Columnsகனடா மூர்த்தி

‘எங்கட கலைஞர்கள் யார்?’|கெஞ்சாதே…4

கனடா மூர்த்தி எழுதும் விமர்சனத் தொடர்..

“கனடியத் தமிழர் பேரவையின் தெருவிழாவிற்கு ஏராளமாக மக்கள் வந்து குவிவதற்கான காரணம் என்ன?”  Vox Pop  எடுப்பதுபோல, தெருவிழாவிற்கு வந்திருந்த நண்பர்கள் பலரிடமும் இக் கேள்வியைக் கேட்டேன்.

பலரும் பல காரணங்களைச் சொன்னார்கள். “கோடைக்காலம் முடியுது.. பிள்ளையளுக்கு ஸ்கூல் தொடங்கிறதுக்கு முதலில வர்ற கடைசிக் கொண்டாட்டம் இது.. அதாலதான் சனம் பெருவாரியாக வருகுது” என்றார் ஒருவர்.

நாவுக்குச் சுவையான கொத்து ரொட்டி

மற்றொருவர் “விழா நடக்கும் இடம்தான்…” என்றார் அறுதியாக. அதாவது, “மார்க்கம் பெயர்கிரவுண்ட் போன்ற இடங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கோ.. தெருவிழா நடக்கிற இந்த இடம் வித்தியாசமாயிருக்கு.. இந்த இடத்தின்ரை அகலத்தைவிட நீளம் பல மடங்கு அதிகமா இருக்குது. இந்த அந்தத்தில் இருந்து அந்த அந்தம் வரை சனத்தோட சனமா ஹாயாக நடக்கலாம்.” என்றும் விளக்கினார் அவர். 

“நல்லூரிலை திருவிழாக்காலத்தில நடக்கிறதுபோல இருக்கு..” என சிலாகித்தார் இன்னொருவர்.

தோழர் ஒருவர் “புறக்காரணிகளை விட அகக்காரணிதான் காரணம். அதாவது உளவியல் கிளர்ச்சிதான் மக்கள் திரளக் காரணம்” என்றார்.  

தெருவிழாவில் மக்களைக் குவிய வைக்கும் இன்னொன்று “உணவு..!” மற்றது: “சினிமாப்பாடல் மேடை நிகழ்ச்சி.” பெரும்பான்மையான மக்கள் தெருவிழாவிற்கு வரும்பொழுதே செவிக்கு உணவு தருவதோடு வயிற்றிற்கும் ஈயப்படும் என்ற நம்பிக்கையுடனேயே தெருவிழாவிற்கு வருந்து குவிகிறார்கள்.

குழந்தைகளுக்கான விளையாட்டுகள்

“வேறெங்கும் கிடைக்காத விசேடமான உணவு வகைகள் தெருவிழாவில் கிடைக்கின்றன. அதனால் அந்த – எங்கும் கிடைக்காத – உணவு வகைகளுக்காக மக்கள் வந்து குவிகிறார்கள்!” என்று நாம் நினைத்துவிடக் கூடாது. தெருவிழாவில் கிட்டும் உணவு வகைகள் வித்தியாசமான புதிய பாணி உணவு வகைகள் அல்ல!! நமக்கு என்றும் கிடைக்கும் எங்கும் கிடைக்கும் அதே கொத்துரொட்டி – அதே சூடு; அதே ஐஸ் கிரீம் – அதே சுவை; அதே சர்பத் – அதே இனிப்பு; “Exclusively for our Street Fest..” என பிரத்தியேகமான எந்தவித ஸ்பெசல் ஐட்டங்களும் இல்லைத்தான். அப்படியிருந்தும் உணவு அங்காடிகளில் கூட்டம் அலை மோதியது. 

“உணவு அல்ல.. இங்கு நமக்கு வருகின்ற தனித்துவமான களியாட்ட உணர்வு இருக்கிறதே.. அதுதான்… அந்த உணர்வுதான் சாதாரணமாக நமக்குக் கிடைக்கும் உணவுகளின் சுவையையே இந்தத் தெருவிழாவின்போது பலமடங்காக்கித் தந்துவிடுகிறது.” என்றார் இன்னொரு பத்திரிகை நண்பர். (உளவியல் கிளர்ச்சி.)

அப்போ பிரத்தியேகமாக காட்டக்கூடிய உணவு இல்லையா? இருந்தது! எப்போதும் கிட்டாத, கனடாவில் மிக அரிதாகக் கிடைக்கும் நுங்கு போன்ற பொருட்கள்கூட இருந்தன. தெருவிழாவிற்குப் போனால் இலங்கையில் நாம் உண்ட பல வகை பழங்களும் கிடைக்கும் என்பதும் மக்களை கவர்ந்திழுக்கும் இன்னொரு காரணி! 

