Technology & ScienceUS & Canada

எச்சரிக்கை! – தொலைபேசிகள் மூலம் பரிமாறப்படும் பிரத்தியேக தகவல்களை ‘ஒட்டுக்கேட்பதற்கு’ ஒன்ராறியோ பொலிஸ் திட்டம்


ஒன்ராறியோ மாகாண பொலிஸ் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள Provincial Lawful Access Common Environment (PLACE) என்னும் திட்டத்தின் கீழ், ஒருவர் தனது தொலைபேசி மூலம் பிரத்தியேகமாக அனுப்பும் தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

ரொறோண்டோ, யோர்க், டர்ஹாம், ஓட்டாவா, ஹமில்ட்டன் ஆகிய நகரப் பொலிஸ் திணைக்களங்கள் சேர்ந்து ஆராய்ந்துவரும் இத் திட்டம் 2022 ல் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள நடைமுறையில் இப்படியான பிரத்தியேக தகவல்களை அறியவேண்டுமாகில் பொலிஸ் நீதிமன்றத்தில் ஆணை பெற்று (warrant) சம்பந்தப்பட்ட தகவல் பரிமாறும் நிறுவனத்திடமிருந்து (telecom service provider) அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். PLACE என்ற இப் புதிய திட்டம் நடைமுறைக்கு வருமானால் நமது பிரத்தியேக தகவல்களைப் பொலிஸ் திணைக்களங்கள் நீதிமன்ற ஆணை இல்லாமலேயே ஒட்டுக்கேட்டு அறிந்துகொள்ள முடியும்.

இது தொடர்பாக, தகவற் பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்கும் (hacking) தொழில்நுட்பப் பயிற்ச்சிகளை யோர்க் பிராந்திய பொலிஸ் திணைக்களம் தனது அதிகாரிகளுக்கு கற்பித்து வருகின்றது எனவும் தெரிய வருகிறது.



சென்ற வருடம் (2019), யோர்க், பீல் பிராந்திய பொலிஸ் திணைக்களங்கள், Clearview AI முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பாவித்து பொதுமக்களின் முகங்களை, அவர்களின் அனுமதியின்றி, ஸ்கான் செய்து வந்தன.

2017 இல் மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட சட்ட வரைவு C59, மத்திய புலனாய்வுத் துறையினர் எப்படியான தகவல்களை ஒட்டுக் கேட்கலாமென்ற வரைமுறைகளைக் கொடுத்திருந்தது. தற்போது மாகாண பொலிஸ் திணைக்களங்கள் ஒட்டுக் கேட்பதில் இறங்கியுள்ளமை எவ்வளவு தூரத்துக்குச் செல்லும் என்பது பற்றி அச்சம் கொள்வதாக கனடிய சிவில் லிபேர்ட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.