எண்ணை ஆயுதம் | தோற்கப்போகும் சூத்திரதாரிகள்
சிவதாசன்
எரிபொருள் விலையிறக்கம் வாகனச் சாரதிகளுக்கு மிக மகிழ்ச்சியான விடயம் தான். வைகாசி மாத வாக்கில் $1.40 மட்டில் விற்ற பெற்றோல் (ஒன்டாரியோவில்) இப்போது $1.00 டாலருக்கு வந்திருக்கிறது. வாகனங்களில் மட்டுமல்ல பாவனையாளரின் வயிறுகளிலும் எரிந்து கொண்டிருந்த இந்த எரிபொருள் இப்பொழுது அதன் எஜமானர்களையே குறி வைத்துத் திரும்பியிருக்கிறது.
ஒரு சாதாரண மனிதனின் கணக்கின்படி எண்ணை விலை இறக்கம் எண்ணை வியாபாரிகளைத் தவிர பாவனையாளருக்கு இலாபமாகத் தானே இருக்க வேண்டும்? விலை குறைப்பினால் சேமிக்கப்படும் பணம் மக்களின் கடன்களை அடைக்கவோ, சுற்றுலாப் போகவோ பயன்படலாம். பாரவூர்திகள் செலவைச் சுருக்கி அவை எடுத்து வரும் பண்டங்களின் விலைகளையும் குறைப்பதனால் நுகர்வோர் பயனடையலாம் தானே என வாதங்கள் வைக்கப்படலாம்.
இந்தக் கணிதம் எல்லாம் சமானியனுக்குத் தான். உலகத்தின் இயக்குனர்கள் பாவிக்கும் வாய்பாடு வித்தியாசமானது. அது அரசியல் மயப்பட்டது.
உலகத்தில் நடைபெற்ற பல போர்களை ‘எண்ணைப் போர்கள்’ என்று அழைப்பதுண்டு. 1990, 2003 காலப் பகுதியில் நடைபெற்ற இரண்டு வளைகுடாப் போர்களிலும் பாவிக்கப்பட்ட நாகாஸ்திரம் எண்ணை தான். இப்பொழுது மூன்றாவது தடவையாக இந்த அஸ்திரம் வெளியே தலை காட்டுகிறது. உலகத்தை இன்னுமொரு தடவை பொருளாதார இருளில் அமுக்கிவிட இயக்குனர்கள் தயாராகியிருக்கிறார்கள். வில்லன் இந்த தடவை மத்திய கிழக்கில் அல்லாது ரஷ்யாவில் இருப்பதுதான் வித்தியாசம்.
புட்டின் வருகைக்குப் பிறகு ரஷ்யா தனது வல்லரசு ஸ்தானத்தை மீண்டும் கையில் எடுப்பதற்கு முயற்சித்து வெற்றியும் கண்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய / அமெரிக்க தாக்குதலை முறியடித்தது. சிரியாவின் மீது ஒபாமா வரித்த சபதத்தை அவர் முகத்திலேயே உமிழ வைத்தது. உக்கிறேயினிலிருந்து அமெரிக்க, ஐரோப்பிய மிரட்டலுக்குப் பணியாது கிரிமியாவைப் பிடுங்கியது என்று பல தளங்களில் புட்டின் ரஷ்யாவின் வல்லரசுக் கொடியை நாட்டி எக்காளமிட்டிருக்கிறார்.
அமெரிக்காவிடம் கோர்பச்சேவ் பறிகொடுத்த சோவியத் குடியரசை புட்டின் மீளப்பறித்து விடப் போகிறார் என்கின்ற மேற்கின் பயத்தின் விளைவுதான் இந்த தடவை மூண்டிருக்கும் எண்ணைப் போர்.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு எண்ணை என்பது பல நூறு ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டதுதான். அது பெரும்பாலும் வளப்படுத்துவதும் வாட்டி எடுப்பதும் வளர்ந்துவரும் நாடுகளைத்தான். எண்ணை உற்பத்தி செய்யும் சில நாடுகளை விட பெரும்பாலான நாடுகள் எண்ணையைப் பாவனை செய்யும் நாடுகள் என்பதால் இயக்குனர்களின் தாளத்துக்கு ஆடாமல் இருக்க முடியாது. சமீப காலங்களில் வெனிசுவேலா, ரஷ்யா போன்ற நாடுகள் எண்ணை ஆதிக்கத்தை உடைத்தெறிய ஆரம்பித்ததன் விளைவே இன்றைய எண்ணைக்கான போர்.
