“எங்கட பெடியள்”
வடிவேலர் உலா 2026
கிருஷ்ணானந்தா
“அண்ணை….அண்ணை… கொஞ்சம் சிலோ பண்ணுங்க. இதுதான் என்ர வீடு” அரைக்காற்சட்டையுடன் வேகமாக இராணுவ மிடுக்கோடு நடந்து கொண்டிருந்த வடிவேலரை நான் இழுத்து நிற்பாட்டினேன். “வழக்கமா நொண்டி நொண்டி நடப்பியள். இண்டைக்கு என்ன நடந்தது?”
“எட சொறியடா தம்பி கிருசு. இந்த அரைக்காற்சட்டையைப் போட்டவுடன் நான்தான் அனுரவெண்டே நினைச்சிட்டன். நீயும் ஒரு ஆமி யூனிஃபோர்ம் இருந்தாப் போட்டுக்கொண்டு வெளிக்கிடு. எத்தினை இளம் பெண்டுகள் றோட்டில வரிசையில நிண்டு பொட்டு வைக்குங்கள் பார்”
“அது சரி உந்த கால்சட்டையை எங்க வாங்னினனிங்க?”
“ஓ அது அனுர பிராண்ட். ரவுணுக்குள்ள ஒரே ஒரு கடையிலதான் விக்கிறாங்கள். சனம் மூண்டு நாளா லைனில நிக்குதுகள் இதை வாங்கிறதுக்கு. அது மட்டுமில்லை அந்த கடைக்குப் பக்கத்தில ஒரு மனிசி சந்தனம், குங்குமம், பூமாலை, பட்டுச்சால்வை எல்லாத்தையும் ஒரு மேசையில வைச்சு ‘அனுர பிராண்ட்’ எண்டு விக்குது. அதுக்கு வேற கியூ”
நான் தலையை ஆட்டினேன். “அண்ணை இதைத்தானே எங்கட சனம் கடந்த 70 வருசங்களாகச் செய்துகொண்டு வருகுதுகள். சந்திரிகா வந்தா கொக்கோ கோலா உடைக்குதுகள், மகிந்த வந்தா பொட்டு வைச்சு ஆரத்தி எடுக்குதுகள், மைத்திரி வந்தா காலிலை விழுந்து கதறுதுகள், ரணில் வந்தா….”
“ஆனா நம்மட ஆள் சம்பந்தன் ஐயா வந்தால் மட்டும் காருக்குள்ளால இழுத்தெடுத்து தூஷணத்தால அபிஷேகம் செய்து அனுப்புதுகள். இதுகள் திருந்தாதுகள் கிருசு”
“இஞ்ச தான் படிக்காத சனம் இப்பிடிச் செய்யுதுகள் எண்டா புலம் பெயர் தேசங்களிலை இதை விட மோசமாம்”
” எட நீ “எங்கட பெடியளை”ப் பத்திச் சொல்லுறயோ? கேள்விப் பட்டனியோ எங்கட பொடியன் வாகீசனை இலண்டன் காரர் கூப்பிட்டு அவமரியாதைப் படுத்திப் போட்டாங்களாம்”
“வடிவேலர் அந்த விசயத்தில எல்லாப் பக்கமும் கொஞ்சம் வீக் எண்டு கேள்வி. கனடாவில மூண்டு லெவெல் அரசுகளிலையும் கிட்டத்தட்ட 6 தமிழர் இருக்கினம். லண்டன், அவுஸ்திரேலியா, நோர்வே, சுவிஸ் எண்டு இப்ப அது நல்லாய்ப் பரவிக்கொண்டு வருகுது. கனடாவில என்னெண்டா, வெளியில இருந்து வாற தமிழ்ப் பிரபலங்களை இந்த எம்.பி. , எம்.பி.பி., கவுன்ஸிலர் மார் கூட்டிக்கொண்டு போய் அவயளின்ர சபையள் நடக்காத நேரத்தில அரண்மனையளையும் ஆசனங்களையும் காட்டித் தம்பட்டமடிக்கிறது வழக்கம். அத்தோட பச்சை, நீல மட்டையளில பிரபலங்களின்ர பேரைப் போட்டு ஒரு சேர்ட்டிஃபிக்கட் குடுத்து படமெடுத்துக்கொள்கிறது ஒரு தமிழ்ச் சம்பிரதாயம். இதைப் பாத்த லண்டன் தமிழர் அமைப்பு ஒண்டு வாகீசனுக்கு அரண்மனையில ஒரு விசேட பூசைக்கு ஒழுங்கு செய்திருந்ததாம். இதுக்கெண்டு கொஞ்சப் பேருக்கு பார்வையாளராக விசேட அழைப்பும் அனுப்பப்பட்டதாம். பாதுகாப்பு காரணமாக அரணமனைக்குள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைத்தான் அனுமதிப்பாங்கள். சனம் உள்ளுக்க போய் மண்டபம் நிறஞ்சிட்டுது. தங்களை தாரை தப்பட்டைகளோட அமைப்பாளர் அழைப்பினம் எண்டு “எங்கட பெடியளும்” அவசரப்பட்டு உள்ளுக்க போகேல்ல. சனம் நிறஞ்சு நிகழ்ச்சி தொடங்க முன் வாகீசன் ஆட்கள் மண்டபத்துக்குள் நுழையப் போனபோது பாதுகாவலர் அவங்களை உள்ளுக்க விடேல்லை. அதனால அவங்களை அவமானப்படுத்தினதெண்டு சொல்லேலாது இஞ்ச அவமானப்பட்டது லண்டன் தமிழர் அமைப்பும் அவங்களுக்கு உதவி செய்த பாராளுமன்ற உறுப்பினரும் தான்.
