Spread the love

பிரியதர்சன் பக்கங்கள் 4

ஒரு காலத்தில் ஊரெல்லாம் சண்டியர்கள் இருந்தார்கள். அவர்கள் அநியாயமாகவும் சிலசமயம் தப்பித்தவறி நியாயமாகவும் நடந்தார்கள்.

பருத்தித்துறையில் சம்மந்தன் பெயர்போன சண்டியன். சம்மந்தனை கண்டதோ பேசியதோ கிடையாது. அவரின் அடிதடிகள் பற்றிய கதைகளை எனக்கு முன்னம் பிறந்தவர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

சண்டியன்  சம்மந்தனுக்கு வம்புக்கு ஆள் கிடைக்காத நேரத்தில் பொலிஸ்காரரை கண்டால் அவர்கள் தொப்பி பறிபோகும். இந்த கரைச்சலால் சம்மந்தன் உலாவுகிற தெருக்களில் பொலிஸ்காரர் தனியே நடமாடுவது கிடையாது. வயதான சம்மந்தன் இப்போது மொன்றியலில் இருப்பதாக கேள்வி.

ஊருக்குள் இயக்கங்கள் தலை தூக்க சண்டியர்கள் காணாமல் போனார்கள்.
இரண்டு தாக்குதல்களுக்கு இடையில் வருகிற இடைவெளியில் சண்டியர்கள் மின்கம்பங்களில் தொங்கினார்கள். இப்படியாக ஊருக்குள் சண்டியர்களும் கோழிக்கள்ளர்களும் இல்லாமல் போனார்கள். இவை  ஊருக்குள் சண்டியர்கள் இல்லாமல் போன பிற்பாடு நடந்த சம்பவங்கள் .ஆதித்தனை சின்ன வயதிலிருந்து தெரியும். திருநாவுக்கரசு மாஸ்டரின் சி. எம். ஈயில் ஒன்றாக படித்திருக்கிறேன். படிப்பில் பெரிய நாட்டம் கிடையாது. யாருக்கும் சின்ன பயமும் கிடையாது. இருந்தாலும் தப்பாமல் எல்லா வகுப்புக்கும் வருவான். கூடவே ஒரு கொப்பி மாத்திரம் இருக்கும்.
எல்லா பாடங்களையும் ஒரே கொப்பியில் எழுதுவான். விரும்பினால் படி பாணியில் பாடம் எடுக்கிறவர் குறிப்புகள் கொப்பிக்கும் வராது.

திருநாவுக்கரசு மாஸ்டருக்கு வெளியில் ஏதேனும் பிரச்சினை என்றால் வகுப்புக்குள் தெரியும். யாருக்கேனும் குத்துமதிப்பாக அடி விழும். குத்துமதிப்பாக விழுகிற அடி எப்போதும் ஆதித்தனையே போய் சேரும். அடுத்த கணமே அவனுக்கு அது மறந்து போகும். பழையபடி வம்பும் சேட்டையும் தொடரும். அதுதான் ஆதித்தன்.

பாடம் இல்லாத பொழுதுகளில் பந்தோடு முன்னால் இருக்கிற திக்கமுனைக்குள் இருப்போம். இரண்டாக பிரிந்து கால் பந்து விளையாடுவது வழமை. ஆதித்தன் பந்துக்கு உதைப்பதை விட பந்தோடு வருகிறவர் காலுக்கு உதைப்பது அதிகம். இந்த சிக்கலால் நான் எப்போதும் அந்த பக்கத்துக்கே விளையாடுவதுண்டு. விளையாட்டு சிலசமயம் சண்டையாக மாறும். ஆதித்தனுக்கு சரி பிழை கிடையாது. தன்பக்கம் விளையாடுபவர் சொல்வது சரி என்பதே எப்போதும்  அவன் நம்பிக்கை. அவர்களுக்காக கடைசி வரை சண்டை போடுவான்.