முன்னாள் சாவேஸ் முதல் புட்டின் வரை வணங்காமுடிகளாக உருவாகியமைக்குக் காரணம் அவர்கள் எரிபொருள் உற்பத்தியில் முதன்மை கண்டமையே. அவர்களின் நிழலில் இருந்துதான் சீனா, ஈரான், பிரேசில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவும் கூடவே தினவெடுத்துக் கொண்டிருக்கின்றன. பனிப்போருக்கு முன்னதான ஒழுங்கொன்றிற்கு உலகம் திரும்புவதற்கான அறிகுறிகளை உலக இயக்குனர்கள் கண்டுகொண்டு விட்டார்கள். எண்ணைப் போர் ஆரம்பித்திருக்கிறது.
ஊக்கிறேயின் விவகாரத்தில் ரஷ்யாவோடு பகிரங்கமாக மோதிக்கொள்ள ஜெர்மனி தலைமையிலான ஐரோப்பா விரும்பவில்லை. காரணம் அவர்களது எரிபொருள் வாழ்வாதாரம் ரஷ்யா கையில் தானுள்ளது.
பலவிதமான பொருளாதாரத் தடைகளையும் மீறி ஈரானின் வளர்ச்சி அதன் எண்ணை உற்பத்தியால் மட்டுமல்லாது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட வாயு வளங்களினாலும் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. இது அமெரிக்காவை விட சவூதி அரேபியா, கட்டார், குவைத், ஐக்கிய அரபு ராச்சியம் போன்ற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தின. காரணம் மத்திய கிழக்கில் இப்போதுள்ள பலம் வாய்ந்த ஷியா-இஸ்லாமிய நாடு ஈரான் மட்டுமே. மத சார்பற்ற (ஓரளவு) சிரியாவைத் தாக்குவதன் மூலம் ஈரானையும் வம்புக்கிழுக்க எடுத்த முயற்சசியை புட்டின் ‘புட்டி’சாலித் தனமாக காப்பாற்றியதன் பின்னரான மேற்கின் அடுத்த வியூகம் தான் இந்த எண்ணைப் போர்.
உலகச் சந்தை, எப்போதுமே வழங்கல் – தேவை (supply and demand) என்ற தாரக மந்திர உச்சாடனத்தின் அதிர்வில்தான் இயங்குவதாக பொருளாதாரக் கடவுளர்கள் சொல்வார்கள். அதன் பிரகாரம் இப்போது மத்திய கிழக்கின் எண்ணை மடை திறந்துவிடப்பட்டிருக்கிறது. அதனால்- இந்த மந்திரத்தின் பிரகாரம்- வழங்கல் தேவைக்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் எண்ணை விலை பயங்கரமாக (42%) வீழ்ச்சி கண்டிருக்கிறது.
அதனாலென்ன நுகர்வோருக்கு லாபம் தானே என அப்பாவிகள் நாம் நினைப்போம். அதுதான் இல்லை.
குறைந்த விலையில் எண்ணையை விற்று வருவாயை ஈட்ட முடியாது ரஷ்யா, வெனிசுவேலா, ஈரான் போன்ற நாடுகளைப் பட்டினி போடுவதன் மூலம் அவர்களது பொருளாதார எலும்பை உடைப்பதற்காக உலக இயக்குனர்கள் போட்ட திட்டமே இது என்று செய்திகள் சொல்லுகின்றன. இதனால் இவர்களின் நிழல்களில் நின்று கொண்டு நெஞ்சுகளை நிமித்தும் நாடுகளையும் பணிய வைப்பதும் இப் பெரும் திட்டத்தில் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால்.. மேற்கு நாடுகளால் வைக்கப்பட்டிருக்கும் இப் பாரிய பொறிக் கிடங்கில் வீழப் போவது மேற்கு நாடுகள் தான் என்பதற்கான அறிகுறிகள் பல தெரிய ஆரம்பிக்கின்றன.
சமீபத்தில் கனடிய மத்திய வங்கி ஆளுநர் வீட்டு விலைகள் பத்து முதல் முப்பது வீதத்தால் வீக்கம் கண்டிருக்கிறது. இதைக் கட்டுப் படுத்த வட்டி வீதத்தை அதிகரிக்கும் தேவை உண்டாகலாம் என மறைமுகமாக அறிவித்திருந்தார். ஆனால் கனடிய பொருளாதாரம் எதிர் பார்த்த அளவுக்கு வளராததனால் இன்னும் ஓரிரு வருடங்களுக்கு வட்டி வீதத்தை அதிகரிக்கும் உத்தேசம் இல்லை என சில மாதங்களின் முன்னர் தான் கனடிய நிதியமைச்சர் கூறியிருந்தார். வீட்டு விலைகள் அப்போதும் வீக்கம் கண்டுதானிருந்தன.