“அதுதானே பார்த்தன். நான் நினைச்சுப் போட்டன் சிங்களவங்கள் ஏதாவது ஆர்ப்பாட்டம் செய்து “எங்கட பொடியளை” உள்ளுக்க விடாமாச் செய்து போட்டாங்களெண்டு”
“அண்ணை. சிங்களவங்கள் இப்ப சிவிலைஸ்ட் ஆகிட்டாங்கள். ஆர்ப்பாட்டம், முட்டையெறி, சபை குழப்பல் எல்லாம் எங்கட சனம் மட்டும் செய்யிற ஒரு விசயம் எண்டிறதை ஞாபகத்தில வைச்சுக்கொள்ளுங்கோ”
“நீ சொல்லிறதிலயும் விசயம் இருக்குத்தான் கிருசு. பார் இந்த அனுர கூட்டத்தை. தேர்தலுக்கு முதலில்ல அவங்கள் அள்ளி எறிஞ்ச வாக்குறுதியள நம்பி எங்கட சனம் அவங்களுக்கு யாழ்ப்பாணத்தில மூண்டு எம்.பி. மாரைக் குடுத்துது. ஆனா அவங்கள் குடுத்த வாக்குறுதியளில ஒண்டையாவது அவங்கள் நிறைவேற்றேல்ல. ஆட்சிக்கு வந்தவுடனே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவம் எண்டாங்கள். அச்சட்டத்தின்கீழ கைது செய்யப்பட்ட இன்னும் 10 பேர் சிறையில வாடிறாங்கள். அவங்களை விடுவிக்க அனுர அரசுக்கு மனமில்லை. காணியளை விடுவிப்பம் எண்டாங்கள். இப்ப பாத்தா மணலாற்றில புது சிங்களக் குடியேற்றம் செய்யப்போறாங்களாம். அங்கால திருகோணமலையில யூதர்களைக் கொண்டந்து குடியேத்தப் போறாங்களாம். ஆனா சனம் சிறிசுகளும், பெரிசுகளும், பெண்டுகளும் அனுரவுக்கு பொட்டு வைச்சு கட்டிக் கொஞ்சுதுகள். அந்தாளோ அரைக் கால்சட்டையோட யாழ்ப்பாணத்து மண்ணில வீர நடை போடுது”
“இப்ப விளங்குதெல்லோ வடிவேலர். பெரிய பாம்பைச் சின்னத் தடியால அடிச்சதின்ர விளைவை?”
“பாம்பு வீட்டுக்க வந்திட்டுது எண்டு சொல்லிற”
“வீட்டுக்க வந்தது மட்டுமில்லை. ‘இது என்ர வீடு’ எண்டிறதை அது மூஞ்சில அடிக்கிற மாதிரிச் சொல்லிப்போட்டுப் போகுது. அரைக் கால்ச்சட்டையோட நடந்த அந்த திமிர் நடையின்ர அர்த்தம் அதுதான். ‘எல்லாரும் இலங்கையர்கள்’ எண்டு சொல்லிக்கொண்டு வந்து இப்ப எல்லாரும் சிங்களவர்கள் எண்டதை இடித்துச் சொல்லிப் போட்டுப் போயிருக்கிறேர் அனுரா. நாங்க ஆரத்தி எடுத்துப் பொட்டும் வைத்து கொண்டாடுகிறம். அங்க மலாயன் கபேயில சிங்களப் பெடியங்கள் எச்சி இலை பொறுக்கிச் சம்பாதிக்கிறாங்கள். “எங்கட பொடியளோ” கூத்தாடிகளின் பனர்களுக்குப் பொங்கிப் பூசை வைச்சுப்போட்டு அரசியல்வாதிகள் இறக்குமதி செய்த கேரளக் கஞ்சாவுடன் முத்தவெளியில ‘முத்தித்’ திளைக்கிறாங்கள்”
“சூடாகிபோட்ட போல கிருசு. எல்லாம் இந்த அரைக்கால்ச்சட்டையால தானே.கொஞ்சம் பொறு” வடிவேலர் ஓடத்தயாரானார். பின்னால் ஒரு பெண்கள்கூட்டம் மாலைகளோடு அவரைத் துரத்திக்கொண்டு ஓடியது.