ஒன்பதாம் வகுப்போ அல்லது பத்தாம் வகுப்போ என்று சரியாக ஞாபகமில்லை. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஒரு நாள்  இயக்கத்துக்கு போனான். லாலா அவனை இந்தியாவுக்கு வள்ளத்தில் ஏற்றி அனுப்பினார். அதற்கு பிறகு நீண்ட நாட்கள் காணக் கிடைக்கவில்லை.
பயிற்சியையும் இயக்கத்தையும் பாதியில் விட்டு விட்டுத் திரிவதாக கண்டவர்கள் சொன்னார்கள்.பிறகு வந்த நாட்களில் அவனை சுற்றியிருக்கிற மனிதர்களும் அவர்கள் சஞ்சரிக்கிற உலகமும் வேறாக இருந்தது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று தடவைகள் வரை பிறகு  அவனைச்  சந்தித்திருபபேன்.

முதலாவதாக மீண்டும் சந்திக்கிறபோது இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தது. எங்களோடு படித்த சிலர் அப்போது மிக தீவிரமாக இயக்கத்தில் இயங்கினார்கள். அவர்களுக்கு உணவு கொடுக்கவோ உதவிசெய்யவோ பெரும்பாலன தீவிர ஆதரவாளர்கள்  பயந்தார்கள். தயங்கினார்கள். சித்தப்பாவையும் மற்ற இயக்க நண்பர்களையும்  சைக்கிலில் ஏற்றி இறக்குவதை ஒரு தொழில் போல ஆதித்தன்  செய்தான்.

இரண்டாவதாக சந்திக்க கிடைத்தபோது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. பருத்தித்துறையில் இருந்த பொலிஸ்காரர்கள் ஊருக்குள் ஆயுதம் இல்லாமல் திரிந்தார்கள். அவர்களின் நடமாட்டத்தை இல்லாமல் செய்ய இயக்கம் விரும்பியது. யுத்த நிறுத்தம் அவர்களின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது. பொதுமக்களின் பெயரில் ஊருக்குள் திரிகிற பொலிஸ்காரர்களின் மண்டைகளை ஆதித்தன்  உடைத்தான். ஏறத்தாள பொலிஸின் நடமாட்டம் ஊருக்குள்  முற்றாக இல்லாமல் போனது.மூன்றாவது முறை காண்கிறபோது  குட்டி சண்டியனாக மாறியிருந்தான். பருதித்துறையில் இருந்து கொழும்புக்கு போகிற எல்லா பஸ்களுக்கான பற்றுச்சீட்டுக்களையும் அவனிடமிருந்தே பெறவேண்டியிருந்தது . ஒவ்வொரு ரிக்கறிலிருந்தும் ஐந்து ரூபாய் அவன் கைக்கு வந்தது. கையில் காசும் அவனை சுற்றி நாலு ஐந்து பேரும் எப்போதும் இருந்தார்கள். அவர்கள் கண்கள் எப்போதும்  சிவந்து இருந்தன. கள்ளு வாடையும் கசிந்தது.

ஒரு நாள்  வெளிச்சம் மறைகிற பின்னேர வேளையொன்றில் சூசையின் பஜிரோ ரிக்கற் விற்கும் இடத்திற்கு வந்தது. சூசையோடு சித்தப்பாவும் இன்னும் நான்கு இளைஞர்களும் உள்ளே போனார்கள். ஆதித்தனையும் சகாக்களையும் கீழே போட்டு உதைத்தார்கள். அவர்களுடைய முகங்கள் வீங்கின. இரத்தம் கசிந்தது. இடுப்பில் இருந்த சூசையின்  கை துப்பாக்கி ஆதித்தன் தலையை தொட்டது . 24 மணித்தியாலத்தில் ஊரைவிட்டு போகும்படி சூசையின் கட்டளை சொன்னது . இனி ஊரில் கண்டால் சுடுவேன் என்று சொல்லி விட்டு அவர்கள் போனார்கள்.
அதற்கு பிறகு ஆதித்தனை ஊரில் கண்டதில்லை.

இவையெல்லாம் நடந்து நீணட காலம் கடந்தாயிற்று. அண்மையில் ஆதித்தன் இறந்து போனதாக சொன்னார்கள். எப்படி என்ன ஆனது என்று தெரியாது என்றும் சொன்னார்கள்.

மனித வாழ்கையும் அது இயங்குகிற சூத்திரமும் இப்போதும் கூட  சரியாக புரியாதிருக்கிறது.

தொடரும்…
Print Friendly, PDF & Email