எச்சரிக்கை! | ஒன்ராறியோவாசிகள் தமது வாகன இலக்கத் தகடுகளைப் பதிவு செய்யவேண்டும்

பதியாதவர்களுக்கு $500 வரை அபராதம் விதிக்கப்படும்

வாகன உரிமையைக் கொண்ட ஒன்ராறியோவாசிகள் தமது இலக்கத் தகடுகளைக் காலா காலம் அரசாங்கத்தின் உரிய திணைக்களத்தில் பதிவுசெய்யவேண்டுமென்ற விதியில் இந்த வருட ஆரம்பத்தில் மாகாண அரசினால் மாற்றமொன்று கொண்டுவரப்பட்டிருந்தது. இதன்படி வருடா வருடம் அப்பதிவுகளுக்காக, வாகன உரிமையாளர்களினால் அரசாங்கத்துக்குச் செலுத்தப்படும் கட்டணமான $120 டாலர்களை அவர்கள் இனிமேல் செலுத்தத் தேவையில்லை. ஆனால் இவ்வறிவித்தலின்போது அரசாங்கம் இழைத்த தவறென்னவெனில் உரிமையாளர்கள் தொடர்ந்தும் தமது வாகன இலக்கத்தகடுகளில் ஒட்டப்பட்டும் அடையாளச் சுட்டிகளைப் புதுப்பிக்க வேண்டுமென்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. இதனால் பலர் தமது இலக்கத் தகடுகளைப் புதுப்பிக்கத் தவறியிருந்தனர்.

தற்போது ஒன்ராறியோ காவல்துறை அனுப்பிய எச்சரிக்கை அறிக்கையில் “இலக்கத் தகடுகளைப் புதுப்பிக்கத் தவறும் உரிமையாளர்கள் மிதமிஞ்சிய அபராதத்தைச் செலுத்தவேண்டி வருமென எச்சரித்துள்ளது. இந் நடவடிக்கையை ஒன்ராறியோ காவற்துறை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதெனவும் சில உரிமையாளர்கள் $500 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரியவருகிறது.

மார்ச் 2022 இற்கு முன்னர் ஒன்ராறியோ மாகாண அரசு ஒவ்வொரு வாகன உரிமையாளருக்கும் அவர்களது பிறந்த நாட்களுக்கு முன்னர் இலக்கத் தகடுகளைப் புதுப்பிக்கும்படி ஞாபகமூட்டும் கடிதங்களை அனுப்பி வந்தது. மார்ச் 2022 இற்குப் பின்னர் அரசாங்கம் இக் கடிதங்களை அனுப்புவதை நிறுத்திவிட்டது. இதனால் வாகன உரிமையாளர்கள் தமது பிறந்த நாள் வருவதற்கு முன்னர் ஞாபகத்தில் வைத்து இலக்கத் தகடுகளைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம். ஒன்ராறியோ அரசின் ஞாபகமூட்டல் அறிவித்தல்களை தொடர்ந்தும் டிஜிட்டல் வழிமூலம் பெற விரும்புபவர்கள் இவ்விணைப்பின் மூலம் பதிவுசெய்துகொள்ள முடியும்.

இதே வேளை தமது இலக்கத் தகடுகளை இணையவழி மூலம் புதுப்பித்துக்கொள்ள விரும்புபவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் செய்துகொள்ளலாம். ஏனையவர்கள் ஒன்ராறியோ அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிலையங்களான Service Ontario அலுவகங்களுக்குச் சென்றோ அல்லது தபால் மூலமோ புதுப்பித்துக் கொள்ளலாம்.