ஆனால் நுங்கு போன்ற விசேட உணவு வகைகளுக்கு ரசிகர் கூட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் இருக்கிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. என்னதான் “அரிது… அரிது…” என்று நாம் புகழ்ந்து சொன்னாலும், நுங்கின் சுவையானது, அந்தத் சுவையை ஏற்கனவே தெரிந்தவர்களுக்குத்தான் ருசிக்கும். அதனால்தானோ என்னவோ தெருவிழாவிற்கு வரும் பலருக்கும் நுங்கு பெரிய விடயம் அல்ல.

ஜஸ்கிரீம் சர்பத் போன்ற பண்டங்களுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். 
இன்னும் விளக்கமாகச் சொன்னால், நுங்கு போன்ற பண்டங்கள் ‘எங்கட கலைஞர்கள்’ மாதிரி.. ஐஸ்கிரீம், சர்பத் போன்ற பண்டங்கள் ‘இறக்குமதிக் கலைஞர்கள்’ மாதிரி. தெருவிழாவில் மக்களைக் கவர்வது ‘சர்பத்தா’ ‘நுங்கா’ என்று ஒரு பட்டிமன்றம் வைத்துப் பாருங்கள். சர்பத் இலகுவில் வெற்றியடைந்துவிடும். காரணம்? வெகுஜன ஆதரவு சர்பத்திற்கு அதிகமாக இருப்பதுதான்! இறக்குமதிக் கலை அது..! அப்படித்தான் அதற்கு ஆதரவு இருக்கும்.

உணவு வகைகளை அடுத்து தெருவிழாவில் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற விடயம் என்ன தெரியும்தானே.. மாலையில் ஆரம்பித்து நள்ளிரவுவரை தொடரும் ‘சினிமாப்பாடல் மேடை நிகழ்ச்சி’தான் அது. இதில்கூட ‘நுங்கு’ ‘சர்பத்’ பிரச்சினை அதாவது ‘எங்கட கலைஞர்கள்’ ‘இறக்குமதிக் கலைஞர்கள்’ பிரச்சனை இருக்கிறது. பொது ஜனத்தின் ஆதரவு எவர் பக்கம் இருக்கிறது? எங்கட கலைஞர்களுக்கா? இறக்குமதிக் கலைஞர்களுக்கா? பதில் தெரிந்ததுதானே.

இந்த நேரத்தில் வேறொன்று நினைப்பிற்கு வருகிறது. கடந்த வருடம், 2018 தெருவிழா முடிந்ததும் இந்த சினிமாப்பாடல் மேடை நிகழ்ச்சியை முன்வைத்து ஒரு பரப்பரப்பான சர்ச்சை இங்கு கிளம்பியதை மறந்து விட முடியுமா. “எங்கட கலைஞர்களுக்கு மேடை மறுக்கப்படுகிறது” என்று சில கனடிய சுதேசிகள் அப்போது போர்க் கொடி தூக்கியிருந்தார்கள். தெருவிழாவானது ‘எழுக தமிழ்’ ரேஞ்சுக்குப் போனதுபோலவே நினைத்துக் கொண்டு, தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பும் காரியங்களும் நடந்தன.

எனக்கும் மேடை தாங்கோ” என்று கேட்பதுவேறு ஆனால் “எங்கட கலைஞர்களுக்கு மேடை தரவேணும்” என்ற மிரட்டலுடன் தொழிற்சங்க பாணி முழக்கம் இடுவது வேறு. முதலாவது சரி. இரண்டாவது கோமாளித்தனம்.

‘எங்கட கலைஞர்கள்’ போர்க்கொடியானது CTCக்கு எதிரான முகப்புத்தகப் பதிவுகளாகவும், வீடீயோக்களாகவும் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தன. CTCயை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம்கூட நடக்கும் என அறிவிக்கப்பட்டு நமக்கெல்லாம் கடும் திகில் ஊட்டப்பட்டது.

இதுபோதாதென்று வேறு சில ஆத்மாக்கள் தமது முகப்புத்தகங்களின் வழியாக “தெருவிழா நடத்தி தமிழர் பேரவை உறுப்பினர்கள் காசு அடிக்கிறாங்கள்… மது அருந்துகிறாங்கள்” என்று  கொச்சையாக எழுதி எழுதி நமக்கெல்லாம் சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தனர். ஹையோ… அந்த நேரத்தில் எங்கட கருத்துச் சுதந்திரம் பட்ட பாடு இருக்கிறதே.. ஹூம்.. இதற்கெல்லாம் ‘எங்கட கலைஞர்கள் இருக்க இறக்குமதிக் கலைஞர்கள் எதற்கு?’   சரி.. இனி இக் கட்டுரைக்கான விடயத்திற்கு வருவோம்.

