எண்ணைப் பனை (Oil Palm) செய்ய இலங்கையில் தடை
அமைச்சர் அறிவிப்பு
நவம்பர் 29, 2019
எண்ணைப் பனை விவசாயத்தை இலங்கையில் அனுமதிப்பதில்லை எனப் புதிய அமைச்சரவை அறிவித்திருக்கிறது.

எண்ணைப் பனை (oil palm) வளர்ப்பதால் அது நில நீரை உறிஞ்சி நிலத்தை வரட்சியாக்குகிறதெனவும் அது சூழலுக்குப் பெரும்பாதிப்பை விளைவிக்கிறதெனவும் சூழலியலாளர் தெரிவித்த ஆட்சேபனையைத் தொடர்ந்து அமைச்சரவை இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.
பெருந்தோட்டம், விவசாய ஏற்றுமதி அமைச்சர் ரமேஷ் பத்திரான இதை அறிவித்திருக்கிறார். முன்னைய அரசாங்கம் நவம்பர் 11 இல் இறுதியாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.
புதிய அரசு அம்முடிவை நடைமுறைப்படுத்துமென அமைச்சர் பத்திரான அறிவித்துள்ளார்.
எண்ணைப் பனை விவசாயத்தைத் தடை செய்யும்படிஅரசாங்கத்தைக் கோரி நாடெங்கும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். இவ் விவசாயத்தின் காரணமாக பல நீரோடைகள் வரண்டுபோய் நிலம் தரிசாகப் போகிறதென மக்கள் கூறிவருகிறார்கள்.
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, நைஜீரியா போன்ற பல நாடுகளின் முக்கிய பொருளாதாரமாக எண்ணைப் பனை விவசாயம் இருந்து வருகிறது. இதனால் அந்நாடுகளின் மழைக்காடுகள் விவசாயிகளால் தீவைத்து அழிக்கப்பட்டு அதில் வாழும் அருகிய உயிரினங்கள் நிரந்தரமாக அழிக்கப்படுகின்றன எனச் சூழலியலாளர் பல வருடங்களாகப் போராடி வருகின்றனர்.
இலங்கை இவ் விடயத்தில் சூழலைப் பேணுவதற்காகந பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துவருவது வரவேற்கத்தக்கது.