சரி அது போகட்டும். சென்ற வாரம் எண்ணை விலை பாரிய சரிவைக் கண்டதும் பங்குச் சந்தையும் வீழ்ச்சி கண்டது. குறிப்பாக வங்கிகளின் பங்குச் சந்தை விலைகள் சரிவு கண்டன. ஏன்?
செயற்கையாக வீழ்த்தப்பட்ட எண்ணை விலையால் பாதிக்கப்படுவது ரஷ்யா, ஈரான், வெனிசுவேலா மட்டுமல்ல. கனடிய எண்ணை உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் தயவில் வாழ்ந்து வரும் இதர தொழில் நிறுவனங்களும் தான்.
அல்பேர்ட்டா மாகாணத்தில் பல நிறுவனங்கள் முன்னேற்பாடாக பெருந்தொகையான தொழிலாளர்களை பணிகளிலிருந்து நிறுத்தியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் வெவ்வேறு மாநிலங்களிருந்து குடிபெயர்ந்து புதிய வீடுகளையும் வாகனங்களையும் வாங்கி புதிய சுபீட்சத்தின் ஆரம்பப் படிகளில் நின்றவர்கள். வேலைகளை இழக்கும் இவர்களுக்குக் கடன் வழங்கிய வங்கிகள் காற்சட்டைகளில் மலம் கழிக்க ஆரம்பித்ததன் அறிகுறிதான் அவற்றின் பங்குச் சந்தை விலைச் சரிவு.
இப் பாதிப்பு வங்கிகளோடு நின்றுவிடாது. 2008 இல் நடைபெற்றது போல இதன் அதிர்வுகள் பொருளாதாரத்தில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏற்கெனவே பாரிய கடன்களை வாங்கி உற்பத்திக்குள் முடக்கிய பல நிறுவனங்கள் ஒன்றில் வங்குரோத்து செய்ய வேண்டும் அல்லது மேலும் கடனைப் பெற்று கொஞ்ச காலம் சமாளிக்க வேண்டும்.
பல நிறுவனங்கள் உற்பத்தியில் முதலிடுவதன் மூலம் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அவ் வேலையாளிகளிடமிருந்து வரியை அறவிடுவதன் மூலம் அரசு தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளலாம், மேலும் சேவைகளை வழங்கலாம் என்ற சித்தாந்தத்தில் தான் அரச உத்தரவாதத்தோடு மற்றும் வரிச் சலுகைகளோடு உற்பத்தி நிறுவனங்கள் மிகக் குறைந்த வட்டியில் முதலீட்டுக்கான கடனை வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்டன. இப்போது கடனை மீளச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலைமையில் கனடிய அரசினால் உடனடியாகச் செய்யப்படக் கூடியது பாதிக்கப்பட்ட நிருவனங்களுக்கு பண உதவி செய்வது. அடுத்ததாகச் செய்ய வேண்டியது மேலும் பல புதிய கடன்காரர்கள் உருவாகாது தடுப்பது. அவர்களுக்கு வங்கிகள் பொறுப்பற்ற முறையில் பணத்தை வழங்காது தடுப்பது. அதற்கான ஒரே வழி வட்டி வீதத்தை உயர்த்துவது.
வட்டி வீதம் உயர்த்தப்படும் பட்சத்தில் அடமானக் கடன்களைப் பெறுபவர்களும், ஏற்கெனவே குறைந்த வீதங்களில் பெற்றிருப்பவர்களும் பாதிக்கப் படலாம். இவர்கள் இப்போதே உகந்த நிதிக்கட்டுப்பாட்டுத் திட்டங்களை அமுல் செய்வது நல்லது.
எனவே எண்ணை விலைச் சரிவு தடுத்து நிறுத்தப்படாத பட்சத்தில் உலகம் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுவது தவிர்க்க முடியாதது.
இதற்குக் காரணமான அரசியல் சதுரங்கத்தில் மீண்டுமொரு தடவை தோற்கப் போவது அதன் சூத்திரதாரிகளே.
டிசம்பர் 13, 2014. இக்கட்டுரை ஈகுருவி பத்திரிகையில் பிரசுரமானது.