எடுத்த காரியம் முடிந்தது, பொதுபல சேனா கலைக்கப்படும் – ஞானசார தேரர்
நவம்பர் 20, 2019

தானும் வேறு சிலரும், சிங்கள பெளத்தர்களை ஒன்று சேர்த்தபடியால் தான் கோதபாயா ராஜபக்ச ஜனாதிபதியாக முடிந்தது. அக் காரியம் கைகூடியதற்குப் பின்னர் பொதுபல சேனாவின் தேவை இனி இல்லை, அதைக் கலைத்துவிடப் போகிறேன் என அதன் தலைவர் கலகொடத்தெ ஞானசார தேரர் கூறியுள்ளார்.
“இப்பொழுது நாம் எங்கள் அடி மனதில் விரும்பிய தலைவரை இந்த சிங்கள பெளத்த தேசம் பெற்றுவிட்டது. எங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி அவர் எடுத்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான காலத்தையும் வெளியையும் அவருக்கு நாங்கள் கொடுக்க வேண்டும்” என அவர் நேற்றுக் கொழும்பில் ஊடகவியலாளர்களிடையே பேசும்போது தெரிவித்தார்.
“நாட்டிலுள்ள பெரும்பான்மை சிங்கள பெளத்தர்களை ஒன்றிணைக்கும் கோட்பாட்டுடன் 1998 இல் பொதுபல சேனா உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த பல அரசாங்கங்கள் பெரும்பான்மையினரை உதாசீனம் செய்துவிட்டன” என அவர் மேலும் தெரிவித்தார்.
நீதி மன்றத்தை அவமத்தித்ததற்காகச் சிறையிலிருந்த ஞானசேரரை முன்னாள் ஜானாதிபதி மன்னித்து விடுதலை செய்திருந்தார். புதிய ஜனாதிபதி தன் பதவிப்பிரமாணத்தின் போது தனது வெற்றிக்காக நாட்டின் புத்த பிக்குகளுக்குத் தன் நன்றியைத் தெரிவித்திருந்தார். அதுவே தனது முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமெனெ ஞானசார தேரர் கூறுகிறார்.
“எமது அடுத்த நோக்கம் கிறிஸ்தவ அடிப்படைவாதம், முஸ்லிம் அடிப்படைவாதமென்ற பெயர்களில் பாராளுமன்றத்தில் தீவிரவாதத்தைப் பரப்புபவர்களைக் களைந்தெடுப்பதும், வெளிநாடுகளிலிருந்து அவர்களது அமைப்புகள் பெறும் பெருந்தொகையான பணத்தை நிறுத்துவதுமே. அதை நாம் சாதித்துவிட்டால் எமக்கு பொதுபல சேனா என்ற அமைப்புக்கான தேவை இராது, அதைக் கலைத்துவிட முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.