‘எங்கட கலைஞர்கள்’ என்ற பதம் புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கலையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு சென்டிமென்டல் கூச்சல் என்பது எனது வாதம். 
“இல்லை” என்கிறீர்களா? அப்படியானால் “எங்கட கலைஞர்கள் என்பவர்கள் யார்? அதற்கு வரைவிலக்கணம் என்ன?” என்பது என் கேள்வி.
(1) ஈழத்தமிழர் அடியொற்றி வருபவர்கள் மட்டும்தான் எங்கட கலைஞர்களா? (2) கனடாவில் கனேடியராக வாழ்ந்துவரும் தமிழ் நாட்டவர்களின் அடியொற்றி வருபவர்கள் ‘எங்கட கலைஞர்கள்’ இல்லையா..? (3) இலங்கையில் பிறந்தவர்கள் மட்டும்தான் ‘எங்கட கலைஞர்களா’? (எம்.ஜி.ஆர் எங்கட கலைஞரா?)  குழப்பம்தான்.
இந்தக் குழப்பம் தீரமுன்னர் ‘இறக்குமதிக் கலைஞர்’ எனப்படுபவர்கள் யாவர்? அட… இந்தக் கேள்வியும் குழப்புகிறதே..
(4) மலேசியா சிங்கப்பூர் மொரிசியஸ் தமிழ்க் கலைஞர்களையும் நாம் ‘இறக்குமதிக் கலைஞர்கள்’ என சொல்லி தள்ளி வைத்துவிட வேண்டுமா? (5) ஐரோப்பாவில் இருக்கும் ஈழத்தமிழர் வழிவந்த கலைஞர்கள் ‘இறக்குமதிக் கலைஞர்களா’? அல்லது ‘எங்கட கலைஞர்களா’? அப்படியென்றால் (6) ‘இறக்குமதிக் கலைஞர்கள்’ என்று தடை செய்யப்படுபவர்கள் கையில் எந்த பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்? (7) இலங்கையில் பிறந்தவராயும் தமிழ்பாடல் பாடி எம்மை மகிழ்விப்பவர்களுமாக எதிர்காலத்தில் வரக்கூடிய சிங்களவர்கள் (முன்னாள் பைலா சக்கரவர்த்தி எம்.எஸ்.பெர்னான்டோ போன்ற வகையினர்) ‘எங்கட கலைஞர்களா’, ‘இறக்குமதிக் கலைஞர்களா’? கன்பியூசன்..

இந்தக் கேள்விகளை நாம்  பொங்கி எழுந்தவர்களிடம் கேட்டதாகவும் நினைவில்லை. அது குறித்த விளங்கங்களை அப்போதைய பொங்கு தமிழர்கள் தந்ததாகவும் தெரியவில்லை. 

“கனடியத் தமிழர் பேரவை இறக்குமதிக் கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி செய்கிறது” என்ற கூச்சலுடன் எழுந்த அந்தப் பொங்கல் CTCக்கு எதிரான ஒரு மிரட்டல் போலத்தான் பலராலும் பார்க்கப்பட்டது. இதைப்பற்றி ஒருமுறை விவாதிக்கும்போது, “இந்தியாவிலிருந்து ஒரு திரைப் பிரபலம் அதிக பணம் கொடுக்கப்பட்டு, அழைக்கப்பட்டு, இங்கு வருவார்களேயானால் அவர்களை இறக்குமதிக் கலைஞர்கள் என்று சொல்லலாம்” என்றார் ஒருவர். ஒகே.. அப்டியே வைத்துக் கொள்வோம்.. “எனக்குப் பணமே வேண்டாம். நான் இலவசமாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்” என்று ஒரு இந்திய திரைப்பிரபலம் முன்வந்தால் அவரையும் “நோ..நோ… யூ ஆர் எ இறக்குமதிக் கலைஞர்.. நீவிர் வரப்படாது.” என்று மறுத்துவிட வேண்டுமா?

 மீண்டும் சொல்கிறேன். ‘எங்கட கலைஞர்கள்’ என்ற பதமே ஒரு சென்டிமென்டல் கூச்சல்!

“எனக்கும் மேடை தாங்கோ” என்று கேட்பதுவேறு ஆனால் “எங்கட கலைஞர்களுக்கு மேடை தரவேணும்” என்ற மிரட்டலுடன் தொழிற்சங்க பாணி முழக்கம் இடுவது வேறு. முதலாவது சரி. இரண்டாவது கோமாளித்தனம்.

தொடரும்.