எதியோப்பிய பிரதமர் அபி அஹமெட்டுக்கு 2019-சமாதானத்துக்கான நோபல் பரிசு -

எதியோப்பிய பிரதமர் அபி அஹமெட்டுக்கு 2019-சமாதானத்துக்கான நோபல் பரிசு

ஆபிரிக்காவை வளம்படுத்தும் புதிய தலைமுறை
சிவதாசன்

2019 ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு எதியோப்பிய பிரதமர் அபி அஹமட் அலிக்குக் கிடைத்திருக்கிறது. அயல் நாடான எறித்திரியாவுடனான நீண்டநாட் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நெடுங்கால சமாதானத்தை நிலைநட்டியமைக்காக அவருக்கு அப் பரிசு வழங்கப்பட்டிருப்பது நியாயமானது.

எதியோப்பியாவும் எரித்திரியாவும் நீண்டகால எதிரிகள். 1998 முதல் 2000 வரையில் எல்லைச் சண்டை தொடர்ந்துகொண்டிருந்தது. 2018 இல் தான் உறவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

எதியோப்பியா

மேற்கு எதியோப்பியாவின் ஜிம்மா பிரதேசத்தில் முஸ்லிம் தந்தைக்கும் கிறிஸ்தவ தாய்க்கும் 1976 இல் பிறந்தவர் அபி. அப்போது ஆடிசியிலிருந்த மெங்கிஸ்து ஹேய்ல் மரியாமின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கிப் பின்னர் 1993 இல் இராணுவ உளவுப் பிரிவில் சேர்ந்து லெப்டினண்ட் கேணல் தரத்துக்கு உயர்ந்தவர்.

1994 ஆம் ஆண்டு றுவாண்டா இனப்படுகொலையின்போது ஐ.நா. பாதுகாப்புப் படையில் இணைந்து பணியாற்றியபின் 2010இல் ஒரோமோ மக்கள் ஜனநாயக அமைப்பில் இணைந்ததன் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்தார். 2018 இல், தனது 43 வயதில், பிரதமரானதும் பல சீர்திருத்தங்களை மிகவும் விரைவாகச் செய்து முடித்தார். அப்போதே எரித்திரியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாக உறுதியளித்தார்.

காலனித்துவ ஆதிக்க சக்திகள் ஆபிரிக்கக் கண்டத்தை விட்டு அகன்ற போது அவர்கள் தங்களுக்குத் தேவையான வளங்களைத் தொடர்ந்தும் தடையின்றிச் சுரண்டுவதற்காகத் தமக்கு இசைவான இராணுவத் தலைவர்களை ஆட்சியில் இருத்தியதோடல்லாமல் தொடர்ந்தும் அவர்களை ஆட்சியில் இருத்துவதற்கான உதவிகளையும் செய்து வந்தார்கள்.

1970 களில் ஆரம்பித்த சிம்பாப்வேயின் புரட்சிகர மாற்றம் காலனித்துவ பிடியைத் தளர்த்த ஆரம்பித்தது. தென்னாபிரிக்காவின் மண்டேலா போன்றவர்களின் வருகையின் பின்னர் மாற்றம் மக்கள் மனதில் நம்பிக்கையைத் தந்தது. ஆபிரிக்காவை ஆபிரிக்கர்களே நிர்வகிக்கலாம் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டில் ருவாண்டா படுகொலையைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இளைய தலைவரான போல் ககாமேயின் துணிச்சலான நடவடிக்கையின் மூலம் ஹூட்டு, டுட்சி குலங்களுக்கிடையேயான நீண்டகாலப் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமாதானம் அன்நாட்டில் இப்போது தழைத்தோங்குகிறது. எதியோப்பியாவின் அபி அஹமெட் போல இவரும் ஒரு முன்னாள் இராணுவ வீரர்.

Abiy Ahmed Ali, Abiy Ahmed Ali Ethiopia, Ethiopia Abiy Ahmed Ali, Nobel peace prize, Nobel prize 2019, 2019 Nobel Peace Prize
ஜூலை 15, 2018 எரித்திரியாவிற்கும் எதியோப்பியாவிற்குமிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. படத்தில் இடமிருந்து இரண்டாவதாக எரித்திரிய அதிபர் இசையாஸ் ஆப்வேர்கி, எதியோப்பிய பிரதமர் அபி அஹமெட் (படம்: AP)

2018 இல் அபி அஹமெட் பதவிக்கு வந்ததும் எரித்திரியாவின் அதிபர் இசையாஸ் ஆப்வேர்கியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து சமாதான ஒப்பந்தமொன்றிற்கான அடித்தளத்தை உருவாக்கினார். அரச கட்டுப்பாட்டிலிருந்த பொருளாதாரத்தை முதலில் விடுவித்தார். ஆட்சியைத் தன் இரும்புக் கரங்களில் வைத்திருந்த இராணுவ கட்டமைப்பில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். 100 மில்லியன் மக்களது தளைகள் சிறுகச் சிறுகக் கழன்றன.

நாட்டின் பிரதமராக வந்து 100 நாட்களில் அவசரகாலச் சட்டத்தை நீக்கினார். ஆயிரக் கணக்கான அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்புக் கொடுத்தார். ஊடகத் தணிக்கையை மீளப் பெற்றார். தடைசெய்யப்பட்ட எதிர்க்கட்சிகளைச் சட்டபூர்வமாக்கினார். ஊழல் பேர்வழிகளை வீட்டுக்கு அனுப்பினார். பெருமளவிலான பெண்கள் அரசியலிலும், சமூகத் தளங்களிலும் இடம்பெற ஊக்கம் கொடுத்தார். இவையெல்லாவற்றையும் ஆட்சியேற்று ஒரு வருடத்தில் செய்து முடிக்க நெஞ்சில் உறுதியும், னேர்மையிம் திறனும் வேண்டும். இந்த இளைய தலைமுறைத் தலவருக்கு அது இருக்கிறது.

எதியோப்பியா மட்டும் முன்னேறவில்லை ஆபிரிக்காவையும் இழுத்துச் செல்கிறது. நமது நாடுகளிலும் இப்படியான தலைவர்கள் தேவை.

பிரதமர் அபி அஹமெட்டுக்கு வாழ்த்துக்கள்!

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *