‘ஊடக சுதந்திரத்தின் வேட்டைக்காரன்’ – உலக பட்டியலில் இணைகிறார் கோதாபய
எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு அறிவிப்பு
ஊடக சுதந்திரம் மோசமாக மறுக்கப்படும் உலகநாடுகளின் தலைவர்களில் அதி முக்கியமான 37 பேரின் பெயர்களைத் தெரிந்தெடுத்து பிரசுரித்திருக்கிறது எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு (Reporters Without Borders (RSF)).
‘ஊடக சுதந்திரத்தின் வேட்டைக்காரர்’ என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இக் கறுப்புப் பட்டியலை கடந்த இரண்டு தசாப்தங்களாக இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது. இவ்வவமானப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பலர் நீண்ட காலமாக இருப்பினும், இவ் வருடம் (2021) 17 பேர் இதில் புதிதாக இணைக்கப்படிருக்கிறார்கள். அவர்களில் இலங்கை ஜனாதிபதியும் ஒருவாகிறார். அத்தோடு இரு பெண்களும், ஒரு ஐரோப்பியரும் இவ் வருடப் பட்டியலில் இணைகிறார்கள்.

மேலேயுள்ள படத்தில் சிவப்பு வர்ணத்தில் காட்டப்பட்டுள்ள (இலங்கை உட்பட) 19 நாடுகள் ஊடக சுதந்திர மறுப்பு விடயத்தில் மோசமானவையெனவும்(bad) , கறுப்பு வர்ணத்தால் குறிக்கப்பட்டுள்ள 16 நாடுகள் மிகவும் மோசமானவை (very bad) எனவும் இவ்வமைப்பினால் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இப் பட்டியலிலுள்ள தலைவர்களில் மூன்றிலொரு பங்கினர் ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இத் தலைவர்களது படங்களைப் பார்க்க இத் தொடுப்பை அழுத்தவும்.
“இப் பட்டியலிலுள்ள நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வழிகளில் ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுகிறார்கள். சிலர் அசாதாரண திகிலூட்டும் நடைமுறைகளைப் பாவித்து ஊடகர்களை மெளனிக்க வைக்கிறார்கள். மற்றவர்கள் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டு கூர்மையாக்கப்பட்ட சட்டவரையறைகள் மூலம் ஊடகர்களை மெளனிக்க வைக்கிறார்கள். இவர்கள் புரியும் குற்றங்களுக்காக எப்படி அவர்களுக்குத் தண்டனைகளை வழங்குவது என்பதே எங்கள் முன்னுள்ள சவால். இவர்களது நடைமுறைகள் சாதாரணமானவை என்ற நிலைக்குப் போக நாம் விடக்கூடாது” என எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பின் செயலாளர் நாயகம் கிறிஸ்தோஃப் டெலுவா தெரிவித்துள்ளார்.
இப் பட்டியலில் இடம்பெறும் இரண்டு பெண்களில் முக்கியமானவர், வங்கத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் புதல்வியும் தற்போதைய வங்காள தேசத்தின் பிரதமருமான ஷேய்க் ஹசீனா. 2018 இல் இவரது அரசாங்கம் கொண்டுவந்த டிஜிட்டல் பாதுகாப்பு சட்டத்தைப் பாவித்து 70 ஊடகவியலாளர்களையும், வலைப்பதிவளர்களையும் சிறையிலடைத்துள்ளார். மற்றவர், ஹொங்கொங்கில் சீன அதிபர் சீ ஜிந்பிங்கின் இரும்புப் பிடியை நடைமுறைப்படுத்தும் முதன்மை நிர்வாகி கரீ லாம். ஹொங்கொங்கொலிருந்து வெளிவரும் ‘அப்பிள் டெய்லி’ எனப்படும் பத்திரிகையின் ஸ்தாபகரான ஜிம்மி லாய் என்பவரைசி சிறைக்குள் தள்ளியவர்.
இவ்வருடப் பட்டியலில் இடம்பெறும் பரிச்சயமான இன்னுமொரு முகம் இலங்கையின் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச. ஏற்கெனவே இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விரும்பியவாறு வளைத்தெடுத்து சிறுபான்மை ஊடகவியலாளரைக் கைது செய்வது முதல் அசாதாரண வழிகளில் ஊடகவியலாளரைக் கடத்தி அவர்கள் மனங்களில் அச்சத்தை உருவாக்குவது வரை பரந்தளவில் ஊடகவியலளரை மெளனிக்கச் செய்வது இவரது வழி. தற்போது ‘பொய்ச் செய்திகளைச்’ சமூக ஊடகங்களில் பரப்புவதற்கு எதிராகப் புதிய சட்டத்தையும் உருவாக்கித் தன் ஆயுதப் பெட்டியில் சேர்த்துள்ளார்.