாவனையாளருக்கு ஒரு அறிக்கையை அனுப்பியது. “பறப்புக் கட்டுப்பாட்டுக் கணனியின் (flight control computer) தரும் குழப்பகரமான தகவல்களையும் அது எடுக்கும் தவறான நடவடிக்கைகளினால் விமானம் மிகவும் பாரதூரமான நிலம் நோக்கிய வீழ்ச்சியையும் தவிர்க்க இப்படியான தருணங்களைத் தவிர்ப்பதற்கான கற்கை முறைகளை அறிந்து வைத்திருங்கள் ( brush up on how to deal with confusing readings or erratic actions from the flight control computer, which could cause the plane to dive, hard)”. லயன் எயர் விமானம் கடலை நோக்கி விழுந்த வேகம் மணிக்கு 600 கி.மீ..

இதே போலத்தான் 2009 இல் எயர் பிரான்ஸ் பிளைட் 447 றியோ டி ஜனேறியோவிலிருந்து (பிரேசில்) பாரிஸ் புறப்ப்டும் போது அத்லாந்திக் சமுத்திரத்தில் விழுந்து நொருங்கியது. 228 பேர் மரணமானார்கள். எயர் பஸ் ஏ330 தயாரிப்பு விமானம். இறக்கைகளிலுள்ள புலன் கருவி பனியில் உறைந்து போனதால் விமானத்தின் தானியக்கம் குழப்பப்பட்டது.

தானியக்கம் விசித்திரமானது. நாம் வாழும் சூழலைச் சார்பாகக் கொண்டுதான் தேவையை முன் வைத்து நாம் கருவிகளைப் படைக்கிறோம். அதற்கான கணிப்புகளைச் செய்கிறோம். சமன்பாடுகளை உருவாக்குகிறோம். ஆய்வுகூடத்தில் எல்லாம் சரியாகவே தொழிற்படும். ஆனால் ‘நானும் இருக்கிறேன்’ என்று ஒரு சக்தி அவ்வப்போ தலையைக் காட்டும். பொறியியலாளர் இதற்கு  குழப்ப மாறி அல்லது அறியாத மாறி (disturbance variable or unknown variable) என்பார்கள். மத வாதிகள் இது தான் கடவுள் என்பார்கள்.

பல நாடுகள் போயிங் 737 MAX 8 ஐத் தரையிறக்கி விட்டார்கள். அமெரிக்க நட்புறவு நாடுகள், கனடா ஈறாக, எதுவுமே செய்யப் போவதில்லை. கார்ப்பறேட் இச்சைகள் அவர்களுக்கு முக்கியம், பறிக்கப்பட்ட உயிர்கள் அவர்களதாக இல்லாமலிருக்கும் மட்டும்.

737 MAX 8 ஒரு அதி வேகமாக விற்பனையாகும் விமானம். 4700 விமானங்களை வாங்குவதற்கான ஆர்டர் கையிருப்பில் இருக்கிறது. போயிங் நிறுவனத்தின் வரலாற்றில் அதி வெற்றிகரமான தயாரிப்பு இது.

தரை வாகனங்களில் பயணம் செய்வதை விட விமானப் பயணம் பாதுகாப்பானது என்று பண்டிதர்கள் சொல்கிறார்கள், நம்புவோம்.

 

One thought on “எதியோப்பிய விமான விபத்து | போயிங் விமானங்கள் பாதுகாப்பானவையா?

  • Airforce one, நம்மாளுகள – கனடாத் தலைவர்கள் பறக்கும் விமானம், மோடி வெளிநாடுகளுக்குப் போகுமு; விமானம் எல்லாத்தையும் 737 மாக்ஸ் ஆக மாத்தினால் என்ன?எரிபொருள் மிச்சமல்லவா?!

Comments are closed.