ஊழல் ஆட்சியாளர்களின் சட்டபூர்வமற்ற கட்டளைகளுக்குப் பணிய வேண்டாம் – சரத் பொன்சேகா
“ஊழல் ஆட்சியாளர்களின் கட்டளைக்குப் பணிந்து நாட்டில் நடைபெற்றுவரும் அமைதியான மக்கள் போராட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் நன்றாக யோசித்துச் செயற்படுங்கள்” என முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண மற்றும் கெனெரல் ஷவேந்திர சில்வா ஆகியோரைக் கேட்டுள்ளார்.
தனது முகநூல் பதிவின் மூலம் விடுத்த இக் கோரிக்கையில், ” பயங்கரவாதத்தை ஒழிக்க நீங்கள் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது நீங்கள் எனது கட்டளைகளையும், நெறிப்படுத்தல்களையும் ஏற்றுக்கொண்டு உங்கள் படையணிகளை நடத்தியிருந்தீர்கள். எனவே ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் மிகவும் அமைதியான முறையில் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் மிகவும் தீர்க்கமான முறையில் மீண்டும் மீண்டும் சிந்தித்துச் செயலாற்றுவீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்” என பாதுகாப்புச் செய்லாளர் மற்றும் இராணுவத் தளபதிகளை நோக்கித் தனது முகநூல் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
“சிவில் சமூகங்கள் மீது ஏவிவிடப்பட்ட அழுத்தங்களின் வெளிப்பாடாக அவர்கள் இப்போது ஊழல் நிறைந்ததும் மற்றும் செயற்திறனற்றதுமான இந்த ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக அமைதியான வன்முறையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த அப்பாவிப் பொதுமக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு ராஜபக்ச அரசு முயலுமானால் அது உலககம் முழுவதினாலும் கண்டிக்கப்படும். மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு போர் வீரன் இப்படியான அவமானமோ சங்கடமான நிலைக்குள்ளோ தள்ளப்படுவதைப் பார்க்க நான் விரும்பவில்லை” என ஃபொன்சேகா தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.