எட்வேர்ட் ஸ்நோடன் ரஸ்ய குடிமகனாகிறார்

அமெரிக்காவின் ‘ரகசியங்களைப்’ பகிரங்கப்படுத்தியவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ரஸ்யாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் எட்வார்ட் ஸ்நோடனுக்கு ரஸ்யா தற்போது குடியுரிமை வழங்கியுள்ளது. எதுவித விளம்பரமுமில்லாமல் குடியுரிமை வழங்கப்பட்ட 72 வெளிநாட்டவர்களில் ஸ்நோடனும் ஒருவர்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு இரகசியங்களைப் பகிரங்கப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவர் தேடப்பட்டதால் முதலில் ஹொங்க் கொங்கில் சிறிதுகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். அப்போது அவருக்கு இலங்கையர்கள் சிலர் அடைக்கலம் கொடுத்திருந்தார்கள். பின்னர் கியூபா வழியாக எக்குவாடோர் செல்வதற்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது அமெரிக்கா அவருடைய கடவுச்சீட்டைச் செல்லுபடியாகாது என அறிவித்தமையால் அவர் ரஸ்யாவில் தஞ்சம் கோரியிருந்தார். 2020 இல் அவர் ரஸ்ய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார். இப்போதுதான் அது கைகூடியிருக்கிறது.

2013 இல் அவர் ரஸ்யாவிற்குக் குடிபெயர்ந்திருந்தார். அப்போதிலிருந்து அவர் ரஸ்ய இராணுவத்துக்காக அமெரிக்காவுக்கு எதிராக உளவுப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அமெரிக்கக் குடிமக்கள் மீது பாரிய அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது என்பதற்கு ஆதாரமான பல்லாயிரக்கணக்கான ஆதாரக்கோர்வைகளை அவர் பத்திரிகையாளர்களிடத்தும், திரைப்படத் தயாரிப்பாளர்களிடத்தும் கொடுத்து அவற்றை உரிய முறையில் தொகுத்து வெளியிடும்படி கேட்டிருந்தார். இவற்றில் சிலவற்றை வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் போன்ற பிரபலமான பத்திரிகைகள் வெளியிட்டதும் அமெரிக்க அரசு ஸ்நோடனைக் கைதுசெய்ய உத்தரவிட்டது.

அதே வேளை, ஈபே (e-Bay) ஸ்தாபகர் பியெர் ஓமிட்யார் ஸ்நோடனது தகவல் கோப்புகள் அனைத்தையும் வாங்கித் தனது ஊடக நிறுவனம் மூலம் ‘தி இண்டெர்செப்ட்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்டார். ஆனாலும் அமெரிக்க அரசின் தலையீட்டினால் அவ்வூடகம் மூடப்பட்டுவிட்டது. இதனால் அமெரிக்கா தனது குடிமக்களைப் பற்றிச்சேகரித்திருந்த தகவல்கள் வெளிவராமலே போய்விட்டன. அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தின் பிரகாரம் குடிமக்கள் மீதான தேடுதல்கள், தகவல் சேகரிப்புகள் தடைசெய்யப்பட்ட ஒன்றெனினும் 2001 இரட்டைக்கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ‘பேற்றியட் அக்ட்’ சட்டத்தைப் பாவித்து பாதுகாப்பு ஸ்தாபனம் குடிமக்கள் மீது அளவுகடந்த கண்காணிப்புகளை மேற்கொண்டுவந்தது. மக்களுக்குத் தெரியாது நடைபெற்றுவந்த இக் கண்காணிப்புகள் பற்றி ஸ்நோடன் தரவுகளைச் சேகரித்து வந்தார். ஸ்நோடனின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏஜென்சியின் கண்காணிப்புகள் சட்டத்துக்குப் புறம்பானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தமையை அடுத்து அந் நடவடிக்கைகள் அமெரிக்க அரசினால் கைவிடப்பட்டுள்ளன.